×

வங்க கடலில் உருவானது ‘மிதிலி’ புயல் : வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கிறது; அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்!

டெல்லி : வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதிலி புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் மாறியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அதற்கு மாலத்தீவு நாடு பரிந்துரைத்த மிதிலி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில், 3வது புயலாகவும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவது புயலாகவும் மிதிலி புயல் கருதப்படுகிறது. ஏற்கனவே வங்கக்கடலில் மே மாதம் மோக்கா புயலும் அக். மாதம் ஹாமூன் புயலும் உருவானது.

இந்த புயல் தற்போது ஒடிசாவில் இருந்து 190 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. இது 20 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து இந்த புயலானது வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கரையை கடக்கும் போது, 60 முதல் 80 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நவம்பர் 17,19,20,21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மிதிலி புயல் உருவாகியுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

The post வங்க கடலில் உருவானது ‘மிதிலி’ புயல் : வங்கதேசம் அருகே நாளை கரையை கடக்கிறது; அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்! appeared first on Dinakaran.

Tags : Storm 'Mithili ,Bengal Sea ,Bangladesh ,Delhi ,Indian Meteorological Survey ,IMCI ,Mitli ,northwestern Bengal ,Dinakaran ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!