×

வற்றாத செல்வமருளும் குபேர தலங்கள்

செல்லூர்

மதுரையிலுள்ள வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலாகவும் திகழ்கிறது. சகல செல்வத்திற்கும் அதிபதியாக வேண்டுமென புண்ணிய சேனன் என்பான் விரும்பினான். அகத்தியரின் பாதம் படர்ந்து எழுந்தான். திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார், அகத்தியர். அவனின் தவம் பலித்தது. ஆனால், அவனின் அகங்காரம் பெருகியது.

கண்மண் தெரியாமல் தவறுகளை செய்தவனின் ஒரு கண்ணை ஈசன் பறித்தார். புண்ணிய சேனன் வருந்தினான். மீண்டும் தவம் செய்து தொழுதான். ஈசனும் அவனை மன்னித்து இன்றிலிருந்து உன் பெயர் குபேரன். நீயே சகல செல்வங்களுக்கும் அதிபதி என்றார். இதுவே, குபேரன் உற்பவித்த தலமாகும். நாமும் குபேரன் தோன்றிய தலத்திற்குச் சென்று திருவாப்புடையா தரிசித்து வளம் பெறுவோம்.

தஞ்சாவூர்

எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார்.

சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான்.

இக்கோயிலில் குபேரன், குபேர மகாலட்சுமி ஆகியோர் தனிச் சந்நதியில் அருளுகின்றனர். தீபாவளியன்று நடைபெறும் மஹா குபேர ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

செட்டிகுளம்

செட்டிகுளம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடம்ப மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இருந்தது. சோழனும், பாண்டியனும் சேர்ந்து கட்டிய திருக்கோயிலாகும். இறைவன் ஏகாம்பரேஸ்வரர் எனவும், இறைவி காமாட்சி அம்மை என்கிற திருப்பெயரோடு அருள்பாலிக்கின்றனர். சுமார் 800 ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில் இன்னொரு சிறப்பு அம்சமும் உண்டு.

பொதுவாக ஆலயங்களில் குபேரனின் உருவம் சிற்பமாகவோ, சுதை வடிவிலோ, கல் திருமேனியாகவோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கே, கல் தூண்கள், தேவகோட்டம், கோபுர முகப்பு என மொத்தம் 12 இடங்களில் குபேரனின் சிற்ப வடிவில் காட்சி தருகிறார். அதாவது மேஷம் முதலான 12 ராசிகளுக்கும் இந்த குபேரர்கள் அருள் வழங்குகிறார்கள்.

ஒவ்வொரு ராசிக்காரரும், அந்தந்த ராசி குபேரனை வணங்கி, தம் வறுமை நீங்கி செல்வச் செழிப்பு பெறுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட குபேரனுக்கு ‘குபேர ஹோமம்’ நடத்துகின்றனர். இந்த 12 குபேரர்கள் தவிர, மகா குபேரனின் சிற்பமொன்றும் ஆலய கோபுரத்தின் உட்புறம் வடக்குத் திசையில் உள்ளது. திருச்சி, துறையூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கீவளூர்

சந்திரகுப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்த சகல செல்வங்களையும் இழந்தான். மனம் நொந்து திசை தேசம் தெரியாது ஈசனருளால் கேடிலியப்பர் எனும் திருப்பெயரோடு அருளும் கீவளூர் தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியெம்பெருமானின் காலடியில் வீழ்ந்தான். கோயிலை மும்முறை வலம் வந்தான். ஈசன் கருணைக் கண்களால் அவனைக் கண்டார். இத்தலத்திலேயே நித்திய வாசம் புரியும் குபேரனுக்கு வைசியனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் இத்தலத்தில் தனிச் சந்நதியில் அருளும் குபேரனை வணங்கி பெருஞ்செல்வம் பெற்றான். இத்தலம் நாகப்பட்டிணம் திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சுமியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் பகர்கின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமியற்றினான்.

ஈசனோ, உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமியின் அருளில் உள்ளது என்று சொல்லி மறைந்தார். குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில், அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்ப்பித்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

சென்னை பாரிமுனை

சென்னையின் மையப் பகுதியான பாரிமுனை தம்புச் செட்டி தெருவில் அமைந்துள்ளது காளிகாம்பாள் கோயில். இக்கோயிலை வியாசர், அகத்தியர், குபேரன் போன்றோர் வழிபட்டுச் சென்றிருக்கின்றனர். எனவே, குபேரனின் அருள் பெற இத்தல காளிகாம்பாளை வணங்கி வரலாம்.

சிவபுரம்

இத்தலத்தின் பூமிக்கடியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். எனவேதான் திருஞானசம்பந்தர் இத்தலத்தை அங்கப் பிரதட்சணமாக சுற்றிச் சென்றார். தள்ளி நின்று பெருமானைப் பாடினார். அவர் அவ்வாறு பாடிய இடமே ‘சுவாமிகள் துறை’ என்றழைக்கப்படுகிறது. ஆதிசங்கரின் பெற்றோரான சிவகுருநாதரும், ஆர்யாம்பாளும் இங்கு வாழ்ந்ததாக கூறுவர்.

குபேரன் இத்தலத்திற்கு வந்து வெகுநாட்கள் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றான். குபேரன் வழிபட்டு பேறு பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. தளபதி எனும் பெயரை உடையவனுக்கு இத்தல ஈசன் குபேர ஸ்தானத்தை அளித்தார். குபேரபுரம் என்றே இத்தலத்திற்கு வேறொரு பெயர் உண்டு. கும்பகோணம் திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

விருத்தாசலம்

பெரியநாயகி உடனுறை விருத்தகிரீஸ்வர் எனும் பெருந்தலத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அதில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தத்திற்கு பெயராகும். விருத்த கிரீஸ்வரரை குபேரன் வழிபட்டு பெரும்பேறு பெற்றான். அவனின் திருப்பெயரிலேயே தீர்த்தமும் அமைந்துள்ளது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post வற்றாத செல்வமருளும் குபேர தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Kubera ,Thiruvappudaiyar Temple ,Vaigaiyar ,Sellur Madurai ,Meenakshi Amman Temple… ,Selvamarul ,Kubera Thalam ,
× RELATED பெண்கள் தினமும் விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளலாமா?