×

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா தனது 102 வயதில் நேற்று காலை காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் இன்று காலை நடைபெறுகிறது. சுதந்திரப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு வயது 102. இவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

இரு நாட்களுக்கு முன்னர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை 9.30 மணி அளவில் சங்கரய்யா காலமானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியினரிடமும் தனது இரங்கலை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சங்கரய்யாவின் உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 2 மணி முதல் அங்கு சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அப்போது பல்வேறு கட்சி தலைவர்கள், பல்வேறு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணி அளவில் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகிறது. அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், மூத்த நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

சங்கரய்யாவின் மறைவை முன்னிட்டு, கட்சியின் அனைத்து கிளைகளும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும், ஒருவார காலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்து துக்கம் கடைபிடிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சங்கரய்யாவின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி 1921ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி நரசிம்மலு-ராமானுஜம் தம்பதியின் 2வது புதல்வராக சங்கரய்யா பிறந்தார். கோவில்பட்டி ஹார்வி மில்லில் பொறியாளராக பணியாற்றிய நரசிம்மலு குடும்பத்தினர் மதுரைக்கு குடிபெயர்ந்தனர். செயின்ட் மேரீஸ் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும் ஐக்கிய கிறிஸ்துவ உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பும் முடித்து பட்டப் படிப்பிற்காக அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார்.

அமெரிக்கன் கல்லூரி மாணவர் மன்றத்தின் இணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி கால்பந்தாட்ட அணியில் பங்கேற்று திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியிலும் கலந்து கொண்டார். படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. இதனால், படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார். தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை மற்றும் மூன்று ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.

மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கரய்யா நாட்டுக்கு விடுதலை கிடைத்த போது தான், 1947 ஆகஸ்ட் 14ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மாவீரன் பகத்சிங்கும் அவரது சக தோழர்கள் ராஜகுருவும் சுகதேவும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும் நாடே கொதித்து எழுந்தது. தூத்துக்குடி நகரில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ராஜமாணிக்கமும் சங்கரய்யாவும் கலந்து கொண்டனர். ராஜாஜி கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் கருப்புக்கொடி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது.

மதுரையில் சங்கரய்யாவும் அவருடைய அண்ணன் ராஜமாணிக்கமும் பங்கேற்று ராஜாஜிக்கு கருப்புக்கொடி காண்பித்தனர். இதை தொடர்ந்து நடைபெற்ற மறியல் போராட்டத்திலும் இருவரும் கலந்து கொண்டு 6 மாதகால கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சுதந்திரப் போராட்ட வீச்சு காரணமாக மதுரையில் மாணவர் சங்கம் உருவானது. மதுரை ரீகல் அரங்கத்தில் நடந்த மாநாட்டில் பாரிஸ்டர் இளம் கம்யூனிஸ்ட் மோகன் குமாரமங்கலமும் சங்கரய்யாவும் உரையாற்றினர். நிறைவாக, மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டார்.

சமூக சீர்திருத்தம், கடவுள் மறுப்பு என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையால் ஈர்க்கப் பட்டிருந்த சங்கரய்யா. தேச விடுதலை என்ற லட்சியத்தால் தேசிய இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டு, பூரண சுதந்திரம் எனும் கம்யூனிஸ்டுகளின் முழக்கம், அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பும் மார்க்சியம் மட்டுமே மனித குலத்திற்கு வழிகாட்டும் என்ற புரிதல் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆவதற்கு இட்டுச் சென்றது. ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது.

இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சிறையில் ஏ,பி பிரிவு என்று அரசியல் கைதிகளிடையே பாகுபாட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தனர்.தனிமைச் சிறையில் இருந்த அவரை வேலூர் சிறைக்கு மீண்டும் மாற்ற காமராஜர் கடிதம் எழுதி அனுப்பினார். ஒரு மாதத்திற்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தேசியக் கவுன்சில் உறுப்பினராக 1956ல் பாலக்காட்டில் நடந்த நான்காவது கட்சிக் காங்கிரசில் தேர்வு செய்யப்பட்டார். 1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் கூடிய தேசிய கவுன்சிலில் கருத்து மாறுபாடு ஏற்பட்டதால் 32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. 1966 மத்தியில் தீக்கதிர் வார ஏடு கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக அறிவிக்கப்பட்டு என்.சங்கரய்யா அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1967ல் மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் குழுவின் துணைத் தலைவராக செயல்பட்டார். 1977, 80 ஆகிய சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். கடலூரில் நடைபெற்ற 15வது மாநில மாநாட்டில் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

2002 பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற 17வது மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அதையடுத்து அவரது ஏழாண்டு சேவையைப் பாராட்டி மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஒன்றிய அரசை எதிர்க்கும் மாற்றுப்பாதை, குடிநீர், பிரச்னை, ரேஷன் வினியோகம், பொருளாதாரக் கொள்கைகள், மாநில சுயாட்சி, விவசாயம், கைத்தறி, கிராமப்புற வறுமை, நில விநியோகம், காடுகள், தொழிற்சாலைகள், திட்டங்கள், நுழைவு வரி, மோட்டார் வாகன வரி என எழுப்பிய பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். தலித் மக்கள் மீதான தாக்குதலை தடுத்திட, தீண்டாமை கொடுமையை ஒழித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியதுடன், தமிழக அரசு சார்பில் 1997 செப்.1ம்தேதி மதுரையில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்த வைத்ததில் மிக முக்கியமான பங்கு உண்டு.

நிலச்சீர்திருத்தம் செய்வதன் மூலமாக தீண்டாமை முற்றாக ஒழிக்கும் என எடுத்துரைத்ததோடு, அனைவருக்கும் ஒரே சுடுகாடு என்ற கோரிக்கையை அமலாக்க வலியுறுத்தினார். 2021ல் திமுக அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை சிறப்பிக்க ‘தகைசால் தமிழர் விருது’ உருவாக்கப்பட்டது. இந்த தகைசால் தமிழர் விருது முதன் முதலாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்பட்ட ₹10 லட்சத்தையும் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. 15 நாட்களுக்கு பிறகு வேலூர் சிறைக்கு மாற்றியது. இதனால் 15 நாட்களில் தேர்வு எழுத இருந்த சங்கரய்யா படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

The post சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Freedom ,Marxist ,Sankaraya ,Mu. K. ,Stalin ,Chennai ,Marxist Party ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...