×

5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை பீகார் வாலிபருக்கு தூக்கு, 5 ஆயுள்: எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கடந்த 3 மாதங்களுக்கு முன் 5 வயது சிறுமியை கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபருக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா சூர்ணிக்கரை பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஜூலை 28ம் தேதி இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் ஆலுவா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான அஸ்பாக் ஆலம் (28) என்பவர் கடத்தி சென்று , பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறுமியின் உடலை மீட்டனர். அஸ்பாக் ஆலம் மீது கொலை, கடத்தல், பலாத்காரம் உள்பட 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அஸ்பாக் ஆலம் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்த அக்டோபர் 4ம் தேதி விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கிய 30வது நாளான கடந்த 4ம் தேதி அஸ்பாக் ஆலம் குற்றவாளி என நீதிபதி சோமன் அறிவித்தார்.

அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களும் நிரூபணமாகியுள்ளது என்றும், தண்டனை விவரம் 14ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி சோமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் அஸ்பாக் ஆலமிற்கு ேநற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. கொலை உள்பட அனைத்து குற்றங்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதால் அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி சோமன் அறிவித்தார். மேலும் இவருக்கு பல்வேறு பிரிவுகளில் 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. அஸ்பாக் ஆலம் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

* குழந்தைகள் தினத்தில் கிடைத்த நீதி
நேற்று குழந்தைகள் தினம். சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு குழந்தைகள் தினத்தன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் சமூக நீதியை நிலை நாட்டியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

* 26 நாளில் விசாரணை… 35 நாளில் குற்றப் பத்திரிகை…. 110வது நாள் தண்டனை
இந்த வழக்கில் போலீசார் மிகவும் துரிதமாக செயல்பட்டு விசாரணையை முடித்தனர். நீதிமன்றமும் அசுர வேகத்தில் செயல்பட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜூலை 28ம் தேதி சிறுமி, அஸ்பாக் ஆலத்தால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த அன்றே அஸ்பாக் ஆலம் கைது செய்யப்பட்டான். ஆனால் மறுநாள் தான் குற்றத்தை ஒப்புக்கொண்டான். சம்பவம் நடந்த 35வது நாளிலேயே போலீசார் எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அக்டோபர் 4ம் தேதி விசாரணை தொடங்கியது. 26 நாளில் விசாரணை அதிவேகத்தில் முடிவடைந்தது. குற்றம் நடந்த 99வது நாளில் அஸ்பாக் ஆலம் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. 110வது நாளான நேற்று அஸ்பாக் ஆலத்திற்கு மரண தண்டனையும் 5 ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி சோமன் உத்தரவிட்டார். ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

The post 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை பீகார் வாலிபருக்கு தூக்கு, 5 ஆயுள்: எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Ernakulam ,POCSO ,Thiruvananthapuram ,Ernakulam, Kerala ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!