×

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள் இறுதி அஞ்சலி

சென்னை: சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத்தலைவர்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா(102 வயது) நேற்று முன்தினம் காலமானார். அவர் இறந்த தகவல் அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் ஆ.ராசா, சண்முகம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் சார்பில் மாநில துணை தலைவர் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி. பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் பிரகாஷ் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, சங்கரய்யாவின் உடல் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து காலை 10.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பகல் 12 மணிக்கு அவரது உடல் மயானத்தை வந்தடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, ஆ.ராசா எம்.பி., கேரள மாநில செயலாளர் கோவிந்தன், தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்று சங்கரய்யாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

அறிவிப்பின்படி, 10 போலீசார் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். அதன்பிறகு, சங்கரய்யாவின் உடல் மதியம் 1.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. சங்கரய்யாவின் மறைவையொட்டி அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள் இறுதி அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Marxist ,Shankaraiah ,Chennai ,Sankaraiah ,
× RELATED தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...