×

கேரளாவில் இதுவரை யாருக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்படாததால் நிபா வைரஸ் பீதி குறைகிறது.! சில பகுதிகளில் தொடரும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை யாருக்கும் நிபா காய்ச்சல் உறுதி செய்யப்படாததால் மக்களிடையே பீதி படிப்படியாக குறைந்து வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த சிறுவன் அஷ்மில் (14), கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபா வைரஸ் காய்ச்சலால் பாதித்து மரணமடைந்தான். இது பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இறந்த அஷ்மிலுடன் தொடர்பில் இருந்த 406 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 142 சுகாதார ஊழியர்கள் உள்பட 220 பேர் இந்த சிறுவனுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்ததால் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் 19 பேருக்கு நிபா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதுவரை நிபா உறுதி செய்யப்படவில்லை. சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 36 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 17 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதுவரை வேறு யாருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவவில்லை என்று தெரியவந்துள்ளதால் மலப்புரம் மாவட்டத்தில் நிபா ஏற்படுத்திய பீதி படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பாண்டிக்காடு மற்றும் ஆனக்கயம் பஞ்சாயத்துகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளாவில் நிபா பரவியபோது தமிழக எல்லையில் தமிழக சுகாதார துறை சார்பில் சோதனைகள் கடுமையாக்கப்பட்டன. இதற்கு கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தவறான நடவடிக்கையாகும் என்றும், இது தொடர்பாக தமிழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

The post கேரளாவில் இதுவரை யாருக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்படாததால் நிபா வைரஸ் பீதி குறைகிறது.! சில பகுதிகளில் தொடரும் கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Ashmil ,Pandikadu ,Malappuram, Kerala ,Dinakaran ,
× RELATED மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: சிபிஐ விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு