×

மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு: தண்ணீர் வெளியேற்ற உடனடி நடவடிக்கை

 

தூத்துக்குடி, நவ. 11: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிஎன்டி காலனி 12வது தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, ராஜீவ்நகர், கதிர்வேல்நகர், நிகிலேசன்நகர், பால்பாண்டிநகர் மற்றும் மில்லர்புரம் ஹவுசிங்போர்டு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால், மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை கடந்த முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து ஆய்வு செய்து, இதுபோன்று வரும் காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். முதலமைச்சர் உத்தரவின்படி கடந்த முறை மழைநீர் தேங்கிய பகுதிகள் மட்டுமல்லாது பிற பகுதிகளிலும் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

6 மற்றும் 7வது வார்டு பகுதியில் கடல் மட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவது தொடர்பாக புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாலை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலை பணிகள் மற்றும் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அவைகளும் விரைந்து முடிக்கப்பட்டு வரும் காலங்களில் மாநகரில் எங்கும் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் கண்ணன், வட்ட செயலாளர் ரவீந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு: தண்ணீர் வெளியேற்ற உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mayor Jaganperiyaswamy ,Thoothukudi ,PNT Colony ,Thoothukudi Municipal Corporation ,12th Street ,Krishnan Koil Street, Rajivnagar, Kathirvelnagar ,Mayor ,Jaganperiyaswamy ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை...