×

வாழ்க்கை+வங்கி=வளம்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கையை வளமாக்கும் வங்கிகளின் அனைத்துச் சேவைகள் குறித்து தெள்ளத் தெளிவாகப் பார்த்தோம். வங்கிகளில் சேமிப்புக் கணக்கு முதல் அனைத்து வைப்புக் கணக்குகளை துவக்கி நடத்துவது குறித்தும், அவரவர் தேவைக்கேற்ப வங்கிகள் வழங்கும் கடனுதவித் திட்டங்கள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாகவும், அயலக வணிகம் மற்றும் பாதுகாப்புப் பெட்டக வசதி முதல் இணையவழிச் சேவை என்று மிகப்பெரிய பட்டியலாக இத்தொடரில் வங்கிப் பணிகளோடு ஒன்றி நம் வாழ்க்கையில் வளம் சேர்க்க அறிந்து மகிழ்ந்தோம். வங்கித் துறையின் சட்ட திட்டங்கள், வங்கி வாடிக்கையாளருக்கு கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை குறித்த விளக்கங்கள் நம் புரிதலை அகலமாக்கின.

வங்கியில் கணக்கைத் துவக்கி நடத்துவதும், கடனுதவி பெற்று வாழ்க்கையை வளப்படுத்துவதும் ஒவ்வொருவரின் அனுபவ வழித்தடங்களாக அமைந்துவிட்ட நாளில், அவரவர் கணக்கின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. பாஸ்வேர்டு என்னும் கடவுச்சொல்லை பிறர் தெரிந்து கொள்ளுமளவிற்குப் பயன்படுத்துவது, முன்னரே தொகையோ, பெறுபவர் பெயரோ எழுதாமல் காசோலைகளில் கையெழுத்திட்டு வழங்கல், பணத்தாள்களை பாதுகாப்புடன் கையாளாமல் இருப்பது போன்ற கவனமற்ற செயல்கள் வங்கி வாடிக்கையாளருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் வங்கி ஆவணங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவற்றில் கையெழுத்திடுவது மிகவும் தவறு. சிலர் ஆவணங்களில் கேட்கப்பட்ட விவரங்களை எழுதி நிரப்பாமல் கையொப்பமிட்டு வழங்குகின்றனர். அவ்வாறு வழங்குவது தவறு. வங்கியில் பயன்படுத்தும் அனைத்து ஆவணங்களை பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். சட்டரீதியான சில சொற்களை நமது வங்கித் தொடர்பிலும், பரிவர்த்தனைகளிலும் நாம் பயன்படுத்துகிறோம்.

அவற்றில் சிலவற்றைப் பற்றி மீண்டும் அறிவது நமது பாதுகாப்புமிக்க பயன்பாட்டை உறுதி செய்யும்.ஆவணம் எழுதப்பட்ட, விவரிக்கப்பட்ட கடிதம், புள்ளிவிவரம், குறியீடுகளை பதிவு செய்யும் நோக்கத்திற்காக மேற்கூறிய வழிகளில் ஏதாவது ஒன்றினால் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதால் உருவாக்கப்பட்டது என்றால் பொது உட்பிரிவுகள் சட்டத்தின்படி (1897) [The General Clauses Act 1897] ஆவணம் என்று கருதப்படும். ஒரு உரிமை அல்லது பொறுப்பினை பதிவு செய்ய முன்மொழியப்பட்டு அனைத்தையும் உள்ளடக்கிப் பதிவாகிறதே ஆவணம் என்று இந்திய முத்திரைச் சட்டம் (1899) வரையறுக்கிறது.

அதிகாரப் பத்திரம் ஒருவர் பரிவர்த்தனைகளுக்கு தனது சார்பாக சட்டரீதியாக செயல்பட மற்றொருவரை எழுத்து மூலம் அங்கீகரிக்கும் ஆவணமே அதிகாரப் பத்திரமாகும். அங்கீகாரம் வழங்குபவர் முதன்மையாளர் என்றும் பெறுபவர் முகவர் என்றும் அறியப்படுகிறார்.

பிரமாணப் பத்திரம் (Affidavit)

ஒன்றை உறுதிப்படுத்த ஒருவர் எழுத்துபூர்வமாக அதனை எழுதி வழங்கும் உறுதிமொழி வாக்குமூலம். இது சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. எழுதி வழங்கும் பொருளை/ செயலை / நடவடிக்கையை முழுவதும் அறிந்தவரே இத்தகைய பிரமாணப் பத்திரத்தை முத்திரைத் தாளில் எழுதி கையொப்பமிட்டு வழங்குகிறார்.

மைனர்

மைனர் என்பவர் சட்டம் குறிப்பிடும் வயதை அடையாத நபர். இந்திய வயதடைந்தோர் சட்டத்தின்படி (Indian Majority Act , 1985) பதினெட்டு வயது நிறைவடைந்தவுடன் ஒரு நபர் வயது முதிர்ந்தவராகக் கருதப்படுகிறார். நீதிமன்றம் மைனருக்காக ஒரு பாதுகாவலரை நியமித்தால், அந்த மைனர் அவரின் இருபத்தோராம் வயது நிறைவடையும்போது வயது முதிர்ந்தவராக கருதப்படுகிறார்.

படிப்பில்லாத நபர்

படிக்கவோ எழுதவோ தெரியாத நபர். அவர் சட்டப்பூர்வமாக தகுதியுடையவராக இருந்தால், அவர் சட்டம் அனுமதிக்கும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். படிக்கவோ எழுதவோ தெரியாத நபர் என்பதால், அனைத்து ஆவணங்களின் உள்ளடக்கங்கள் அவருக்குத் தெரிந்த மொழியில் விளக்கப்பட வேண்டும். கையொப்பத்திற்குப் பதிலாக, வங்கியின் ஆவணங்களில் கட்டை விரல் ரேகையினைப் பதிவிட்டாலே, கையொப்பம் வைத்ததாக ஏற்கப்படும். ரேகைப்பதிவை வைக்கும் போது அதே ஆவணத்தில் இருவர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். இருவரில் ஒருவர் வங்கியின் அனுமதிக்கப்பட்ட அலுவலராகவும் மற்றொருவர் வங்கிக்கு அறிமுகம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பார்வையற்றவர்

பார்வையற்றவர் வங்கி பரிவர்த்தனைகளுக்கு ஒப்பந்தம் செய்யத் தகுதியானவர். பார்வையற்றவர் கல்வியறிவு பெற்றவராக இருந்தாலும், படிப்பில்லாத நபருக்கு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான ஆவணங்களில் கையொப்பமிட என்ன நடைமுறையோ அதுவே இவருக்கும் பின்பற்றப்படுகிறது.

வாரிசுதாரர்

வங்கியில் கணக்கு அல்லது பாதுகாப்புப் பெட்டக வசதி வைத்திருக்கும் வாடிக்கையாளர் இறந்து விட்டால் அவருக்கு உரிமையானவற்றை, அவர் உயிருடன் இருக்கும் போது அவரால் நியமிக்கப்பட்ட வாரிசுதாரர், பெறுவதற்கு உரியவராகிறார். வங்கி நிர்ணயித்துள்ள ஆவணங்களை வாரிசுதாரர் வங்கியிடம் வழங்கிய பிறகு அவருக்கு உரியவற்றை வங்கி வழங்கும். அதனுடன் வங்கியின் கடமை நிறைவுறுகிறது. இறந்தவருக்கு சட்டப்பூர்வமான வாரிசுகள் இருந்தால் அவர்களுக்கு இறந்தவரின் வைப்புத்தொகை மற்றும் உரிமையாக விளங்கியவற்றை ஒப்படைப்பது வாரிசுதாரராக நியமிக்கப்பட்டவரின் கடமையாகும்.

இந்திய வயதடைந்தோர் சட்டத்தின்படி (Indian Majority Act , 1985) பதினெட்டு வயது நிறைவடையாத ஒரு மைனரை கணக்கு வைத்திருப்பவர் வாரிசுதாரராக நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கும் போது, சட்ட ரீதியாக வேறு ஒருவரை பாதுகாவலராக வாரிசுதாரர் விண்ணப்பத்தில் பதிய வேண்டும் வாடிக்கையாளரை அறிதல் (Know Your Customer – KYC)வங்கி தனது வாடிக்கையாளர்களை நன்கு அறிந்து கொள்ள வாடிக்கையாளரின் முகவரி, நிதி மற்றும் தொழில் நிலை ஆகிய விவரங்களை ஒரு குறிப்பிட்ட படிவத்தில் (KYC Form) எழுதிப் பெறுகிறது.

குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை வாடிக்கையாளரின் புகைப்படத்துடன் முகவரிச் சான்றையும் படிவத்துடன் பெற்று வாடிக்கையாளர் கணக்கில் வங்கி பதிவிடுகிறது. அதிக நிதிப்புழக்கம் உள்ள உயர் மதிப்புக் கணக்குகளை வங்கியில் இயக்கும்வாடிக்கையாளர் மேற்குறிப்பிட்ட படிவத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வங்கியிடம் வழங்க வேண்டும்.

டிமேட் கணக்கு

வங்கி வாடிக்கையாளர்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகள் அல்லது கடன் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதற்கு இக்கணக்கு பரிவர்த்தனைகளுக்கு உதவுகிறது. சேமிப்புக் கணக்கில் சேமித்த பணம் இருப்பது போல், டிமேட் கணக்கில் பங்குகள் சேமிக்கப்படும். தேவையானபோது பங்குகளின் விலை நிர்ணயத்தின்படி முதலீடு செய்துள்ளதை பணமாக இதனுடன் இணைத்துள்ள சேமிப்புக் கணக்கில் பெறலாம்.

மின்னணு விரைவு பிடிப்பு இயந்திரம் (EDC Machine)

இன்று அனைத்து வணிக வளாகங்களிலும் மின்னணு வரைவு பிடிப்பு இயந்திரங்களைக் காணலாம். வாடிக்கையாளர் பொருட்களை வாங்கிய பிறகு கடையில் வங்கியின் மூலம் நிறுவப்பட்டுள்ள மின்னணு வரைவு பிடிப்பு இயந்திரத்தில் டெபிட் அல்லது கிரெடிட் அட்டை மூலம் பொருட்களுக்கான தொகையைச் செலுத்தலாம். இது கணினி- இணைய இணைப்பின் மூலம் செயல்படுகிறது. அட்டைகளுக்குப் பதிலாக கைபேசி குறியீட்டெண்ணைப் பயன்படுத்தியும் பரிவர்த்தனை செய்யலாம்.

ஆதார வருவாயில் கழிக்கப்படும் வரி (Tax Deducted at Source)

வைப்பு அல்லது சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு வங்கியின் திட்டத்தின்படி வட்டி வழங்கப்படுகிறது. ஒரு வருடத்தில் குறிப்பிட்ட வரம்பு வரை இவ்வாறு பெறப்
படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. அதற்கு மேல் வாடிக்கையாளர் பெறும் வட்டியில் குறிப்பிட்ட சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தப்
படும் தொகையே ஆதார வருவாயில் கழிக்கப்படும் வரியாகும். வாடிக்கையாளர் தானே வருமான வரியை செலுத்துவதாக இருந்தால் வரி பிடித்தம் செய்யப்படத் தேவையில்லை என்னும் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட 15 H அல்லது 15G படிவத்தினை வங்கியிடம் உரிய காலத்திற்கு முன்னர் வழங்க வேண்டும்.

சிபில் மதிப்பெண்

கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் என்கிற சிபில் அமைப்பிற்கும், சி.ஆர்.ஐ.எஃப் ஹைமார்க் என்ற நிறுவனத்திற்கும் எக்ஸ்பீரியன் மற்றும் ஈக்விஃபிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் தனிநபர் கடன் பெறும் தகுதியை நிர்ணயம் செய்யும் சிபில் கடன் தகுதி மதிப்பெண்ணை விண்ணப்பத்தின் பேரில் வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி உரிமம் வழங்கியுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவர் வங்கியிலிருந்து பெறும் கடன் அளவு, அதற்குரிய வட்டி விகிதம் ஆகியவை கடன் வழங்கும் வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது.

சிறு நிதி வங்கிகள்

சிறு நிதி வங்கிகள் சேமிப்பு, நடப்புக் கணக்குகள் துவக்கி நடத்துதல், வைப்புத்தொகை கணக்குகளைத் துவக்கி நடத்துதல், கடன் வழங்கல், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரச் சேவை, இணைய வங்கியியல் மற்றும் பாதுகாப்புப் பெட்டக வசதி போன்ற அடிப்படை வங்கிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சிறு விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில்கள் மற்றும் பிற அமைப்புசாரா துறை நிறுவனங்களுக்கு உயர் தொழில்நுட்பத்தின் மூலம் கடன் வழங்கி நிதி உள்ளடக்கச் சேவைகளை அளிக்கின்றன.

பசுமை வங்கி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவாறு வங்கி வணிகத்தில் வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்களை, பரிவர்த்தனைகளை சூழலுக்கு ஏற்றதாக மாற்றுவதுடன் செயல்பாடுகளையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதை பசுமை வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மெய்நிகர் வங்கிகள்

இணைய வழியாக குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை வழங்குவதற்காக சில வங்கிகள் மெய்நிகர் வங்கியாக இயங்குகின்றன. வங்கிக் கிளைகள் இல்லாமல் இயக்கப்படும் இவை வைப்புத் தொகைக்கு அதிக வட்டி வழங்குகின்றன. கடன்களுக்கு வட்டி குறைத்தும், சேவைக் கட்டணச் சலுகை வழங்கியும் ‘நேரிடை வங்கிகள்’ என்னும் ‘மெய்நிகர் வங்கிகள்’ இயங்குகின்றன. தொழில்நுட்ப பராமரிப்பு இடைவெளிகள் தவிர இவ்வகை வங்கிகள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் இயங்குகின்றன. காகிதங்கள் மூலம் பரிவர்த்தனைகள் இல்லை. இவ்வங்கிகள் வாடிக்கையாளர் சேவைமைய தொலைபேசி இணைப்புகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வசதிகளை வழங்குகின்றன.

நம்மைப் பாதுகாப்பது நம் செயல் நமக்குச் சலுகைகளும், விலையில்லா பொருட்களும் தருவதாக இணையத்தின் வழியாக ஒரு இணைப்பை திறக்க நம்மைத் தூண்டும் செய்திகளை தவிர்க்க வேண்டும். நமக்கு அறிமுகமில்லாத இணைய இணைப்பைத் திறப்பதும், தொலைபேசியின் வழியாக நமது கணக்கு எண்கள் மற்றும் கடவுச்சொல் அல்லது கடவுக் குறியீட்டை பகிர்தலும் நம்மை பண இழப்பில் கொண்டுவிடும். நமது கைரேகைகளை அறிமுகமில்லாதவர் கேட்கும் தாள்களில் பதிவு செய்யக்கூடாது.

மின்னஞ்சல்களுக்கு செவி சாய்க்கும் போது விழிப்புடன் இருத்தல் அவசியம். கடவுச்சொல்லை ஒரு தாளிலோ, பற்று/கடன் அட்டையிலோ எழுதி வைக்கக் கூடாது. சோதனையிடாமல் பிற இணைப்புகளை (Pen Drive / External Hard Disk) நமது கணினியுடன் / கைபேசியுடன் இணைக்கக்கூடாது. பொது இடங்களில் வைஃபை இணைப்பைப் பயன்படுத்தக்கூடாது. பிறர் எளிதில் கண்டுபிடித்துப் பயன்படுத்தாத அளவிற்குக் கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். தேவையில்லாத, அறிமுகமில்லாத செயலிகளை கைபேசியில் பதிவிறக்கம் செய்யக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிச் செயலி மற்றும் தனிநபர் கணினியின் மூலம் மட்டுமே வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டும்.

சட்டரீதியாகத்தடை செய்யப்பட்ட செயலிகள் மற்றும் இணைய இணைப்புகளை தரவிறக்கம் செய்து திறந்து பார்க்கும் செயல் நமது கணக்கு முதல் அனைத்து விவரங்களை பிறர் களவாட வழிவகுக்கும். நமது சேமிப்புக் கணக்குகள், கடன் விவரங்கள், பற்று / வரவு அட்டைகள், பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் இன்னபிற வங்கிப் பயன்பாடுகள் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் பிறர் அறியாவண்ணம் வைத்திருக்க வேண்டும். அதிகமாக வருவாய் ஈட்டுவதும், குறைவாகச் செலவழிப்பதும் நமது வாழ்க்கையை வளமாக்குபவை.

இரண்டுக்குமான இடைவெளியின் தடமே நாம் வங்கிச் சேவைகளை குறித்த நேரத்தில் பெற்று வளமாக வாழ்வதற்கு வழிவகுக்கும். குறுகியகால மகிழ்ச்சியைவிட நீண்டகால மகிழ்ச்சியே நிலையானது. வங்கிகளைப்பற்றி அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றின் பணிகள் நமது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்திக்கொள்வது நமது கைகளில்தான் உள்ளது.

சேமிப்பின் அவசியத்தை உணர்ந்த நாம், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வங்கியிடமிருந்து கடன் பெறவேண்டும் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். நமது பெயர் என்பது வங்கி வழங்கும் அட்டைகளில் பதிவது மட்டுமல்ல, நாம் கடன் பெற்றால் மிகச் சரியாக, உரிய காலத்திற்குள் ஒப்பந்தப்படி திரும்பிச் செலுத்துபவர் என்ற பெயரை வங்கியிடம் பெறுவதும்தான். நாம் செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்துவது, நம் பொருட்களை வங்கிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாப்பது, காசோலை, வரைவோலை பயன்பாடு, அந்நியச் செலாவணி பரிவர்த்தனை செய்தல், பணம் பெறுவது, செலுத்துவது, இணையவழிச் சேவைகள் என்று வங்கியின் பட்டியல்கள் தொடர்ந்து பெருகிவரும் சூழலில் அவற்றை திட்டமிட்டு நமக்கும் நலம் தரும் வகையில் பயன்படுத்தினால் வாழ்க்கை வளமாகும் என்பதில் ஐயமில்லை.

(முற்றும்!)

The post வாழ்க்கை+வங்கி=வளம்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்தான் என் டார்கெட்!