×

சம்பள நிலுவை தொகை, இயந்திர பராமரிப்பு பணி சர்க்கரை ஆலைகளுக்கு அரசு ரூ.63.61 கோடி முன்பண கடன்

சென்னை: வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2022-23 அரவை பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆம்பூர், தேசிய மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு பற்றாக்குறையின் காரணமாக ஆலையின் அரவை இயங்காமல் இருந்து வருகிறது.

மேற்கண்ட சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்த காலத்திற்குரிய சம்பளம் நிலுவை மற்றும் இதர சட்டப்பூர்வ நிலுவைத் தொகையை வழங்குமாறு தொடர்ச்சியாக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் முன்வைத்த கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணையுடன் பரிசீலனை செய்து மூன்று சர்க்கரை ஆலைகளுக்கு முன்பண வழிவகை கடனாக ரூ.21.47 கோடி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கும், எம்.ஆர்.கே, சேலம், திருப்பத்தூர், திருத்தணி, வேலூர் மற்றும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு இயந்திர பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவைப்படும் செயல்பாட்டு பண மூலதன தொகைக்கு முன்பண வழிவகை கடனாக ரூ.42.14 கோடி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மேற்கண்ட சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் வரும் பருவத்தில் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சம்பள நிலுவை தொகை, இயந்திர பராமரிப்பு பணி சர்க்கரை ஆலைகளுக்கு அரசு ரூ.63.61 கோடி முன்பண கடன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Agriculture-Farmers Welfare ,Arawa ,
× RELATED சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தீ...