×

மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 625 பயனாளிகளுக்கு ரூ11 கோடி கடன் உதவி: கலெக்டர் தலைமையில் அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் மரூவூர் முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 70வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்கள் மற்றும் 625 பயனாளிகளுக்கு ரூ11 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஆர்.ராகுல் நாத் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்), எம்.பாபு (செய்யூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் விழாவில் பேசியதாவது:- கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்குடன் ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை இந்தியா முழுவதும் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கம் வணிக நோக்குடன் செயல்படாமல் ஏழ்மை வறுமை ஒழிப்பு பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. கூட்டுறவு இயக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்ற அமைப்பாகும். கூட்டுறவு துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றி ஏழை, எளிய மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள், விவசாய பெருமக்கள், சிறுவணிகர்கள், மகளிர் போன்ற அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தனது சிறப்பான சேவையினை கூட்டுறவுத்துறை வழங்கி வருகிறது.

இந்த கூட்டுறவு வார விழாவினை சிறப்பாக கொண்டாடும் விதமாக கூட்டுறவு பல்வேறு நலத்திட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 33 பயனாளிகளுக்கு பயிர்க் கடன், 351 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன், 68 பயனாளிகளுக்கு மீனவர் கடன், 5 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் கடன், 100 பயனாளிகளுக்கு மகளிர் சுய உதவி குழு கடன், 55 பயனாளிகளுக்கு சிறு வணிக கடன், 6 பயனாளிகளுக்கு வீடு அடமான கடன், 5 பயனாளிகளுக்கு வீடு வசதி கடன், 2 பயனாளிகளுக்கு மத்திய காலக்கடன் என மொத்தம் 625 பயனாளிகளுக்கு ரூ11 கோடி கடனுதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும், கூட்டுறவில் பெண்களின் பங்கு, கூட்டுறவில் கூட்டுறவு கல்வியின் அவசியம், கூட்டுறவு அமைப்புகளில் தற்போதைய வளர்ச்சி, கூட்டுறவு கணினி மயமாக்கத்தின் அவசியம், கூட்டுறவு நாட்டு உயர்வு குறித்த ஓவியம் போன்ற தலைப்புகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பரதநாட்டியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் விநாயகா நாட்டியாலயா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பரதநாட்டியத்தில் பங்கேற்ற 10 மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 34 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், 11 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 2 தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு பண்டகசாலை, வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, 611 கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு 2023-2024 வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 5,968 விவசாயிகளுக்கு ரூ47 கோடியே 17 லட்சம் கடன் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியின் மூலம் 2023ம் ஆண்டு 94,933 நபர்களுக்கு ரூ754 கோடியே 51 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த 5 சவரன் வரையிலான நகை கடனில் 14,52,000 ஏழை எளிய மக்கள் வாங்கிய ரூ5 ஆயிரத்து 13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய ரூ2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,109 மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய ரூ29 கோடியே 41 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில், 12,486 மகளிர் பயனடைந்தனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய ரூ12 ஆயிரத்து ரூ489 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 17,227 விவசாயிகள் வாங்கிய ரூ123 கோடியே 24 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2021-2022ம் ஆண்டு 1,077 நியாய விலைக் கடைகள் மூலம் 6,64,156 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ265 கோடியே 66 லட்சத்து 24 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி இரண்டு தவணைகளாக ரூ4000 உதவித்தொகையும், 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டு பயனடைந்தனர். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் மு.முருகன், இணைப்பதிவாளர் ம.தமிழ்ச்செல்வி, தாம்பரம் மேயர் கே.வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், சித்தாமூர் ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை, துணை பதிவாளர்கள் ஐஸ்வர்யா, சுடர்விழி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதல் மாவட்டம்
1904ம் ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திரூர் எனும் கிராமத்தில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் முதன் முதலில் தொடங்கப்பட்டது. எனவே இந்தியாவிலேயே முதன்முதலாக கூட்டுறவு வங்கிகள் தொடங்கிய மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டம் ஆகும் என்று இந்த விழாவில் பேசியபோது அமைச்சர் தா.மோ.அன்பரசன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ரூ74 கோடி நகைக்கடன் தள்ளுபடி
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ74 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் 15,584 ஏழை எளிய மக்கள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார்.

The post மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 625 பயனாளிகளுக்கு ரூ11 கோடி கடன் உதவி: கலெக்டர் தலைமையில் அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : All India Cooperative Week ,Chengalpattu ,Sothupakkam Maruvur Murugan Marriage Hall ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...