×

காங்கிரஸ், பாஜவின் பலத்தை தீர்மானிக்கும் சட்டீஸ்கர், ம.பியில் இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ராய்ப்பூர்: காங்கிரஸ், பாஜ கட்சிகளின் பலத்தை தீர்மானிக்கக் கூடிய சட்டீஸ்கர், மத்தியபிரதேசத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, மிசோரமில் 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் கடந்த 7ம் தேதி தேர்தல் நடந்தது. இதைத் தொடர்ந்து, மத்தியபிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், சட்டீஸ்கரில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2வது மற்றும் கடைசி கட்டமாகவும் இன்று தேர்தல் நடக்க உள்ளது.

இவ்விரு மாநிலத்திலும் காங்கிரஸ், பாஜ இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியும், மபியில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சியும் நடக்கிறது. இரு மாநிலத்திலும் ஆட்சியை தக்க வைக்க வேண்டியதால் இரு கட்சிகளுமே சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளன. மபியில் 3 முறை முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் மீது இம்முறை அதிருப்தி நிலவுவதால் பாஜவே அவரை ஓரம்கட்டி வருகிறது. இதனால் அங்கு பிரதமர் மோடியை மட்டுமே முன்னிலைபடுத்தி பாஜ ஓட்டு கேட்டுள்ளது. பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதற்கு சான்றாக மபி வெற்றியை பாஜ பார்க்கிறது.

இதனால் அங்கு பாஜ 634 பொதுக்கூட்டங்களை நடத்தி உள்ளது. பிரதமர் மோடி 15 கூட்டத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா 21 கூட்டத்திலும் பிரசாரம் செய்துள்ளனர். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஓய்வின்றி 165 கூட்டங்களில் பிரசாரம் செய்துள்ளார். இதுதவிர பாஜ தேசிய தலைவர் நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பாஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், ஹிமந்தா பிஸ்வா என ஒட்டுமொத்த பாஜ பிரபலங்களும் மபியில் கடுமையான பிரசாரம் செய்துள்ளனர்.  இதுதவிர, காங்கிரசிலிருந்து விலகி பாஜவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தனது சிந்தியா குடும்ப சமூகத்தினர்களுடன் 80 கூட்டங்களை நடத்தி வாக்கு சேகரித்துள்ளார்.

கடந்த முறை பாஜவின் சூழ்ச்சியால் ஆட்சி இழந்த காங்கிரஸ் இம்முறை மீண்டும் வெல்ல கடுமையான முயற்சி செய்துள்ளது. காங்கிரஸ் 350 பொதுக் கூட்டங்களை நடத்தி உள்ளது. முதல்வர் வேட்பாளர் கமல்நாத், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் மபியின் மூலை முடுக்குகளில் சென்று வாக்கு சேகரித்துள்ளனர். இவ்விரு கட்சிகளை தவிர சமாஜ்வாடி 71 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 183 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கோண்ட்வானா கன்தன்திரான்கட்சி 45 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 10 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மொத்தம் 2,533 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 5 கோடியே 60 லட்சத்து 60 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்க உள்ளது. இதே போல சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க போராடும் அதே வேளையில், 2003 முதல் 2018 வரை ஆட்சியில் இருந்த பாஜ மீண்டும் சட்டீஸ்கரை வசப்படுத்தி இம்முறை தீவிரமாக களமிறங்கி உள்ளது. 2ம் கட்டமாக தேர்தல் நடக்கும் 70 தொகுதிகளில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18,833 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நக்சல் பாதிப்புள்ள மாநிலம் என்பதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சில தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. முதல்வர் பாகெலை எதிர்த்து படான் தொகுதியில் பாஜ எம்பி விஜய் பாகெல் நிறுத்தப்பட்டுள்ளார். துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ அம்பிகாபூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவையொட்டி மபி, சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றமா?
ஐந்து மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டிசம்பர் 3ம் தேதி ஞாயிறுகிழமையாக வருவதால், அதை 4 அல்லது 5ம் தேதிக்கு மாற்ற வேண்டுமென கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மிசோரம் மாநிலத்தில் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மிசோரம் மாநில தேர்தல் அதிகாரி மதுப் வியாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நான் விவாதித்தேன். வாக்கு எண்ணிக்கையில் பொதுமக்கள் பங்கு எதுவும் இல்லை. அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். எனவே திட்டமிட்டபடி டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்’’ என்றார்.

The post காங்கிரஸ், பாஜவின் பலத்தை தீர்மானிக்கும் சட்டீஸ்கர், ம.பியில் இன்று தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Congress ,Chhattisgarh ,BJP ,M. ,Raipur ,Chhattisgarh, Madhya Pradesh ,Bajaj ,
× RELATED அமித்ஷாவை சந்திக்க முடியாமல் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏமாற்றம்