×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபாவளி விடுமுறை நாட்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

*நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபாவளி விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்திருக்கிறது. கார்த்திகை தீபத்திருவிழா இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுவாமி திருவீதியுலா வாகனங்கள் சீரமைப்பு, தேர் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அதற்கான முன்னேற்பாடுகள் விரிவாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தீபாவளி விடுமுறை நாட்களான கடந்த 3 நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்துக்கு திரண்டனர்.

தீபாவளி தினமான நேற்று முன்தினம் கோயிலில் கூட்டம் சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று வெகுவாக அதிகரித்தது. அதனால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை தொடங்கி இரவு 9 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தொடர்ந்து தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதையொட்டி, பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வழக்கம்போல் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் மறுதினம் அமாவாசை தினத்தன்று கவுரி நோன்பு மேற்கொள்வது வழக்கம். அதையொட்டி, பூஜை பொருட்கள் வாங்க திருவண்ணாமலை கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது.

மேலும், இந்த நாளில் நகைகள் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதால் நகை கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பொதுமக்களின் கூட்டத்தால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. நகரின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலை தூர நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் நிறைந்திருந்தது.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள தர்மராஜா கோயில், முத்து மாரியம்மன் கோயிலில் கவுரி நோன்பு கொண்டாடப்பட்டது.இதில் மணமாகிய பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை வேண்டியும் விரதம் மேற்கொண்டனர்.சேத்துப்பட்டு பழம்பேட்டை திரவுளபதி அம்மன் கோயில், முத்துமாரியம் கோயில்களில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விரதமிருந்து நோன்பு பாத்திரத்தில் நோன்பு கயிறு, வெற்றிலை பாக்கு, பழம், அம்மனுக்கு உகந்த அதிரசம், பழங்கல், தீபாராதனை பொருட்களுடன் பட்டுசேலை உடுத்தி கலந்து கொண்டனர்.

செய்யாறு: செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாக்களில் உள்ள சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் விரதம் இருந்த கேதாரி கவுரி அம்மனுக்கு விரதம் இருந்து சுமங்கலி பெண்கள் குடும்பத்துடன் சென்று சிவாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகள் அம்மனுக்கு துதி பாட தொடர்ந்து விரதம் இருந்து பெண்களும் துதி பாடி அம்மனை தரிசித்தனர்.ஆரணி: ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளியுடன் கூடிய அமாவாசையொட்டி நேற்று கேதார கவுரி நோன்பு நேற்று கடைபிடிக்கப்பட்டது.

பூஜை பொருட்களை வாங்க அனைத்து கடைகளிலும் கூட்டம் அலை மோதியது. ஆரணி டவுன் காந்திசாலை, சத்தியமூர்த்தி சாலை, புதிய, பழைய பஸ்நிலையங்கள் உள்ளிட் முக்கிய வீதிகளில் ஒரேநேரத்தில் அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் ஆரணி டவுன் பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் 50க்கும் மேற்பட்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபாவளி விடுமுறை நாட்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple ,Diwali ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை...