×

கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர், அமைச்சர்கள் குறை கேட்கும் முகாம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் முதல்வரும், அமைச்சர்களும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கும் ‘நவகேரள சதஸ்’ என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. கேரளாவில் உம்மன் சாண்டி முதல்வராக இருந்தபோது ‘ஜன சம்பர்க்கம்’ என்ற பெயரில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறை கேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார். கேரளாவில் அனைத்து தொகுதிகளுக்கும் உம்மன் சாண்டி நேரில் சென்று 20 மணிநேரத்திற்கும் மேல் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஐநாவின் சிறந்த மக்கள் சேவைக்கான விருதும் உம்மன் சாண்டிக்கு கிடைத்தது.

இந்நிலையில் இதேபோல மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயனும் தீர்மானித்துள்ளார். உம்மன் சாண்டி நடத்தியதை விட வித்தியாசமாக தற்போது முதல்வர் மட்டுமல்லாமல் அவருடன் அனைத்து அமைச்சர்களும் பொதுமக்களை சந்திப்பதற்காக உடன் செல்கின்றனர். ‘நவ கேரள சதஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி இன்று மாலை கேரளாவின் வட மாவட்டமான காசர்கோட்டில் தொடங்குகிறது.
முதல்வர் பினராயி விஜயனுடன் 20 அமைச்சர்களும் சேர்ந்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்காக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்ய ₹1.25 கோடி மதிப்பில் ஒரு சொகுசு பஸ்சும் வாங்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சில் கழிப்பறை, அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்கான இடம் உள்பட பல அதிநவீன வசதிகள் உள்ளன. இதற்கிடையே விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் குறைகளை கேட்ட பின்னர், டிசம்பர் 23ம் தேதி திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு தொகுதியில் இந்த நவ கேரள சதஸ் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

The post கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து முதல்வர், அமைச்சர்கள் குறை கேட்கும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கேரளாவில் இதுவரை யாருக்கும்...