×

முத்துக்கள் முப்பது: ஆனந்தம் பொங்கும் அற்புத தீபாவளி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

தீபாவளி 12-11-2023

1. முன்னுரை

தித்திக்கும் தீபாவளி வந்துவிட்டது எத்திசையிலும் இந்தத் தீபாவளிப் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபம் என்றால் ‘‘விளக்கு’’ என்று பொருள். ‘‘ஆவளி’’ என்றால் ‘‘வரிசை’’ என்று பொருள். வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். சில பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாக இருக்கும். ஆனால், தீபாவளி அப்படி அல்ல; இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் பல பகுதிகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் குதூகலமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையின் பல்வேறு சிறப்புகளை நாம் பார்க்கலாம்.

2. வைதீகமும் லௌகீகமும் இணைந்த பண்டிகை

சில பண்டிகைகள் வைதீகமானவை; சில பண்டிகைகள் லௌகீகமானவை; சில பண்டிகைகள் சிறுவர்களுக்கு சந்தோஷம் தரும். சில இளைஞர்களுக்கு சந்தோசம் தரும். சில பண்டிகைகள் பெரியவர்களுக்கு சந்தோஷம் தரும். சில பண்டிகைகள் பெண்களுக்கு சந்தோசம் தரும். ஆனால், வயது, பால், இனம், மொழி என்ற எந்த வேறுபாடும் இன்றி, எல்லோருக்கும் குதூகலம் தரும் ஒரே பண்டிகை தீபாவளி தான்.

3. எல்லாம் கலந்த பண்டிகை

பெரும்பாலும் பண்டிகைகள் உபவாச விரதங்களாக இருக்கும். அதில் வழிபாடு மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆனால், உபவாசம், வழிபாடு இவற்றோடு ஆடல், பாடல் என அமர்க்களமாக உள்ள பண்டிகை தீபாவளிதான். தீபாவளி பண்டிகையில் நாவுக்குச் சுவையான இனிப்பு உண்டு அழகான ஆடை அணி கலன்கள் கொண்டு புத்துணர்வு தரும் உறவு தேடல்களும் விளையாட்டுக்களும் உண்டு. இத்தனையும் கலந்ததுதான் தீபாவளி.

4. தீபாவளிக்கு முன்னும் பின்னும்

ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி தான் தீபாவளி நாள் அதைத் தொடர்ந்து அமாவாசை வந்துவிடும் தொடர்ந்து முருகனுக்குரிய கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்துவிடும் தீபாவளி குதூகலத்துடன் இறை வழிபாட்டிற்குரிய விரதங்களும் இணைந்து இருப்பது தீபாவளியின் மிகப்பெரிய சிறப்பாகச் சொல்லலாம். வைணவர்களுக்கு கண்ணனைக் கொண்டாடும் நாள் சைவர் களுக்கு பாற்கடலைக் கடைந்த போது சிவபெருமான் ஆலகால விஷம் உண்டு உலக உயிர்களைக் காப்பாற்றிய நாள். பெண்களுக்கு கேதாரகௌரி எனப்படும் தீபாவளி நோன்பு விரதம் இருக்கும் நாள். இப்படி ஒவ்வொருவருக்கும் தீபாவளி என்பது ஒவ்வொரு காரணத்திற்காக இருந்தாலும் எல்லோருக்குமான பண்டிகையாக இருக்கிறது தீபாவளி.

5. ஞாயிறு வரும் தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாள். ஒவ்வொரு மாதத்தின் பெயரும் சூரியன் எந்த ராசியில் இருக்கிறாரோ அதை பொறுத்துதான் இருக்கிறது. தீபாவளி மாதமான துலா ராசியில் சூரியன் இருக்கிறார். பொதுவாக அங்கே அவர் நீசம் அடைவார். அதாவது சூடு தணிந்து பலகீனமாக இருப்பார். ஆனால் இந்த ஆண்டு குருவின் பார்வையில் இருப்பதால் அந்த தோஷம் பெருமளவு நீங்குகிறது. இதனால் உலகம் சுபிட்ஷம் பெரும். தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

6. சுவாதியில் வரும் தீபாவளி

பாற்கடலை கடைந்து அமுதம் வெளிவந்த நாள்தான் தீபாவளி. அன்று வைத்யோ நாராயண ஹரி: என்றபடி பகவான் நாராயண அம்சமான தன்வந்திரியும் மருந்து மூலிகைகளோடு தோன்றினார். அதனால்தான் உடலுக்கு நன்மை செய்யும் தீபாவளி மருந்து என்கின்ற அவுஷதத்தை அன்று சாப்பிடுகின்றோம் இந்த அமுதம் கிடைத்தநாளில் தான் ராகு, கேது என்ற இரண்டு சர்ப்ப கிரகங்கள் தோன்றின. அதில் ராகுவுக்கு உரிய சுவாதி நட்சத்திரத்தில் தீபாவளிப் பண்டிகை வருவது மிகவும் சிறப்பு.

துலாம் ராசியில் இடம் பெறும் சுவாதி நட்சத்திரம். மிகவும் பிரகாசமான நட்சத்திரம். தீபாவளியில் தீபம் எனும் ஒளியைத்தானே ஏற்றுகின்றோம். ஒளிமயமான நட்சத்திர நாளில், நாமும் தீபமேற்றுவது சிறப்பு அல்லவா. எனவே சுவாதி நட்சத்திர நாளில் எண்ணெய் குளியல் செய்து முறையாக இறைவனை தீபமேற்றி வழிபட்டு கொண்டாடினால் சர்ப்ப தோஷங்களினால் ஏற்படுகின்ற துன்பங்கள் விலகும்.

7. சூரிய வழிபாடு

தீபாவளி என்பது அந்தகாரத்தை (இருள்) விலக்கும் நாள். பொதுவாக தீபாவளி நாளில் விடிகாலையில் நீராட செய்ய வேண்டும் அது நல்ஓரையாக இருப்பது விசேஷம். இந்த முறை பிரம்ம முஹூர்த்தமான 4.00 முதல் 5.00 மணி வரை குரு ஓரை இருக்கிறது. அந்த முகூர்த்தத்தில் எழுந்து நீராடி விட்டு, தீபமேற்றி சூரியன் உதிக்கும் போது கிழக்கே நின்று சூரிய நமஸ்காரம் செய்வது என்பது பிரதானமானது. சூரியனை தரிசிக்கும் பொழுது வெளிச்சத்தை தரிசிக்கின்றோம் அப்படி தரிசிப்பதால் இருள் விலகுகிறது அதைப் போல மனதில் உள்ள கவலை, அச்சம், குழப்பம் முதலிய இருட்டு தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன் நீராடி, சூரியனை தரிசிப்பதன் மூலமாக தீரும்.

8. கங்கையும் தீபாவளியும்

தீபாவளி என்றாலே முதல் கேள்வி கங்கா ஸ்னானம் ஆச்சா என்பது தான். தீபாவளியின் பிரதான நிகழ்வே கங்கை நீராட்டம் தான். கங்கை வடநாட்டில் அல்லவா ஓடுகிறது. தீபாவளி அன்று வடநாட்டில் ஓடுகின்ற கங்கையில் எப்படி நீராட முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் பெரியவர்கள் என்ன சொல்லி இருக்கின்றார்கள் என்றால், தீபாவளி அன்று நீங்கள் எந்த நீரில் நீராடினாலும், அந்த நீரில், அன்று மட்டும் கங்கையின் புனிதம் நிறைந்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். தீபாவளி அன்று நீராடும் போது கங்கையை நினைத்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பாகீராதி சுக-தாயினி மாதஸ்-தவ ஜல-மஹிமா நிகமே க்யாதஹ்
நாஹம் ஜானே தவ மஹிமானம் பாஹி க்ருபாமாயி மாம்-அஜ்ஞானம்

பாகீரதி, சுகங்களை தருபவளே, உனது புனிதம் தெரியும், உன் பெருமையை நான் அறியேன். அடியேனை நீ காக்க வேண்டும். என் பாபங்களை நீக்கி, எனக்கு கருணை காட்டி, என் அறியாமை எனும் இருளை நீக்க வேண்டும். (பகீரதன் கொண்டு வந்ததால் கங்கைக்கு பாகீரதி என்று ஒரு பெயர்)

9. கங்கைக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணுபுராணம். ஜானவி, திரிபதாகை, பாகீரதி, தேவிநதி, மந்தாகினி, வரநதி, உமைசுர நதி, தசமுகை நதி, சிர நதி, தெய்வ நதி, விமலை என பல்வேறு திருப்பெயர்களால் கங்கையைச் சிறப்பிக்கின்றன புராணங்கள். தீபாவளி கங்கா ஸ்நானத்தின்போது இந்தத் திருப்பெயர்களை ஒருமுறை உச்சரித்தாலே நம் பாவங்கள் நீங்கும்; புண்ணியம் பெருகும். இறக்கும் தருவாயில் வாயில் விடும் தீர்த்தம் கங்கையாக கருதப்படும்.

யமனிடமிருந்து மீட்கும் சக்தி உன் ஒரு துளி கங்கையின் புனித நீருக்குத்தான் இருக்கிறது’ என்கிறார் மகாகவி காளிதாசன். இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கங்கையின் தோற்றமும் பெருமையும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி, கங்கை நீரில் கரைந்தால் அந்த மனிதன் சொர்க்கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்’’ என்கிறது மகாபாரதம்.

10. பெயரைச் சொன்னாலே போதும்

தீபாவளி அன்று யாரும் ‘‘பண்டிகை ஆயிற்றா?’’ என்று கேட்பதில்லை. ‘நீராடி விட்டீர்களா?’’ என்றும்கேட்பதில்லை. ‘‘கங்கையில் நீராடி விட்டீர்களா?’’ (கங்கா ஸ்னானம் ஆச்சா) என்று தான் கேட்கிறார்கள். பதில் சொல்லும் பொழுதும் ‘‘கங்கையில் நீராட்டம் ஆயிற்று’’ என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு என்ன காரணம் என்று சொன்னால், கேட்டாலும் பதில் சொன்னாலும் கங்கை என்கிற வார்த்தை நம்முடைய வாயிலிருந்து வந்து விட வேண்டும்.

அது புனித நீராடலுக்குச் சமம். இதை பெரியாழ்வார் ஒரு பாசுரத்திலே அழுத்தமாக சொல்லுகின்றார்.
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதிபோய் எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கைகங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல் கைதொழநின்ற கண்டம்என்னும் கடிநகரே.பூஜை செய்யும் பொது, இந்தப் பாசுரத்தை சொல்லி ஆரத்தி காட்டுங்கள். கங்கா ஆரத்திக்குச் சமம்.

11. தீபாவளியன்று சேவிக்க வேண்டும்

கங்கை நீராட்டம் என்பது சரி; ஆனால் தீபாவளி ஐப்பசி மாதத்தில் (துலா) அல்லவா வருகிறது. ஐப்பசி மாத புனித நீராட்டம் துலாஸ்நானம் என்று சொல்லப்படும் காவிரி நீராட்டத்துக்கு பெருமை பெற்றது. காவிரியின் கரையில் தானே வைணவர்களுக்கு ‘‘கோயில்’’ என்று வழங்கப்படும் திருவரங்கமும், சைவர்களுக்கு கோயிலான சிதம்பரமும் அமைந்திருக்கிறது. எனவே தீபாவளி அன்று காவேரியில், குறிப்பாக அம்மா மண்டபத்திலோ, இல்லை கும்பகோணத்திலோ, இல்லை மாயவரத்தில் துலா கட்டத்திலோ நீராடி, திருவரங்கநாதரையோ, சார்ங்கபாணி, சக்ரபாணியையோ, பரிமளரங்க நாதரையோ சேவிக்க வேண்டும். இந்த மூன்று தலங்களிலும் தீபாவளி மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.

12. திருவரங்கத்தில் தீபாவளி

தீபாவளி என்றாலே ஜாலி தான். திருவரங்கத்தில் பெருமாளும் அன்று ஜாலி அலங்காரத்தில் கொண்டாடுகிறார். ஜாலி அலங்காரம் என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் மேளதாளங்கள் முழங்க, நாகஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் சமர்ப்பிப்பது ஆகும். தீபாவளி அன்று பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து, புதிய பட்டாடை அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

அன்று ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும், கிளி மண்ட பத்துக்கு எழுந்தருளச் செய்த பின் சிறப்புத் திருமஞ்சனம் நடை பெறும். உற்சவரான நம் பெருமாள் புறப்பட்டு சந்தன மண்டபத்துக்கு வந்ததும் வழிபாடுகள் நடைபெறும். அதற்குப் பின், அவர் ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கே பெருமாளுக்கு விசேஷமான ‘ஜாலி அலங்காரம்’ செய்வர்.

13. கும்பகோணத்தில் சார்ங்கபாணி பெருமாள் கோயிலில் தீபாவளி

பெரும்பாலும் தீபாவளி அன்று அமாவாசையும் சேர்ந்து வந்துவிடும். அப்படி இருந்தாலும் கூட நரக சதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்துக்கு முன்னாலே எண்ணெய் தேய்த்து நீராடுவது என்பது அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதே தினம் அமாவாசை இருந்தால் அன்றைக்கு நாம் முன்னோர்களுக்கு நீத்தார் கடனும் இயற்ற வேண்டும். தீபாவளி அமாவாசையில் குடந்தை சார்ங்க பாணி பெருமாள், தன்னுடைய பக்தருக்காக சிராத்தம் செய்வதாக ஒரு வரலாறு இருக்கிறது. தன்னை நம்பிய பக்தனை எப்படி பெருமாள் அபிமானிக்கிறார் என்பதற்கான கதை அது. அந்த பக்தர் லட்சுமி நாராயணன். அவருடைய சிலை ஒன்றும் கோயில் வடமேற்கு பிரகாரத்தில் உள்ளது. அது என்ன கதை. தீபாவளி அமாவாசையில் பெருமாள் அவருக்கு ஏன் சிராத்தம் செய்ய வேண்டும்?

14. கோபுரம் கட்டியவருக்காக பெருமாள் செய்யும் சடங்கு

இந்த பக்தர் தம் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் சார்ங்கபாணி கோயிலின் திருப்பணிகளிலேயே செலவிட்டு வந்தவர். பெருமாளின் பேரில் தீவிர பக்தி கொண்டிருந்த அவர் மிகவும் சிரமப்பட்டு கோயிலின் ராஜ கோபுரத்தைக் கட்டி முடித்தார். ஒரு தீபாவளி தினத்தன்று திருநாடு அடைந்த அவருக்கு ஈமச் சடங்குகள் செய்யக் குழந்தைகள் இல்லை. பெருமாள் ஒரு உறவினர் வேடத்தில், தானே இருந்து இறுதிச் சடங்கு களைப் செய்தார். அன்றைய நாள் கோயில் நடை அடைக்கப்பட்டு மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்தபோது, பெருமாள் ஈரவேட்டியுடன், மாற்றிப் போடப் பட்டபூணூலுடன், தர்ப்பைகள் அங்குமிங்கும் கிடக்க காட்சி அளித்தார். திகைத்த பட்டர்களுக்கு விஷயம் புரிந்தது. அதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று, உச்சிக்காலத்தில், பெருமாள் தன் பக்தருக்காக சிராத்தம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் காணமுடியாது. தன் உண்மையான பக்தனுக்காகக் கடவுள் எவ்வளவு தூரமானாலும் இறங்கி வந்து சேவை சாதிப்பார் எனப்புரிய வைக்கும் அரிய நிகழ்வு இது. அடுத்து பகவான் விஷ்ணுதானே சிராத்தத்தை
காக்கும் தேவதை.

