×

இந்த வார விசேஷங்கள்

சூர சம்ஹாரம்
18.11.2023 – சனி

நட்சத்திரங்களில் முருகனுக்கு உரிய நட்சத்திரங்கள் கார்த்திகையும் விசாகமும். திதிகளில் முருகனுக்கு உரிய திதி சஷ்டி திதி. சஷ்டி என்பது ஆறாவது திதி. ஆறு என்கின்ற எண் முருக வழிபாட்டில் மிக முக்கியமான எண். சிவனாரின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளால் அவதரித்தவன் முருகப்பெருமான். பெண்கள் அறுவர் வளர்த்தனர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் என்று அழைப்பர். முருகப் பெருமானின் திருமுகங்கள் ஆறு. அவனை ஆறுமுகன் என்று அழைப்பர். முருகனுக்கு உரிய மந்திரம் ஆறு எழுத்துக்களால் உருவானது
(சரவணபவ).

ஆறு என்பதற்கு வழி என்று ஒரு பொருள் உண்டு. முருகனை அடைய ஆற்றுப்படுத்தும் நூல் நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை. முருகனுக்குரிய திருத்தலங்கள் எண்ணற்றவை இருந்த போதிலும் மிக முக்கியமான தலங்கள் ஆறு. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை எனும் இத்தலங்களை ஆறுபடை வீடுகள் என்று அழைப்பர்.

எண் கணித சாத்திரத்தில் ஆறு என்கின்ற எண் சுக்கிரனுக்கு உரியது. சகல செல்வங்களுக்கும் அதிபதியான சுக்கிரனுடைய அருள் கிடைப்பதற்கு முருகனை வணங்க வேண்டும்.
ஜாதக பாவத்தில் (வீடுகள்) ஆறு என்கின்ற பாவம் சத்ருபாவம் எனப்படும். பகையைக் குறிக்கிறது. ஒரு ஜாதகனுக்கு பகை என்கின்ற ஆறாவது பாகம் வலிமை பெற்றிருக்கும் வரை அவனால் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த பகைகள் இரண்டு வகைப்படும். ஒன்று அகப்பகை. இன்னொன்று புறப்பகை. இரண்டு பகைகளையும் வெற்றி கொள்வது முருகனின் வேல்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.

அகப்பகை என்பது நம்முடைய ஐம்புலன்களாலும் ஏற்படுகின்ற பகை. பார்க்கக் கூடாததை பார்த்துக் கெட்டது, கேட்கக் கூடாததை கேட்டு கெட்டது, உண்ணக்கூடாததை உண்டு கெட்டது, தொடக்கூடாததை தொட்டுக் கெட்டது, முகரக்கூடாததை முகர்ந்து கெட்டது என்று ஐம்புலன் களால் நம்முடைய உடலும் உள்ளமும் சோர்வடைந்து நைந்து போகிறது. இந்தப் பகைகளை சாத்திரம் அசுரர்கள் என்கின்றது. பொதுவாக, கெட்ட எண்ணங்களையும், கெட்ட செயல்களையும் அசுரபாவம் என்று சொல்வார்கள். அவைகள் நம்மை தகாத வழியில் செலுத்தி ஆத்மநாசத்தை விளை விக்கும்.

இந்த அசுர பாவங்கள் வலிமை பெறுகின்ற பொழுது ஒரு மனிதன் செய்யக்கூடாத செயல்களை எல்லாம் செய்வான். அப்படிப்பட்ட அசுர பாவங்களின் குறியீடு தான் சூரபத்மன். இந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து உலகை காத்த நாள்தான் ஐப்பசி மாத கந்த சஷ்டி நாள். திருச்செந்தூர் என்னும் படை வீட்டில் இந்த சூரசம்காரப் பெருவிழா கோலாகலமாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்கள் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகின்றது. முருகப் பெருமான், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்ட தலமான திருச்செந்தூர் தலத்தில் மட்டும் சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் நடக்கும் முருகன் – தெய்வானை திருக்கல்யாணத்திற்கு பிறகே விரதம் நிறைவு செய்யப்படுகிறது. இந்த தலத்தில் கந்தசஷ்டி விழாவானது 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.

ஐந்து நாட்களும் விரதம் இருந்து ஆறாவது நாள் காலை நீராடி விளக்குகள் ஏற்றி வைத்து முருகப் பெருமானை, திருப்புகழ், கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி முதலிய தோத்திரங்களால் துதிக்க வேண்டும். மாலை திருக்கோயில்களில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு சூரசம்காரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும்.

கந்த சஷ்டி விரதம் தரும் பலன்கள் அபாரமானவை.

1. கந்தசஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்,
2. திருமண பாக்கியம் கைகூடி வரும்,
3. புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
4. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள்.
5. தீராத பிரச்னைகளை தீர்த்து வைக்கக் கூடியவர் முருகப் பெருமான்.
6. செவ்வாய்தோஷம் நீங்கி வீடு மனை வாங்கும் யோகம் சேரும்.

எனவே முருகப் பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபடுகின்றோம்.

பானு சப்தமி
19.11.2023 – ஞாயிறு

ஞாயிற்றுக் கிழமை சப்தமி திதி கூடி வந்தால் பானு சப்தமி என்று பெயர். திதிகளிலே சப்தமி திதி சுபத்துவம் நிறைந்த திதி என்பார்கள். இது சூரியனுக்கு உரிய திதி. ரதசப்தமிக்கு இணையான நாளாக இந்த பானு சப்தமி கருதப்படுகிறது. இந்த திதியில் சூரிய வழிபாடு செய்வது மிகச் சிறந்தது. இந்த நாளில் புனித நீராடி சூரியனை வழிபட்டால் கபிலா ஷஷ்டி யோகம் என்னும் 120 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்க்கும் அபூர்வ புண்ணிய காலத்துக்கு இணையான பலன்கிடைக்கும். சமுத்திரம் அல்லது ஆற்றங்கரையில் நீராடுவது விசேஷம். அவ்வாறு நீராட வாய்ப்பில்லாதவர்கள் தம் வீட்டில் குளிக்கும் நீரில் ஓம் என்று கைகளால் எழுதி கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

‘கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’.

ரத சப்தமிக்கு ஏழு எருக்கம் இலைகளை எடுத்துக் கொண்டு அதில் அட்சதை வைத்துக் கிழக்கு நோக்கி நின்று நீராடுவது வழக்கம். பானுசப்தமி நாளிலும் அதேபோன்று நீராடுவது விசேஷம். சூரியனுக்கு உரிய இன்றைய நாளில், சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரமும் இருப்பதால் மிகமிக சிறப்புடைய நாளாகத் திகழ்கிறது. ஒருவருடைய ஜாதகத்தை இயக்குவது சூரியனும் சந்திரனும்தான். அந்த அடிப்படையில் சூரியனுடைய ஞாயிற்றுக் கிழமையில் சந்திரனுடைய திருவோண நட்சத்திரம் வருவது மிகச் சிறந்தது. இன்று காலை சூரிய உதயத்திற்கு முன் குளித்து முடித்து விளக்கேற்றி வைத்து முற்றத்தில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு நடத்தலாம். திருவோண நாள் என்பதால் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

இன்று திருமலையப்பனுக்கு புஷ்பயாக மஹோத்சவம் நடைபெறுகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கும் புஷ்பயாக மஹோத்சவம் நடைபெறுகிறது.

கோஷ்டாஷ்டமி
20.11.2023 – திங்கள்

இன்றைய நாள் மூன்று சிறப்புகளை உள்ளடக்கியது.

1. கோ பூஜை செய்யக் கூடிய கோஷ்டாஷ்டமி
2. கார்த்திகை சோமவாரம்,
3. சிவாலயங்களில் சங்காபிஷேகம்

கோபாஷ்டமி அல்லது கோஷ்டாஷ்டமி என்று அழைக்கப்படும் திருநாள், பொதுவாக கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் வரக்கூடியது. கோஷ்டாஷ்டமி நாள் பசுக்களைக் கொண்டாடும் திருநாள். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் என உணவுப்பொருட்களை வழங்கி நமக்கு வாழ்வருளும் மாடுகளை போற்றிப் பாதுகாப்பதும், கோபாஷ்டமி தினத்தில் பசுக்களை குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். புல், கீரைகள், பச்சரிசி, வெல்லம் போன்றவற்றை உணவாக அளித்து நீர் கொடுத்து வணங்குவதும் சாலச் சிறந்த பலனை அளிக்கும்.

கார்த்திகை முதல் சோமவாரம்

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். பிறை சூடிய பெருமான் அல்லவா… சிவனுக்கு சந்திர மௌலீஸ்வரன், சந்திர சேகரன் என்று பெயர். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை விரதம் சோமவாரவிரதம். சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர். பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். நாமும் கடைபிடிப்போம். சிவாலயம் சென்று வணங்குவோம்.

