×

சில்லி பாய்ன்ட்…

* இந்த உலக கோப்பையில் வங்கத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், கிரிக்கெட் விளையாட்டில் முதல் தடவையாக ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். அதாவது ஒரு வீரர் ஆட்டமிழந்ததும் அடுத்த வீரர் 2 நிமிடங்களுக்குள் நடு களத்துக்கு வந்து பந்து வீச்சை சந்திக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் அவ்வாறு செய்யததால், வங்கம் தரப்பில் செய்த முறையீடை ஏற்று நடுவர் ‘டைம் அவுட்’ தந்தார். தனது ஹெல்மெட்டை மாற்ற ஏற்பட்ட தாமதம் என்ற மேத்யூஸ் நீண்ட நேரம் விளக்கியும் நடுவர் ஏற்கவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் எம்சிசி இது குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ஒரு நிமிடம் 54நிமிடங்களுக்குள் மேத்யூஸ் நடுகளத்துக்கு வந்து விட்டார். அதன்பிறகு சரியில்லாத ஹெல்மெட்டை மாற்ற வேண்டும் என்று பெவிலியினில் இருந்த தனது அணியினருக்கு சைகை செய்தார். அதற்கு பதில் நடுவரிடம் நிலைமையை மேத்யூஸ் விளக்கி இருந்தால் ‘டைம் அவுட்’ நிலைமை ஏற்பட்டிருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.

* இந்தியா பைனலுக்கு முன்னேறியதை பாகிஸ்தானில் இன்னும் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. தொடர்ந்து இந்திய அணியை பலவகைகளிலும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான முன்னாள் வீரர் சிக்கந்தர் பகத், ‘இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் போடும் விதம் விசித்திரமானது. மற்ற கேப்டன்களை ஒப்பிடும் போது ரோகித், காசை வெகு தொலைவில் வீசுகிறார். அதனால் எதிர் தரப்பு கேப்டன்கள் முடிவு என்ன என்பதை பார்க்க முடிவதில்லை’ என்று புலம்பி உள்ளார்.

* விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நவ.23ம் தேதி தொடங்குகிறது. பெங்களூர், ஆலூர், ஜெய்பூர் உட்பட 9நகரங்களில் நடைபெறும் இந்தப்போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு உட்பட 38அணிகள் பங்கேற்கின்றன. இறுதி ஆட்டம் டிச.16ம்் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கும்.

* ஜப்பானின் குமாமோடோ நகரில் மாஸ்டர்ஸ் ஜப்பான் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. அங்கு நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய்(31வயது, 8வது ரேங்க்), சீன தைபே வீரர் டிய்ன் சென் சூ(33வயது, 12வது ரேங்க்) ஆகியோர் மோதினர். ஒரு மணி 13நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 19-21, 21-16, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் டிய்ன் சென் கடுமையாக போராடி வென்றார். அந்த ஆட்டத்துடன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் எல்லோரும் தோற்று வெளியேறினர்.

* திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவர் தினேஷ் ராஜசேகரன்(17). பவர்லிப்டிங் விளையாட்டில் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். கால் டாக்சி டிரைவரின் மகனான தினேஷ், சர்வதேச போட்டிகளில் வென்றவர்களுக்காக தமிழக அரசு அறிவித்த உயரிய ஊக்கத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளார். ‘அதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்டிஏடி) விரைந்து வழங்கினால், மற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும்’ என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Angelo Mathews ,Bengal ,World Cup ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை...