×

கர்நாடக எதிர்க்கட்சி தலைவராக அசோக் நியமனத்தில் குமாரசாமி தலையீடு: பா.ஜவால் முடிவெடுக்க முடியவில்லை காங். கிண்டல்


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக அசோக் நியமனம் செய்யப்பட்டதில் குமாரசாமி தலையீடு இருப்பதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 6 மாதம் இழுபறிக்கு பிறகு பாஜ சார்பில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக ஆர்.அசோக் நியமனம் செய்துள்ளது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கர்நாடக மாநில அரசியல் வரலாற்றில் பொது தேர்தல் முடிந்து 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்த ஒரே கட்சி பாஜவாக தான் இருக்கும். அதுவும் சட்டப்பேரவை தேர்தலில் பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்ட ஆர்.அசோக், கனகபுரா தொகுதியில் மாநில துணைமுதல்வரும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாரிடம் மோதி டெபாசிட் இழந்தார்.

இப்படி மக்களால் புறக்கணிக்கப்பட்டவரை பாஜ எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்துள்ளது. மேலும் ஆர்.அசோக்கை எதிர்க்கட்சி தலைவராக பாஜ தலைமை சுயமாக தீர்மானிக்காமல், அவர்களின் கூட்டணி கட்சி தலைவரான எச்.டி.குமாரசாமியின் ஆலோசனை பெற்று தேர்வு செய்யும் பரிதாப நிலைக்கு பாஜ சென்றுள்ளதாகவும் கிண்டலாக பதிவிட்டுள்ளது. அரசியலில் அனுபவம் மிக்க தலைவர்களாக இருக்கும் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் முன் அசோக் ஒன்றும் செய்ய முடியாது’ என்றும் பதிவிட்டுள்ளது.

The post கர்நாடக எதிர்க்கட்சி தலைவராக அசோக் நியமனத்தில் குமாரசாமி தலையீடு: பா.ஜவால் முடிவெடுக்க முடியவில்லை காங். கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,Ashok ,Karnataka ,BJP ,Congress ,Bengaluru ,Karnataka Legislative Assembly ,
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...