வெள்ளி யானை வாகனத்தில் அறுபத்து மூவருடன் பவனி
22.11.2023 – புதன்

அருணாசலேஸ்வரர் அக்னித்தலமான அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் இவ்வாண்டு கார்த்திகை தீபப் பெருவிழா நவம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆரம்பித்து 26 – ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றது. 21.11.2023 செவ்வாய்க் கிழமை, வெள்ளி ரிஷப வாகன திருவீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை வெள்ளி ரத உலா நடைபெறும். விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான தேர் உற்சவம் நவம்பர் மாதம் 23 – ஆம் தேதி வியாழக்கிழமை காலை 7:30 மணிக்கு மேல் 8 மணிக்குள் வடம் பிடித்து துவங்குகின்றது. பஞ்ச மூர்த்திகள் மகாரதம் சீரும் சிறப்புமாக திருவண்ணாமலை தேர்வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளாக் காட்சியை தரிசிக்கலாம்.

கைசிக ஏகாதசி
23.11.2023 – வியாழன்

வருடத்திற்கு 24 ஏகாதசி விரதங்கள் வரும். சில வருடங்களில் அதிக ஏகாதசியாக 25 ஏகாதசி வரும். இந்த ஏகாதசிகளின் மிகவும் சிறப்பு பெற்ற இரண்டு ஏகாதசிகள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் கைசிக ஏகாதசியும் ஆகும். வராக புராணத்தில் உள்ள கைசிகப்புராணத்தை எல்லா வைணவ ஆலயங்களிலும் ஓதுவார்கள். திருக்குறுங்குடியில் கைசிகபுராணம் இரவு முழுக்க விடியவிடிய நாடகமாக நடத்தப்படும். பெரும்பாலான வைணவத் தலங்களில் கைசிக புராணத்தை ஓதுகின்ற சுவாமிகளுக்கு பிரம்மரதம் என்னும் மரியாதை சமர்ப்பிக்கப்படும்.

யாகத்தில் செய்த தவறால் பிரம்ம ராட்சசனாக மாறிய அந்தனனுக்கு ‘‘நம்பாடுவான்’’ என்னும் பாகவதன், தான் பாடிய கைசிகப் பண்ணின் பலத்தைக் கொடுத்து சாபவிமோசனம் தருவதாக வரலாறு. இந்த ஏகாதசி விரதமிருந்தால் எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம். முந்தைய ஜென்மங்களின் பாவ சுமையிலிருந்து விடுபடலாம். கைசிக ஏகாதசி விரதமிருப்போரை எமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள். கைசிக ஏகாதசி அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது சகல பாபங்களையும் போக்கும். நல்வாழ்வு அளிக்கும்.

துளசி விவாஹம்
24.11.2023 – வெள்ளி

இன்று இரண்டு சிறப்புக்கள். 1. துளசி விவாஹம், 2. மஹாபிரதோஷம். பொதுவாக சாதுர்மாஸ்ய முடிந்த பிறகு (ஜூலை நடுப்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை), துளசி விவாஹம், துவாதசி திதியில் ஷரத் பூர்ணிமாவுக்கு ( கார்த்திகை பௌர்ணமி) முன் செய்யப்படுகிறது. இந்த உற்சவம் வீடுகளிலும் கோயில்களிலும் நடத்தப்படுகிறது. மாலை வரை விரதம் அனுசரிக்கப்படுகிறது. வீட்டின் முற்றத்தைச் சுற்றி ஒரு மண்டபம் கட்டப்படுகிறது, அங்கு மாடத்தில் பூஜிக்கப்படும் துளசி செடிக்கு புடவை, காதணிகள், அணிகலன்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது.

பொட்டு, மூக்குத்தியுடன் கூடிய துளசி தேவி முகம் வரைந்து துளசியுடன் இணைக்கப்படுகிறது. மணமகனாக விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் படம் அல்லது சில நேரங்களில் பலராமன் அல்லது சாளகிராமம் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. விஷ்ணு, துளசி இருவருக்கும் பூக்களாலும், மாலைகளாலும் அலங்காரம் நடைபெறும். முஹூர்த்தம் முடித்து தீபாராதனை செய்து பிரசாத விநியோகம் நடைபெறும்.

துளசி விவாஹம் செய்வதிலும் கலந்து கொள்வதாலும் சகல சுபகாரிய தடைகளையும் நீங்கி, வெற்றிகரமான நல்வாழ்க்கை கிடைக்கும். இந்த உற்சவம் பெண்களுக்கு நீண்ட மண வாழ்க்கையையும், தம்பதிகள் ஒற்றுமையையும் உருவாக்கும். இன்றைய தினம் வெள்ளிக் கிழமையுடன் கூடிய பிரதோஷ நாளாகவும் இருப்பது சிறப்பு. மாலையில் சிவாலயங்களுக்குச் சென்று அங்கே நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம். கிரமமாக பிரதோஷ விரதம் இருப்பவர்கள் விரதமிருந்து முழுமையான நலன்களைப் பெறலாம்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Karthik ,Visakha ,Murugan ,
× RELATED ‘ஐ அம் வெயிட்டிங் ஃபார் மை டெத்’...