×

சீனாவுக்கு முக்கியத்துவம்: இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு அதிபர் கோரிக்கை


மாலே: மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை திரும்ப அழைத்து கொள்ளுமாறு ஒன்றிய அரசுக்கு மாலத்தீவு அதிபர் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு இருந்து வருகிறது. கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, அந்த நாட்டுக்கு இந்தியா பொருளாதார உதவி, ராணுவ உதவி உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. 2013ல் அப்துல்லா யாமீன் அதிபராக பதவியேற்ற பின்னர் அந்த நாடு சீனாவுடன் அதிக நெருக்கம் காண்பித்தது. இதனால் இந்தியா-மாலத்தீவு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.

2018ல் இப்ராகிம் சோலிஹ் அதிபரான பின் இந்தியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். இதன் பின்னர் 2020ல் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ படையை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கடந்த மாதம் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளரான முகமது முய்சு வெற்றி பெற்றார். வெற்றி பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘அந்நிய நாட்டு ராணுவ படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும்’’ என மறைமுகமாக இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அதிபர் பதவியேற்பு விழா மாலேயில் நேற்றுமுன்தினம் நடந்தது.

வழக்கமாக அதிபர் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் பிரதமர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். இது இந்தியாவின் முக்கியத்துவத்தை குறைப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் உள்ள ராணுவத்தை திரும்ப பெறுமாறு முகமது முய்சு நேரிடையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாலத்தீவு அதிபர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,’மாலத்தீவில் உள்ள ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் அதிபர் முய்சு முறைப்படி வலியுறுத்தி உள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

The post சீனாவுக்கு முக்கியத்துவம்: இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு அதிபர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : China ,Maldives ,President ,Indian Army ,Union Government ,President of ,Dinakaran ,
× RELATED சீனாவை போல் வளர வேண்டுமானால்...