×

பைனலில் ஆஸ்திரேலியா: இந்தியாவுடன் 19ம் தேதி மோதல்

கொல்கத்தா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரையிறுதியில், தென் ஆப்ரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்துல் வீழ்த்திய ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது. டி காக், கேப்டன் பவுமா இணைந்து இன்னிங்சை தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே பவுமா டக் அவுட்டாகி வெளியேற, தென் ஆப்ரிக்காவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே டி காக் 3, மார்க்ரம் 10, வாண்டெர் டுஸன் 6 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, தென் ஆப்ரிக்கா 11.5 ஓவரில் 24 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கிளாஸன் டேவிட் மில்லர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். தென் ஆப்ரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், கிளாஸன் மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. கிளாஸன் 47 ரன் (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஹெட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

அடுத்து வந்த யான்சென் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கோட்ஸீ பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய மில்லர் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கோட்ஸீ 19 ரன், மகராஜ் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். மில்லர் 101 ரன் (116 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் ஹெட் வசம் பிடிபட்டார். ரபாடா 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3, ஹேசல்வுட், ஹெட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இணைந்து துரத்தலை தொடங்கினர். வார்னர் 29 ரன் (18 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி மார்க்ரம் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். மார்ஷ் டக் அவுட்டாகி வெளியேற, ஹெட் 62 ரன் எடுத்து (48 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். லாபுஷேன் 18, மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்து ஷம்சி பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸி. 137/5 என திடீர் சரிவை சந்தித்தது.

கடுமையாகப் போராடிய ஸ்மித் 30 ரன் (62 பந்து, 2 பவுண்டரி), இங்லிஸ் 28 ரன் எடுத்து அவுட்டாகினர். எனினும், ஆஸி. 47.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து போராடி வென்று பைனலுக்கு முன்னேறியது. ஸ்டார்க் 16 ரன், கம்மின்ஸ் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷம்சி, கோட்ஸீ தலா 2, ரபாடா, மார்க்ரம், மகராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை மறுநாள் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

The post பைனலில் ஆஸ்திரேலியா: இந்தியாவுடன் 19ம் தேதி மோதல் appeared first on Dinakaran.

Tags : Australia ,India ,Kolkata ,ICC World Cup ODI ,South Africa ,Dinakaran ,
× RELATED ராம்சீதா பழத்தின் நன்மைகள்!