×

வேலூர் கோட்டை அகழியில் வீசிய சம்பவம்: ஆந்திர வாலிபர் கொலையில் மேலும் ஒரு குற்றவாளி கைது; காட்பாடி ரயில் நிலையத்தில் சிக்கினார்

 

வேலூர், நவ.19: வேலூர் கோட்டை அகழியில் ஆந்திர வாலிபர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு குற்றவாளியை காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது போலீசார் கைது செய்தனர். வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா பெத்தசாரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி(35) என்பது தெரிய வந்தது. இவர் பழைய குற்றவாளியாகவும், போலீஸ் இன்பார்மராகவும் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஜீத், மாரிமுத்துவை போலீசில் காட்டிக்கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரஞ்சீவியை தந்திரமாக அவனது காதலியான ஜெயஸ்ரீ மூலம் அழைத்து வந்து வேலூர் கோட்டை அகழியில் கொலை செய்து வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் பரத்(எ)பரதன், அப்பு, ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மாரிமுத்துவும் அவரது கூட்டாளி பத்ரியும் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மிட்டாய்(எ)அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி வந்த 17 வயது சிறுவன் கடந்த 11ம் தேதி கைது செய்யப்பட்டான்.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான வேலூரை சேர்ந்த மிட்டாய்(எ) அஜீத்(24) என்பவனை காட்பாடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது நேற்று வடக்கு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வேலூர் கோட்டை அகழியில் வீசிய சம்பவம்: ஆந்திர வாலிபர் கொலையில் மேலும் ஒரு குற்றவாளி கைது; காட்பாடி ரயில் நிலையத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Vellore fort moat incident ,Gadbadi railway station ,Vellore ,Vellore fort ,Gadpadi railway station ,
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...