வெள்ளிக்கிழமைகளில், முருகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். ஆவணி வெள்ளி ரொம்பவே விசேஷம். எனவே, வெள்ளிக்கிழமை நாளில், மாலையில் முருக வழிபாடுகளைச் செய்யுங்கள். முன்னுக்கு வரச் செய்வார் வள்ளிமணாளன்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்தநாட்கள். தேவியை வழிபடுவதற்கு உரிய அருமையான நாட்கள். இந்த நாட்களில், அம்பாள் வழிபாடு செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், பெண்களின் துக்கங்களையெல்லாம் போக்கி அருள்வாள். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களை இனிதே நடத்திக் கொடுப்பாள் என்பார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
குறிப்பாக, செவ்வாய்க்கிழமை அன்று ராகுகாலம்… மாலை 3 முதல் 4.30 மணி வரை. இந்த சமயத்தில் அம்பிகைக்கு, முக்கியமாக துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது மகத்தான பலன்களையெல்லாம் வழங்கும். அதேபோல், வெள்ளிக்கிழமையன்று ராகுகாலம்… காலை 10.30 முதல் 12 மணி வரை.
வெள்ளிக்கிழமையின் ராகுகாலத்திலும் துர்கையை வழிபடுவதும் செவ்வரளி மலர்கள் சூட்டுவதும் எலுமிச்சை தீபமேற்றி பிரார்த்தனை செய்வதும் ரொம்பவே விசேஷமானவை. இன்னும் தெளிவுறச் சொல்லவேண்டும் என்றால், உக்கிர தெய்வங்களை ராகுகாலத்தில் வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சக்திக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சக்தியின் மைந்தனான சக்திவேலனுக்கு உரிய நாட்கள். செவ்வாய்க்கிழமையன்று முருகக் கடவுளை வணங்குவது செவ்வாய் தோஷத்தையெல்லாம் போக்கவல்லது என்கிறார்கள். முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், இதுவரை உள்ள பாவங்களெல்லாம் பறந்தோடும் என்றும் கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பதும் ஐதீகம்.
செவ்வாய்க்கிழமை போலவே வெள்ளிக்கிழமையிலும், வேலவனை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். கற்கண்டு நைவேத்தியம் செய்து, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். பட்ட துயரெல்லாம் பஞ்செனப் பறக்கும். வாழ்வில் இதுவரை இல்லாத, கிடைக்காத, தாமதப்பட்டு வந்த முன்னேற்றமெல்லாம் வரிசையாகக் கிடைக்கும்.
வீடு மனை யோகம் தருவதில் முதலிடம் எப்போதுமே முருகப்பெருமானுக்குதான். எனவே முருகனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். சொந்தவீட்டில் உங்களை அமரச் செய்து அழகு பார்ப்பார் அழகன் முருகன்!
The post வேலவன் இருக்க வேதனைகள் இல்லை; சொந்தவீட்டில் அமரச்செய்வான் அழகன் முருகன் appeared first on Dinakaran.