×

நலமான வாழ்விற்கு நாகலட்சுமி நாராயணர்

சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள முதல் குறுக்கு தெருவில், சுற்றுப்புறம் முழுவதும் வீட்டுக் கட்டிடங்கள் சூழ்ந்து இருக்கும் இடமத்தியில், அமைதியான மனதிற்கு இதமளிக்கும் விதத்தில், “மூலவர் ஸ்ரீநாகலட்சுமி நாராயணர்’’ ஆதிசேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவருடன் பரிவான தெய்வங்களாக, ஸ்ரீமகாலட்சுமி, வராஹர், நரசிம்மர், விஷ்ணு துர்கை, ஆஞ்சநேயரும், வலது பக்கத்தில் சிவன், பார்வதி, முருகன், நவக்கிரகங்கள் என அனைத்து சேய்வங்களும் ஒன்று தேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் சக்திவாய்ந்த “சிவாவிஷ்ணு’’ திருக்கோயில் அமைந்து இருக்கிறது.

பெரிய புற்று

1960 – ஆம் ஆண்டில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதல் குறுக்கு தெருவில் வசிக்கும் கோகுல் நாத் என்பவருக்கு சொந்தமான இடத்தில் (தற்போதுள்ள கோயில் இடத்தில்) மிகப் பெரிய புற்று ஒன்று தோன்றியது. புற்றை கண்டவர், “தான், இந்த இடத்தில் கோயில் ஒன்றை கட்ட ஆசைப்படுகிறேன். அதற்கான வழிமுறைகளை நீங்கள்தான் எனக்கு காட்ட வேண்டும்’’ என்று மகாபெரியவாவிடம் சென்று கூறினார்.

உடனே கண்களை மூடிக் கொண்டு, தியானித்து ஆசிகளை வழங்கிய மகாபெரியவா, ஒரு எந்திரத்தை வடிவமைத்துக் கொடுத்து, ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக நாகலட்சுமி நாராயணர் அதாவது ஆதிஷேச வாகனத்தில், நின்ற கல்யாண திருக்கோலத்தில் அழகிய கோயில் எழுப்ப அருளாசி வழங்கினார். அதன் பின், இக்கோயில் பிரசித்திபெற்று, ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டு, பல சந்நதிகள் உருவாக்கப்பட்டு, 1972-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில், ஒருபுறம் சிவன் கோயில், மறுபுறம் விஷ்ணுகோயிலும் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த கோயிலை “சிவாவிஷ்ணு’’ கோயில் என்றே அழைக்கிறார்கள்.

கிழக்கு பார்த்தவாறு சந்நதிகள்

பெரும்பாலான கோயில்களில், பெருமான் சந்நதி கிழக்கு பார்த்தவாறு இருந்தால், அம்பாள் சந்நதி தெற்கே பார்த்தவாறு இருக்கும். ஆனால், இந்த கோயிலில், கல்யாண கோலத்தில் சிவபெருமானும் – அம்பாளும் அருகருகே கிழக்கே பார்த்தவாறு சந்நதிகள் அமைந்துள்ளது சிறப்பிலும் சிறப்பு. மேலும், விநாயகர், விஷ்ணு என இக்கோயிலில் குடி கொண்டுள்ள அனைத்து தெய்வங்களுமே கிழக்கு பார்த்தவாறே சந்நதிகள் இருப்பது தனிச் சிறப்பு.

பஞ்சமூர்த்திகளையும் ஒரே இடத்தில் காணலாம்

சிவன் கோயில்கள் என்றால் பஞ்சமூர்த்திகளை தரிசிப்பது சிறப்பானதாகும். “பஞ்சமூர்த்தி’’ என்பது விநாயகர், பெருமான், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர்கள். இவர்களை தனித்தனி சந்நதிகளாக, வெவ்வேறு இடங்களுக்கு சென்றுதான் நாம் தரிசிக்க முடியும். அப்படிதான் கோயிலின் அமைப்பும் இருக்கும். ஆனால், இந்த கோயிலில், ஒரே இடத்தில் நின்றவாறு பஞ்சமூர்த்திகளையும் தரிசித்து அருளாசி பெற முடியும்.

வாகனங்களில் நவகிரகங்கள்

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்கள், அவரவர் வாகனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் அருளாசி வழங்கி வருவது, எங்கும் காண முடியாத அமைப்பு. விஷ்ணுவின் அம்சமான புதன் பகவான், `கருட சேவை சாதிக்கிறார்’. அதாவது, கருடனின் மீது அமர்ந்து புதன் பகவான் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். வேறு எங்கும் இதுபோல், புதன் பகவான் காட்சி தருவதில்லை.

புற்றுக்கு பால் ஊற்றுதல்

ஒரு தம்பதியினருக்கு, புத்திசுவாதீனம் இல்லாத மகன் பிறந்திருக்கின்றான். அவன் புத்திசுவாதீனம் இல்லாதபோதும், கட்டட வேலைக்கு சென்று உழைத்து உண்டு வாழ்ந்து வந்தான். ஒரு நாள் வேலைக்கு சென்ற அந்த பையன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களின் பெற்றோர்கள் எங்கு தேடியும் அந்த பையன் கிடைக்கவில்லை. அழுதுக் கொண்டே இந்த கோயிலுக்கு வந்திருக்கின்றார்கள், மகனை தொலைத்துவிட்ட தம்பதி. அவர்களை அழைத்த கோயிலின் குருக்கள், நடந்தவற்றை கேட்டறிந்தார்.

