×

‘உலகக்கோப்பையை வென்று வாருங்கள்’: சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி: அணியின் கூட்டுமுயற்சி, திறமையுடன் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்த்துச் செய்தியில்,”ஷமியின் நிலையான ஆட்டம் இந்த உலகக்கோப்பையில் அவரை சிறந்த வீரராக்கியுள்ளது. விராட் கோலியின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள். கோப்பையை வென்று வாருங்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புள்ளிபட்டியலில் முதலாவது இடம் பிடித்த இந்திய அணியும் மற்றும் நான்காவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. தொடக்கம் முதிலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி காட்டி வந்தனர்.

அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கிங் கோலி முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்-க்கு காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் – கிங் கோலி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிங் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை நிறைவு செய்து முறியடிக்கவே முடியாது என பலராலும் கூறப்பட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

மறுமுனையில் ஷ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி சதமடித்தார். கோலி 117 ரன்களிலும், ஷ்ரேயாஸ் 105 ரன்களிலும் அவுட் ஆக, கேஎல். ராகுல் இறுதியில் அதிரடி காட்ட இந்திய 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது.

இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் மிரட்டினர். இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் 4வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “ஷமியின் நிலையான ஆட்டம் இந்த உலகக்கோப்பையில் அவரை சிறந்த வீரராக்கியுள்ளது. விராட் கோலியின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துகள். கோப்பையை வென்று வாருங்கள்” என தெரிவித்துள்ளார்.

The post ‘உலகக்கோப்பையை வென்று வாருங்கள்’: சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : World Cup ,Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED தங்களின் நாற்காலியை காப்பாற்றும்...