×

வேலூரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

*மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

வேலூர் : வேலூரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மாநகருக்கு ஈடாக வேகமாக வளர்ந்து வரும் நகரான வேலூர் நகரில் ஒரு பக்கம் வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும், அதனால் ஏற்படும் விபத்துகளும் என்றால் மறுபக்கம் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் சுற்றி வரும் தெருநாய்களும், அதனுடன் கலந்து சுற்றி வரும் மாடுகளும் வாகன ஓட்டிகளை அல்லாட வைப்பதுடன், விபத்துகளுக்கும் காரணமாகின்றன. குறிப்பாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-மங்களூரு சாலை, கிரீன் சர்க்கிள் பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன.

அதேபோல் காட்பாடி சாலை, ஆற்காடு சாலை, பெங்களூரு சாலை, ஆரணி சாலையிலும் மாடுகள் சுற்றி வருகின்றன. கால்நடைகள் நகரின் குப்பைமேடுகளிலும், சாலையோரங்களிலும் கிடக்கும் குப்பைகளை கிளறி தங்களின் பசியை ஆற்றும், அதேநேரத்தில் அதிகாலை நேரத்திலும், மாலை வேளையிலும் தவறாமல் தங்கள் எஜமானர்களை தேடி சென்று, தங்கள் மடியில் சுரக்கும் பாலை கறந்த பின்னர் மீண்டும் சாலைகளில் தஞ்சமடையும். இதன் மூலம் அவற்றின் உரிமையாளர்களுக்கு செலவின்றி பால் மூலம் வருமானம் மட்டும் தொடர்ந்து கிடைக்கும்.

இந்த வருவாயை கருத்தில் கொள்ளும் சாலைகளில் மாடுகளை திரிய விடும் அவற்றின் உரிமையாளர்கள், அதனால் ஏற்படும் விபத்து, போக்குவரத்து சிக்கல் என சமூகத்துக்கு ஏற்படும் இடைஞ்சல்களை கருத்தில் கொள்வதில்லை. இந்த நிலையில் சாலைகளில் சுற்றி வரும் மாடுகளால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களை கால்நடைகள் விரட்டி சென்று மோதி காயங்கள் ஏற்படுத்துதல் மற்றும் கால்நடைகள் விரட்டும்போது அவர்கள் தவறி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்கிறார்கள். மேலும் அவற்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் கால்நடைகள் போக்குவரத்துக்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதற்கு முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Dinakaran ,
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து...