×

திருப்பூர் 24வது வார்டில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

 

திருப்பூர், நவ.18: ஆபத்தான நிலையில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி தொடக்க பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்பற பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பள்ளி கட்டிடம் தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. பள்ளி மேற்கூரைகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளி கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து சுவர் லேசாக இடிந்து விழுந்தது. மழை பெய்யும்போது மேற்கூரையில் தண்ணீர் தேங்கி ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் நரடாஜன் கூறுகையில்,“இப்பள்ளியில் சுற்றுப்பற பகுதிகளை சேர்ந்த ஏழை தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், பழுதடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. அடிக்கடி மேற்கூரை பெயர்ந்து விழுவதால் மாணவ, மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post திருப்பூர் 24வது வார்டில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur 24th Ward ,Tirupur ,Tirupur… ,24th ,Dinakaran ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்