×

குழப்பத்தை தீர்க்கும் அழகிய நாமம்

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா

வானிலுள்ள நட்சத்திரங்களின் வெளிச்சத்தை தோற்கடிக்கக்கூடிய காந்தியோடு கூடிய மூக்குத்தியுடன் விளங்குபவள் என்பது பொதுவான அர்த்தம். இதற்கு முந்தைய நாமாவில் நவ சம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா எனும் நாமத்தில் வசின்யாதி வாக் தேவதைகள் மூக்கை வர்ணித்தனர். புதுமையான செண்பகப் பூ என்று வர்ணித்தனர். ஸ்ரீலங்காவில் வாழ்ந்து சித்தியான சிவயோகர் சுவாமிகள் என்பவர், அந்த ஞானானுபவத்தை விவரிக்கும்போது என்றும் மாறா வெண்மை இது என்பார்.

இந்த நாமத்தில் அந்த மூக்கில் (நாஸிகை) அணிந்து கொண்டிருக்கின்ற மூக்குத்தி அம்பாள் அணிந்து கொண்டிருக்கின்ற மூக்குத்தியை வர்ணிக்கின்றார்கள். இதற்கு முந்தைய நாமத்தில் செண்பகப் பூ நாசிக்கு உவமையாகின்றது. அதில் செண்பக மலர் ஆனந்தத்தை குறிக்கின்றது என்று பார்த்தோம். இப்போது இந்த நாமத்திலும் ஒரு உவமை சொல்கிறார்கள். இந்த மூக்குத்தி என்ன உவமை எனில், தாரா காந்தி திரஸ்காரிஞ் அதாவது தாரா என்பது நட்சத்திரத்தை குறிக்கும். வானத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன.

அந்த நட்சத்திரத்தின் ஒளி இரவெல்லாம் மிகமிக அழகாக பார்ப்பவர்களின் கண்ணை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது. ஆனால், இந்த நட்சத்திரங்களினுடைய ஒளியை எல்லாம் மங்கச் செய்யக்கூடிய, நட்சத்திரத்தின் ஒளியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று செய்யக் கூடியது எதுவெனில், அம்பிகை அணிந்திருக்கக் கூடிய முக்குத்தி நாஸாபரணத்தினுடைய ஒளி.
இங்கு நட்சத்திரங்கள் என்பது known fact.

இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் பிரபஞ்சம். நாம் பார்க்கக் கூடிய வஸ்துக்கள். இந்த known fact ஐ சொல்லித்தான் un known fact என்று சொல்லப்படுகின்ற நம் மனதிற்கு அப்பாற்பட்ட ஞான வஸ்துவை காண்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அது ஒவ்வொரு நாமத்திலும் நடந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு என்ன பொருளெனில் நீங்கள் பார்ப்பதை விட, உங்கள் மனதால் அறிந்ததை விட மிக பிரமாண்டமாக வேறொன்று இதையெல்லாம் இயக்கிக் கொண்டிருக்கின்றது. அதுவே முக்கியம் என்று காண்பித்துக் கொடுக்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தினுடைய ஒளியை காண்பிப்பதற்கான காரணம், இந்த நட்சத்திரத்தினுடைய ஒளியை பார்க்கிறோம். பிரபஞ்சத்தை பார்க்கிறோம். அனுபவிக்கிறோம். இந்த ஒளி அதாவது இந்த பார்க்கக்கூடிய இந்த அனுபவம் என்பது உண்மையான அந்த ஆத்மானுபவம் கிடைத்ததற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் எதுவுமே இல்லை என்று காண்பிக்கக் கூடியது எதுவெனில் அம்பிகை அணிந்திருக்கக்கூடிய மூக்குத்தி. அத்தனை நட்சத்திரங்கள், அத்தனை ஒளியையும் மங்கச் செய்யக் கூடியது அந்த மூக்குத்தி.

வானத்தைப் பார்த்தால் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. நாம் நட்சத்திரத்தை எண்ண முடியாது என்றுசொல்லுவோம். வானம் முழுவதும் அத்தனை நட்சத்திரங்கள் உள்ளன. இது எதைக் குறிக்கின்றது எனில், நாம் அனுபவகிக்கக்கூடிய விஷயங்களை குறிக்கின்றது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் மனதால் நீங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்களும் அதிலிருந்து வரும் சிறுசிறு சுகங்களும், மீண்டும் அதையே அனுபவிக்க வேண்டுமென்கிற ஆசையும் என்று ஆயிரகணக்கான இன்பங்களே நட்சத்திரங்கள். அவை யாவும் மின்னி மின்னி மறையும் தன்மை பெற்றவை.

இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! இதில் தோன்றி தோன்றி மறையும் அனுபவங்கள் அனைத்துமே அந்த வானிலுள்ள நட்சத்திரங்கள் போன்றவைதான். அதாவது விஷய சுகானுபவங்கள். அதற்கு முடிவே கிடையாது. மேலும், அது நிலையாகவும் நிலைத்து நிற்க வேண்டுமென்றும் நீங்கள் தொடருகிறீர்கள். விரிந்து விரிந்து போய்க் கொண்டே இருக்கும்.
ஆனால், இதற்கு எப்போது முடிவு எனில், நாம் எப்போது இந்த நட்சத்திரங்களிலிருந்து நம்முடைய பார்வையை திருப்பி, அம்பிகையினுடைய மூக்குத்தி என்கிற ஞானத்தை தரிசித்து விட்டால், இந்த நட்சத்திரங்களினுடைய ஒளி மங்கிப் போய்விடும். நட்சத்திரங்களே காணாமல் போய்விடும்.

இது எப்படியெனில் காலையில் சூரியன் வந்ததற்குப் பிறகு வானிலுள்ள நட்சத்திரங்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லையோ அதுபோல ஞானம் என்கிற மூக்குத்தியின் காந்தி அதாவது ஒளியை கண்ட பிறகு இந்த பிரபஞ்சமே மறைந்து விடும். இந்த பிரபஞ்சமே மறைந்து விட்டது என்பதற்கு பிறகு விஷய சுகானுபவங்களை சொல்லத்தான் வேண்டுமா அவையும் மறைந்துவிடும். நட்சத்திரங்கள் இருக்கின்றன. இரவில் பார்த்த அத்தனை நட்சத்திரங்களும் இருக்கின்றன.ஆனால், சூரியன் வந்தவுடன் நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டது. இந்த இடத்தில் சூட்சுமத்தை கவனியுங்கள். நான் விஷயங்களை அனுபவிக்காமல் அழித்து விடுவேன் என்பது தவறு.

இயலாதது. ஆனால், ஞானம் என்கிற சூரியப் பிரகாசம் வரும்போது அந்த விஷயத்தினுடைய வாசனைகள் தானாகவே மறைந்து விடும். இத்தனை நட்சத்திரங்கள் என்று மறையும். மறையாது. என்றுதான் இந்த உலக விஷய சுகங்களெல்லாம் மறையும். ஒன்று மறையும். இன்னொன்று தோன்றும். இன்று நீங்கள் அனுபவிக்கக் கூடிய இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அனுபவிக்கிறீர்களோ இவை யாவும் ஞான ஸ்பூர்த்தி ஏற்பட்டவுடனே அடங்கிப் போய்விடும். நீங்கள் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து கழிக்க வேண்டுமென்று நினைத்தால் முடியவே முடியாது.

ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இருள் விலகுவதில்லை. சட்டென்று வெளிச்சம் வந்து இருள் அந்தக் கணமே மறைகின்றது. எனவே, ஞானம் ஒன்றுதான் இந்த அனைத்து அஞ்ஞானத்திலிருந்து விஷய அனுபவங்கள், இன்பங்கள், துன்பங்கள் மற்றும் சிற்றின்பங்கள் வருவதை ஞானம் மட்டுமே அழித்துப் பொசுக்கும். மதுரையிலுள்ள சாந்தி குமார சுவாமிகள் வேறொரு உதாரணம் கூறுவார், பரமே பார்த்திருப்பார். பதார்த்தங்கள் பாரார். நீங்கள் சில கணங்கள் சூரியனை வெறும் கண்களால் பார்த்து விட்டு சட்டென்று பக்கத்திலுள்ள அறையை பார்த்தால் அறையே தெரியாது.

சூரியனைப் பார்த்த கண்களால் வேறு எதையுமே பார்க்க முடியாது. இந்த பிரபஞ்சத்திற்கு ஒளி கொடுக்கின்ற பௌதீக சூரியனை பார்த்தாலே பிரபஞ்சம் மறைகின்றது என்றால், அந்த ஞான சூரியனை பார்த்த பிறகு சொல்லவும் வேண்டுமா என்ன? இதிலும் நம்முடைய பிரயத்தனம் எதுவுமே இல்லை. நம் மனம் அடங்க வேண்டும் அவ்வளவுதான். அதனால், இந்த விஷயத்தை வெறுமே கேளுங்கள். இந்த நாமாவை சொல்லுங்கள்.

இந்த நாமத்திற்கான கோயில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயம். பகவதி வலக்கையில் ருத்ராட்ச மாலையையும், இடது கையை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் அருள்கிறாள். தலை கீரிடத்தில் பிறைச்சந்திரனும், மூக்கில் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன. வீரமார்த்தாண்டவன் என்பவர் தான் கண்டெடுத்த அபூர்வமான ரத்னக் கல்லை திருவிதாங்கூர் மன்னனிடம் தர மன்னன் அதை மூக்குத்தியாக்கி பகவதிக்கு 18ம் நூற்றாண்டில் சமர்ப்பித்தார்.

இந்த மூக்குத்தியின் ஒளியை கலங்கரை விளக்கமென நினைத்த அந்நிய நாட்டுக் கப்பல் ஒன்று திசை தவறி ஒரு பாறையில் மோதி விபத்துக்குள்ளானதால், கிழக்கு வாசல் கதவு வருடத்தில் ஐந்து நாட்கள் (ஆராட்டு, திருக்கார்த்திகை, விஜயதசமி, இரண்டு அமாவாசைகள்) மட்டுமே திறக்கப்படும். பகவதியம்மன் ஆலயத்தையொட்டிய வடக்கு வீதியில் வீற்றிருக்கும் பத்ரகாளிக்கு வழிபாடு நடந்த பிறகே பகவதிக்கு எந்த விழாவையும் தொடங்குவது வழக்கம்.

The post குழப்பத்தை தீர்க்கும் அழகிய நாமம் appeared first on Dinakaran.

Tags : Lalita Sahasranams ,Ramya Vasudevan ,Krishna Tara Gandhi ,Thraskari Nasaparana ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி