×

கடலில் பிளாஸ்டிக் கழிவு கலப்பதை தடுப்பது ஒவ்வொருவரின் கடமை

*கலெக்டர்  ஸ்ரீதர் பேச்சு

நாகர்கோவில் : கடலில் பிளாஸ்டிக் கழிவு கலப்பதை தடுப்பது ஒவ்வொருவரின் கடமை என்று பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட கூடத்தினை திறந்து வைத்து கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பள்ளம்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து அவற்றிலிருந்து உரம் தயாரிக்கும் கூடத்தினை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரத்தோடும் பேணி பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டினை முன்மாதிரி மாநிலமாக மாற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்போடு தூய்மைப்பணி உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மட்கும் குப்பைகள், மட்கா குப்பைகள் என குப்பைகளை பிரித்தெடுத்து அவற்றில் நெகிழி குப்பைகளை பிரித்து மறுசுழற்சி பொருட்களாகவும், சாலைகள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடலோரப் பகுதிகளில் நெகிழி குப்பைகளை கொட்டுவதனால் கடல்நீர் மாசு ஏற்படுவதோடு, கடலில் வாழும் மீன்கள் நெகிழி துகள்களை உட்கொள்வதால் நாம் உண்ணும் மீன்களின் வாயிலாக நச்சுக்கள் பரவுகிறது. எனவே நாம் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

மேலும் நமது சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குப்பைகளையும் சேகரித்து வழங்குவதன் மூலம் நமது சுற்றுப்பகுதியும் தூய்மையாகும். பள்ளம்துறை ஊராட்சி பகுதியினை தூய்மை ஊராட்சியாக மாற்றுவதற்காக தனியார் லேக்டெக்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடன் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை கூடம் திறந்து வைக்கப்பட்டு, 3 குப்பை வண்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பைகளை வீடுகள் தோறும் சேகரிப்பதற்காக 4 ஆயிரம் குப்பை டப்பாக்கள் பெறப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 2 குப்பை டப்பாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதியிலுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் நமது மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, ஜெயசேகரன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் தேவபிரசாத், கானம் லேக்டெக்ஸ் நிறுவனர் டாக்டர் குரியன் ஆபிரகாம், பள்ளம் துறை ஊராட்சி தலைவர் ஆன்றனி, பங்குத்தந்தை சகாய ஆன்றனி, ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கனகபாய், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கடலில் பிளாஸ்டிக் கழிவு கலப்பதை தடுப்பது ஒவ்வொருவரின் கடமை appeared first on Dinakaran.

Tags : Sridhar ,Nagercoil ,Pallamthurai panchayat ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...