×

மது, கஞ்சா குடித்து தினமும் அட்டகாசம்; சமூக விரோத கும்பலால் சீரழியும் பாரியக்கல் பீச்: கண்டுகொள்ளுமா காவல்துறை?

கருங்கல்: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடற்கரை, சங்குதுறை, சொத்தவிளை உள்ளிட்ட கடற்கரை சுற்றுலாத்தலங்கள் உள்ளன. ஆனால் மாவட்டத்தில் பல கடற்கரைகள் இயற்கையான கடற்கரைகளும் உள்ளன. அதன்படி கருங்கல் அருகே குரும்பனை, பறவிளை என்ற இடத்தில் பாரியக்கல் பீச் உள்ளது. இங்கு உள்ளூர் மக்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அறிந்து கொண்டு வந்து செல்வதும் உண்டு. இயற்கை எழில் சூழ ரம்மியான காணப்படும் இந்த பீச் சமீபகாலமாக சமூக விரோத கும்பல் நடமாட்டத்தால் சீரழிந்து வருகிறது. இங்குள்ள பாறைகளில் அமர்ந்து கடல் அழகை ரசித்துக்கொண்டே சிலர் மது அருந்தி விட்டு பாறைகளில் பாட்டிலை உடைத்து தண்ணீரில் போடுகின்றனர். மேலும் அருகில் உள்ள அடர்ந்த முள் தோப்புகளில் அமர்ந்து கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதற்கு ஒருபடி மேலாக சிலர் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு மது, கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. இது பீச்சுக்கு வரும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது மற்றும் கஞ்சாவை அருந்த செய்து அவர்களது வாழ்க்கையை பாழாக்குகின்றனர். தொடரும் இச்சம்பவத்தால் கடற்கரையையொட்டி உள்ள கிராம மக்கள் தாங்கள் குடும்பமாக பொழுதை கழிக்க பீச் பக்கமே தலைகாட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரை தற்போது இங்கு போலீசாரை காண்பதே அரிதாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்ஐ ஒருவர் அதிரடி வேட்டை நடத்தி சமூக விரோத கும்பலை விரட்டி அடித்தார். அதன்பின்னர் அவர் மாறி சென்றதும் மீண்டும் சமூக விரோத கும்பல் ஆதிக்கம் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதுதவிர கடற்கரையில் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது .முறையாக எச்சரிக்கை பலகையும் கைப்படவில்லை. இதன் எதிரொலியாக கடல் அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்குள்ள பாறையில் நின்று கடல் அழகை ரசித்த இளைஞர்களில் 3 பேர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அதில் ஒருவர் உயிர் தப்பினார். மற்ற 2 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் பாரியக்கல் பீச்சில் முறையாக பாதுகாப்பு எச்சரிக்கை ஏற்படுகளை செய்ய வேண்டும். இதற்காக முறைப்படி எச்சரிக்கை போர்டு மற்றும் கடலில் தடுப்பு  வேலி அமைக்க  வேண்டும்.  பாதுகாப்பு பணியில் போதிய போலீசாரை நியமிக்க ேவண்டும். அதுமட்டுமின்றி கருங்கல் போலீசார் காலை, மாலை வேளையில் அதிரடி ரோந்து சென்று கடற்கரைக்கு வரும் சமூக விரோத கும்பலை விரட்டி அடித்து பீச்சுக்கு தக்க பாதுகாப்பு வழங்க ேவண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post மது, கஞ்சா குடித்து தினமும் அட்டகாசம்; சமூக விரோத கும்பலால் சீரழியும் பாரியக்கல் பீச்: கண்டுகொள்ளுமா காவல்துறை? appeared first on Dinakaran.

Tags : Pariyakkal beach ,Karungal ,Kumari district ,Kanyakumari Beach ,Sanguthurai ,Sotthavilai ,
× RELATED பளுகல் அருகே மாயமான நர்சிங் மாணவி மீட்பு