×

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் இன்று (16.11.2023) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது; ஊர் கூடி தேர் இழுத்தால் தான் அந்த திருத்தேர் நிலைக்கு வர முடியும். அதேபோல துறைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பணியாற்றுகின்றபோது அந்த பணி சிறப்பாக அமையும். அப்படி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் தான் திருவண்ணாமலையும், இந்த திருக்கோயிலும் பெருமை அடைகிறது. இந்த பெருமையை சேர்த்த மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்தாண்டு தீபத்திருவிழாவை மிகச் சிறப்பாக நாம் நடத்தி இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் குறைகளையும் நாம் நிவர்த்தி செய்திட வேண்டும்.

கடந்தாண்டு தீபம் ஏற்றும் மலைக்கு சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகவும், போலி அனுமதி அட்டைகள் குறித்தும் செய்திகள் வந்தன. சமூக வலைதளங்களில் சிறு தவறுகளை கூட பெரிதாக பரப்புகின்றார்கள். மலைக்கு செல்லும் பாதையில் தீ விபத்துகள் ஏற்படாத வண்ணம் காவல்துறையும், வனத்துறையும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். இந்தமுறை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இதுபோன்ற குறைபாடுகள் எழாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல் உதவி மையங்களில் போதுமான காவலர்களை நியமித்திடவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை நகராட்சி நிர்வாகமும் உறுதிப்படுத்திட வேண்டும்.

முதலமைச்சர் உத்தரவின்படி திருவண்ணாமலை கோயிலை சுற்றியுள்ள தேரோடும் வீதிகளை கான்கிரிட் சாலைகளாக அமைக்க நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அறிவிப்பு செய்து 1,000 மீட்டர் கான்கிரிட் சாலை அமைக்கப் பணிகளை தொடங்கினோம். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோதும் அதில் வெற்றிபெற்று சாலையை அமைத்து வருகிறோம். அமைக்கப்பட்ட கான்கிரிட் சாலையில் இன்றைய தினம் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது நோக்கத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைத்து தருகின்றோம். மீண்டும் அந்த இடங்களில் நடைபாதை கடைகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்திட வருவாய்த்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தற்காலிக கடைகள் அமைத்திட இடத்தை தேர்வு செய்து வழங்கிட வேண்டும். அதற்கு நெடுஞ்சாலைத்துறையும், காவல்துறையும் உதவிட வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகளை முதலமைச்சர் பாராட்டி இருக்கின்றார்கள். திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிலிருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தருகிறார்கள். ஆகவே, காவல்துறை குறைகள் ஏற்படாத வண்ணம் இன்னும் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். கார்த்திகைத் தீப முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தீபத் திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் திருக்கோயில் உள்ளே அனுமதிக்கப்படும் இடமானது ஒரே அளவாக தான் உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் ஒருங்கிணைந்து திருக்கோயிலுக்குள் எந்த அளவிற்கு பக்தர்களை அனுமதிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே பக்தர்களையும், அவர்களின் பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களையும் அனுமதிக்க வேண்டும்.

குறைவான காவலர்களை கொண்டு சிறப்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறை தங்கள் நுண்ணறிவை பயன்படுத்தி செயலாற்றிட வேண்டும். திருவண்ணாமலையை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் நிதியை வழங்கியுள்ளனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் செயல்படுகின்றதா என்பதனை உறுதி செய்வதோடு, தனியார் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை கண்காணித்திடவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் திருக்கோயில் உள்பிரகாரத்தில் தேவையான மருத்துவ குழுக்கள் அமைத்திட கவனம் செலுத்திட வேண்டும்.

அருணை மருத்துவ கல்லூரி சார்பிலும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்து கொள்ளவும், பேவர் பிளாக் பாதைகள் அமைக்க வேண்டிய இடங்களில் துரிதமாக அமைத்திடவும் நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருத்தேர்கள் ஓடும் நாட்களில் தேவையான உபகரணங்களுடன் பொதுப்பணித்துறையினரும், மின்சாரத்துறையினர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் கவனமுடன் பணியாற்றிட வேண்டும். நகராட்சி நிர்வாகம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதோடு கழிப்பிட வசதிகளையும், குப்பைகள் சேரா வண்ணம் தூய்மைப் பணிகளையும் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்.

கிரிவலப் பாதையில் ஆசி வழங்குவதாக பலர் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதை கண்காணிக்கும் சாதாரண உடையில் காவலர்களை வலம்வர செய்திட மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஏற்பாடு செய்திட வேண்டும். திருக்கோயிலின் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்களுக்கும் தீபத்திருவிழா நிகழ்ச்சிகளை சேகரித்து ஒளிபரப்பும் ஊடகத்துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களை முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கும் உரிய அனுமதி சீட்டுகளை வழங்கிட வேண்டும். இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக அமைந்தது என்று அனைவரும் பாராட்டும் அளவிற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகளும், பிற துறை அலுவலர்களும், உறுதுணையாய் இருந்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்; கார்த்திகை தீபத்திருவிழாவை மிகச்சிறப்பாக நடத்திடும் வகையில் அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துல்லியமாகவும், தெளிவாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எடுத்துரைத்துள்ளார். ஆகவே, ஒருசில கருத்துக்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்த திருவிழாவின்போது சிறப்புக்கள் பல இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய தவறு நடந்துவிட்டால் அதைத்தான் மிகைப்படுத்தி பத்திரிக்கைகள் பெரிதாக்குகின்றன. கடந்த காலங்களில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாக்களோடு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெறுகின்ற தீபத்திருவிழாவோடு ஒப்பிட்டு பார்த்தால், குறிப்பாக மாவட்ட அமைச்சர் மற்றும் அலுவலர் பெருமக்கள் விழா சிறப்பாக நடைபெற ஆத்மார்த்த உணர்வோடு பணிகளை மேற்கொண்டு வருவதை தெளிவாக உணர முடியும்.

கடந்தாண்டு எங்கும் எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக உள்ளே அனுமதிக்கப்படுகின்ற கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அனுமதி அட்டைகளை (பாஸ்களை) கட்டுப்பாடுகளுடன் முடிந்த அளவிற்கு குறைத்து பொதுமக்கள் சிறப்பாக தரிசனம் செய்வதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததை மனசாட்சியுள்ள யாரும் மறுக்க முடியாது. கடந்த முறை போன்றே அனைத்து வசதிகளையும், இந்தாண்டும் செய்து தந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செய்திட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளரே தற்போதும் பணியில் உள்ளதால் அவர்களது பணி அனுபவத்தால் இந்தாண்டும் தீபத்திருவிழா சிறப்பாக அமையும்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் சிறப்பு அலுவலர்களாக பணியாற்ற பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆகவே, பொதுப்பணித்துறை அமைச்சர் முன்மொழிந்த கருத்துக்களை நானும் வழிமொழிந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்போடு செய்து தருவோம். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் எங்கும் சிறிய அசம்பாவிதம் கூட நிகழாமல், எந்தத் தவறுக்கும் இடம் தராமல் பணியாற்றிட நம் அனைவரும் கூட்டுப் பொறுப்பு உண்டு என்பதை மனதில் நிறுத்தி இந்த தீபத் திருவிழாவை ஒளிபெறச் செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர்கள் அர.சுதர்சன், சி.ஜோதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Arunachaleswarar Temple ,Tiruvannamalai ,Arunachaleswarar ,Temple ,Karthigai Deepthruvizhya ,Velu ,B. K. ,Tiruvannamalai Arunachaleswarar Temple ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...