![]()
திருமலை: முதல்வர் பிரசார கூட்டத்தில் தோட்டாக்களுடன் வந்த போலி நிருபரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 30ம்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக மாநில முதல்வர்கள் ஆகியோர் பிரசாரம் செய்தனர். இதேபோல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோரும் பிரசாரம் செய்தனர். இந்நிலையில் பிஆர்எஸ் கட்சி நிறுவனரும், மாநில முதல்வருமான சந்திரசேகரராவ் தனித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அடிலாபாத், போத், நிஜாமாபாத் ரூரல் மற்றும் நர்சாபூர் பகுதிகளில் நடந்த கூட்டங்களில் அவர் பங்கேற்று பிரசாரம் செய்தார்.
ஒவ்வொரு கூட்டத்திலும் பி.ஆர்.எஸ் ஆட்சியின்போது நடந்த வளர்ச்சி குறித்து பட்டியல் வாசித்து வருகிறார். மேலும் தனது பிரசாரத்தின்போது தனிமாநிலம் அமைப்பதில் காங்கிரஸ் ஏமாற்றியதாகவும், தெலங்கானாவுக்கு ஒன்றிய பாஜக அரசு அநீதி இழைத்து வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மேடக் மாவட்டம், நர்சாபூரில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர் அமரும் பகுதியில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் அமர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபரிடம் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
தீவிர விசாரணையில் அவர், சங்கரெட்டி மாவட்டம் ராய்கோட்டையை சேர்ந்த அஸ்லாம் என்பது தெரிந்தது. இறைச்சி கடை தொழிலாளியான இவர், யூடியூப் சேனல் நடத்துவதாக கூறி போலி ஐ.டி.கார்டுடன் முதல்வரின் பிரசார கூட்டத்திற்கு செய்தியாளர் பகுதிக்கு வந்ததும் ெதரிந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஸ்லாமிடம் மேடக் மாவட்ட எஸ்பி ரோகினி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தெலங்கானா முதல்வர் பிரசார கூட்டத்தில் தோட்டாக்களுடன் வந்த போலி நிருபர் கைது appeared first on Dinakaran.