பின்னர், “இங்குள்ள பெரிய புற்றுக்கு பால் ஊற்றி, மனமுருகி வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் மகன் உங்களை தேடியே வருவான்’’ என்று சொல்லியிருக்கிறார். அந்த தம்பதியும் நம்பிக்கையோடு, புற்றுக்கு பால் ஊற்றி தன் மகன் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தித்து, வீட்டிற்கு செல்ல, மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ஒரு கைப்பேசி அழைப்பு வந்திருக்கின்றது.

அதில், `உங்கள் மகனின் சட்டை பாக்கெட்டில் இந்த நம்பர் இருந்தது. உங்கள் மகனை கண்டதும், அவர் புத்திசுவாதீனமற்றவர் என்பது எங்களுக்கு புரிந்தது. உங்கள் மகனை அழைத்து செல்ல வாருங்கள்’ என மறுமுனையில் பேசியவர் தெரிவிக்க, இவர்கள் ஓடிச் சென்று மகனை மீட்டுவந்திருக்கின்றார்கள். இப்படி, வேலையில்லாதோருக்கு வேலை, குழந்தை இல்லாதோருக்கு குழந்தை, திருமணம் ஆகாதோருக்கு திருமணம் என பக்தர்கள் வேண்டியதை அப்படியே வழங்கி நிறைவேற்றுகிறார், நாகலட்சுமி நாராயண மூர்த்தி.

இங்குள்ள இந்த பெரிய புற்றுக்கு பால் ஊற்றி வேண்டிக் கொண்டால், மன கவலைகள் அகன்று, நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றன. ஆடி, தை மாதங்கள் மற்றும் செவ்வாய் – வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் வைப்பது விசேஷமாகும்.

அனைத்து தெய்வங்களிடத்திலும் நாகம்

மேலும், இங்குள்ள அனைத்து தெய்வங்களிடத்திலும் நாகம் இருக்கிறது. விநாயக பெருமான், பூணூலாக நாகத்தை அணிந்துள்ளார். பெருமாள், ஆதிசேஷ வாகனத்திலேயே இருக்கிறார். சிவனும், கழுத்தில் மாலையாக நாகத்தை அணிந்திருக்கிறார். அம்பாள், நாகத்தை தலையில் வைத்துள்ளாள். முருகப் பெருமான், தன் காலடியில் பாம்பினை வைத்திருக்கிறார். நவக்கிரகத்தில் ராகு – கேது, நாக சொரூபமாக உள்ளார்கள். ஆகவே, அனைத்து தெய்வங்களோடு இங்குள்ள புற்றுக் கோயிலையும் சேர்த்து வழிபட்டால், பக்தர்களுக்கு சகல தோஷங்களும் விலகி நன்மை பயக்கும்.

அதி அற்புதமான சாந்நித்தியம்

பொதுவாகவே, இயற்கையோடு ஒன்றியுள்ள கோயில்கள்; உதாரணத்திற்கு, மலை சார்ந்த திருப்பதி – திருவண்ணாமலை கோயில்கள், கடல் சார்ந்த திருச்செந்தூர் கோயில், அதே போல், புற்று சார்ந்த சங்கரநாராயணர் கோயில் திருநெல்வேலி போன்ற திருத்தலங்களில், அந்த தெய்வத்தின் சாந்நித்தியம் (சக்தி) அதிகமாக இருக்கும். ஆகையால், பெரிய புற்றுள்ள இந்த கோயிலிலும், சாந்நித்தியம் என்பது அதி அற்புதமானது.

கோயிலின் அமைவிடம்: முதல் குறுக்கு தெரு, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028. (காளியப்பா மருத்துவமனை அருகில்). தொடர்புக்கு: டி.நீலகண்ட சிவாச்சாரியார் – 9444048413.

இந்த ராஜா அண்ணாமலைபுரத்தின் வரைபடத்தை பார்த்தாலே விசித்திரமான தெய்வீக சக்திகள் நிறைந்து காணப்படும். ராஜா அண்ணாமலைபுரத்தில், ஏழு மெயின் ரோடுகளும், நான்கு குறுக்கு தெருக்களும் உள்ளது. இந்த நாகலட்சுமி நாராயண கோயில் அமைந்த இடம், முதல் குறுக்கு தெரு. வீட்டில் எப்படி ஈசான மூலையில் பூஜை அறையினை அமைப்போமோ.. அது போல், இந்த ராஜா அண்ணாமலைபுரத்தில் ஈசான மூலையில் இந்த கோயில் அமைந்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது!

தொகுப்பு: ரா.ரெங்கராஜன்

The post நலமான வாழ்விற்கு நாகலட்சுமி நாராயணர் appeared first on Dinakaran.

Tags : Nagalakshmi Narayan ,Raja Annamamalaipura, Chennai ,
× RELATED வீரவசந்த வைபோகன்