×

திருக்ழுக்குன்றம் அருகே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர 7 கிராம மக்கள் கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரி, குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் மற்றும் வாயலூர் பாலாற்று தடுப்பணை மழைநீரால் நிரம்பி வழிகிறது. இதனால் வாயலூர் பாலாற்று தடுப்பணையில் இருந்து 4400 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

மேலும், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 97 ஏரிகள் உள்ளன. இதில் புதுப்பட்டினம், பட்டரைக் கழனி, முள்ளிக்கொளத்தூர், முத்திகை நல்லான் குப்பம் உள்பட சுமார் 30 ஏரிகள், அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள பிற ஏரிகளும் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

திருக்ழுக்குன்றம் அருகே இரும்புலிச்சேரி பாலாற்றின் குறுக்கே உள்ள சுமார் 50 ஆண்டு பழமையான பாலம், கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் இரும்புலிச்சேரி, சின்ன எடையாத்தூர், சாமியார் மடம், அட்டவட்டம் உள்பட சுமார் 7 கிராம மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கியது. அப்போதைக்கு வாகன போக்குவரத்துக்காக, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பழைய பாலம் இருந்த இடத்துக்கு சற்று தூரத்தில் ராட்சத குழாய்கள் அடுக்கப்பட்டு, அதன்மீது மண் கொட்டி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

அந்த தற்காலிக பாலத்தைதான் இதுநாள்வரை 7 கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வாயலூர் பாலாற்று தடுப்பணையால் வெள்ள நீர் அதிகளவில் வெளியேறி வருவதால், இரும்புலிச்சேரி பாலாற்று பாலத்தின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண்பாலத்தின் பல்வேறு பகுதிகள் கரைந்து, அந்த பாலம் வலுவிழந்து சேதமடைந்து வருகிறது.

மேலும், வாயலூர் பாலாற்று தடுப்பணையில் வெள்ளநீர் அதிகரிக்கும்போது, இங்குள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்து செல்லப்படும் அபாயநிலை உள்ளது. எனவே இந்தத் தற்காலிக தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்கவும், அங்கு மேம்பாலம் கட்டவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post திருக்ழுக்குன்றம் அருகே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர 7 கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bhabhalam building ,Palat ,Thirukkaskulram ,Chengalpattu district ,Kalpakkam ,
× RELATED (வேலூர்) அரசு மணல் குவாரி செயல்பட...