15. எல்லா திவ்ய தேசங்களிலும் திருவிளக்குகள், திருமஞ்சனங்கள்

பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றாகவும், இந்திரனால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட சிறப்பாலும், தில்லை திருச்சித்ரகூடத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சேவை சாதிக்கிறார். தீபாவளி உற்சவம் இத்தலத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும். காலை திருவிளக்குகள் சமர்ப்பித்து புதிய திருப்பரிவட்டங்கள் ஆடைகள் சாத்தி, பெரிய பெருமாள் தொடங்கி பலிபீடம் வரையில், தாயார், மடை பள்ளி நாச்சியார் என எல்லா மூர்த்திகளுக்கும் திரு மஞ்சனம் நடைபெறும்.

அதன் பிறகு காலசந்தி பூஜை நடைபெறும். அன்று அமாவாசையாக இருந்தால் அமாவாசை புறப்பாடு இரவில் நடத்தப்படும். சில நேரங்களில் தீபாவளி சதுர்த்தியிலும், அமாவாசை மறுநாளும் வரும். அப்படி வரு கின்ற பொழுது தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை அன்று பிராகார புறப்பாடு நடத்தப்படும். கடையரங்கம் என்று போற்றப்படும் திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலிலும், திருவேந்திரபுரத்திலும், ஸ்ரீமுஷ்ணத்திலும், பற்பல வைணவ திவ்ய தேசங்களிலும் திருவிளக்குகள் ஏற்றி, சிறப்பு திருமஞ்ச னங்களோடு, புத்தாடைகள் பெருமாளுக்கு சமர்ப்பித்து, தீபாவளி கொண்டாடப்படும்.

16. திருமலையில் தைல பிரசாதம்

திருமலையில், தீபாவளிக்கு முதல் நாள் இரவு எட்டு மணிக்கு, நான்கு மாட வீதிகள் வழியாக கோயில் அர்ச்சகர்கள் பெரிய `கேன்’களில் நல்லெண்ணெயைக் கொண்டு வருவார்கள். அப்போது அங்குள்ள பக்தர் களுக்கும், கோயிலில் பணியாற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கும் நல்லெண்ணெய் பிரசாதமாக விநியோகிக்கப்படும். (இந்த வழக்கம் ஸ்ரீரங்கத்திலும் உண்டு. இன்னும் சில குறிப்பிட்ட திருத்தலங்களில் உண்டு) இந்த எண்ணெயை பக்தர்கள் தீபாவளி அன்று விடியற்காலை பூஜித்து தலையிலும் உடலிலும் தேய்த்து நீராடுவார்கள். தீபாவளி அன்று காலை. ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, பங்காரு வாசல் (தங்க வாசல்) முன்பு தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். கண்டா மண்டபத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று கல்யாண உற்சவ சேவைகள் இருக்காது.

17. தீபாவளி ஆஸ்தானம்

தங்க வாசல் முன்பு, உற்ஸவ மூர்த்தி ஸ்ரீமலையப்ப சுவாமி, வைரமுடியுடன், தங்க-வைர நகைகள், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். இதை தரிசித்தாலே நமது துன்பங்கள் விலகும். திருமஞ்சன சேவை முடிந்ததும், மீண்டும் சுவாமிக்கு அலங்கார- ஆராதனைகள் நடைபெறும். அப்போது லட்டு, ஜிலேபி போன்ற பலகாரங்கள் மற்றும் தீபாவளி பட்சணங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மாலை 5 மணியளவில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின்பு, இரவு ஏழு மணிக்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்புரிவார். ஸ்வாமி ஊர்வலத்துக்கு முன் மத்தாப்பூ, வண்ண வண்ண பூத்திரி ஆகியவற்றைக் கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடுவர். திருமலையில் பட்டாசு வெடிக்கத்தடை உள்ளதால், மத்தாப்பூ கொளுத்தி சுவாமியுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். சில பக்தர்களுடன் தீபாவளி கொண்டாடும் பெருமாளை தரிசிக்க, செல்லும் வழக்கம் உண்டு.

18. ஆழ்வார்கள் பாசுரங்களில் தீபாவளி

இதைப்போல இன்னும் சில கோயில் விசேஷங்கள் பார்ப்போம். கும்பகோணம் அருகே நாச்சியார் கோயில் இருக்கிறது. அருகே சிவனுக்கும் (ஸ்ரீசித்த நாதீஸ்வரர்) கோயில் இருக்கிறது. தீபாவளிக்கு முதல் நாள் சித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து, பட்டுப் புடவை, வேஷ்டி துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை, மேளதாளத்துடன் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று, தீபாவளி சீராக வழங்குவது வழக்கம்.

தீபாவளிக்கு எத்தனையோ கதைகள் இருந்தாலும், நரகாசுரனை பகவான் கண்ணன் சத்தியபாமையோடு சென்று வதம் செய்த நிகழ்ச்சி தான் தீபாவளியின் அடிப் படைக் காரணமாகக் கருதி, ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி இருக்கிறார்கள். தீபாவளிப் பண்டிகையை முதலில் கொண்டாடியவன் நரகாசுரன் மைந்தன் பகதத்தன். பெரியாழ்வார் தன்னுடைய திருமொழியிலே மறைமுகமாகப் பாடுகின்றார்.

உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மடவன்னங்கள்நிரை கணம் பரந்தேறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர்நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம் கொலோ.இதில், ‘‘நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம் கொலோ”, என்று பெரியாழ்வார் தீபாவளியன்று நரகாசுரனை அழித்த கண்ணனை, நாவால் அழைத்து, புத்தாடை அணிந்து, பிரசாதமாக படைக்கப்பட்ட உணவை உட்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். இதனால் நரகவாசம் வராது.

19. திருமங்கை ஆழ்வார்

பாசுரத்தில் நரகாசுர வதம் பெரியாழ்வார் மறைத்து சொன்ன விஷயத்தை, திருமங்கை ஆழ்வார் நேரடியாகவே பாடுகின்றார்.

மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே.

இதில் நரகாசுர வதம் பற்றி வருகிறது. நாயகி பாவத்தில் பாடும் பாடல் இது. ‘‘பகவானே, நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்த பெருந்தேவிமார் இருக்க, இவள் (நாயகி பாவ ஆழ்வார்) ஒரு பொருளோ என்று நினைக்கிறாயோ?’’ என்பது இப்பாசுரத்தின் பொருள். தீபாளியன்று நரகாசுர வரலாற்றை நினைத்து, அவனுக்கு தீபாவளி வரம் தந்த பகவானை நினைக்க வேண்டும் என்பது கருத்து.

இராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினம் அது. அமாவாசையின் இருண்ட இரவில் மக்கள் விளக்குகளை ஏற்றி, முழு அயோத்தியையும் ‘தியாஸ்’ (மண் களிமண் பானைகள்) வரிசைகளால் அலங்கரித்தனர். ஒவ்வொரு வீட்டிலும் இனிப்புகள் வழங்கப்பட்டு, என்ற ஒரு கதை வழக்கில் இருக்கிறது.

20. பௌத்தர்கள் கொண்டாடிய பண்டிகை

இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும் கூட இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர் என்பது தீபாவளியின் இன்னொரு சிறப்பு. பவுத்தர்கள், எள்ளின் நெய்யால் பலகாரம் செய்து தீபவதி நதியில் தலைமுழுகி புதுவஸ்திரம் அணிந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து நல்லெண்ணெய் கண்டுபிடித்த ஐப்பசி மாதச் சதுர்த்தசி நாளை தீபவதி ஸ்னான நாளென வழங்கிவந்தார்கள்.

21. சமணர்கள் கொண்டாடிய பண்டிகை

சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்தார்.

பொழுது விடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி செய்தான். மகாவீரர் விடியற் காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது.

22. கேதாரகௌரி விரதம்

கேதாரகௌரி விரதம் என்பது சிவ பெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும், சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தினை அனுட்டிப்பதுண்டு. ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீஸ்வரர்’ உருவமெடுத்தார். இறைவன் ஜோதிவடிவாக நம்முள் இருக்கிறான். இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும். ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம்.

23. மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள்

மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த நாள் தீபாவளி என்பார்கள். அன்று மகாலட்மியையும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனையும் பூஜை செய்வார்கள். தீபத்திலும் எண்ணெயிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், தைலம் (எண்ணெய்) தேய்த்து நீராடி, தீபமேற்றி மகாலட்மியை வரவேற்கிறோம். தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, ஸ்ரீகாமாட்சி அம்மையையோ, மகாலட்சமியையோ போற்றி வழிபட, சர்வ மங்கலங்களும், சம்பத்துக்களும் நம்மை வந்தடையும். எத்தனை வறுமை இருந்தாலும், தீபாவளித் திருநாளில் புத்தாடை உடுத்தி, தீபமேற்றி, சுவையான உணவுகள் உட்கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறோம் அல்லவா. இனி வரும் நாள்கள் இதே மகிழ்ச்சி இருக்கட்டும் என்ற நேர்மறை எண்ணங்களுக்கான பண்டிகைதான் தீபாவளி. பணச் சுழற்சிக்கு உதவும் பண்டிகை என்பதால் பொருளாதார வல்லுநர்கள், இதை போன்ற பண்டிகைகளை வரவேற்கின்றனர்.

24. லட்சுமி குபேரன் கோயில்

இந்தியாவிலேயே லட்சுமி குபேரரருக்கு என ஒரு கோயில் சென்னையை அடுத்த வண்டலூர் அருகே ரத்தினமங்கலம் என்ற ஊரில் இருக்கிறது. இது 500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். தீபாவளி தினத்தன்று குபேரனை வழிபடுவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதால், அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கூடுவது வழக்கம். லட்சுமி குபேரன் கோயிலில், சிரித்த முகத்துடன், அன்னை லட்சுமி காட்சி அளிக்க, குபேரன் தன் துணைவியார் சித்தரிணியுடன் காட்சி அளிக்கிறார்.

சந்நதியை அடுத்து லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவகிரகங்களுக்கு தனித்தனி பிரகாரங்களும் உள்ளன. செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், குபேரனையும் தீபாவளித் திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால் வாழ்வில் வறுமை ஒழிந்து செல்வம் செழிக்கும்.

25. கூட்டமில்லாத கோயில்களே இல்லை

நகரேஷு காஞ்சி என்று சொல்லப்படும் புனிதமான காஞ்சி மாநகரத்தில் தீபாவளி தினத்தன்று காஞ்சி ஏகாம்பரநாதரும் காமாட்சி அம்பாளும் திருவீதி உலா வருவது சிறப்பான நிகழ்ச்சி. காஞ்சி காமாட்சி உற்சவர், லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன், திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, நான்கு ராஜ வீதிகளில் உலா வருவது வழக்கம். காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து சோமாஸ்கந்தர் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரநாதர் புறப்பட்டு நான்கு ராஜ வீதிகளில் தீபாவளி அன்று வருவதும் கண்கொள்ளாக் காட்சி. இதைப் போல பல சிவாலயங்களில் சுவாமி வீதி உலா தீபாவளி அன்று உண்டு. சிறப்பு வழிபாடுகளும் உண்டு.

காசியில் கங்கா ஆரத்தி மிக மிக விசேஷம். அன்னபூரணி லட்டுத்தேர் சிறப்பு. ராமேஸ்வரத்திலும் தீபாவளி அன்று சிறப்பு வழிபாடுகள் உண்டு. தீபாவளி நோன்பினை கோயிலிலுக்குச் சென்று பூஜை செய்து நிறைவு செய்வதால் எல்லா கோயில்களிலும் கூட்டம் இருக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழனி முருகன் கோயிலிலும், திருச்செந்தூரிலும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் குவியும்.

தஞ்சாவூர் மேலவீதியில் கோயில்கொண்டு, அருள்பாலித்து வரும் ஸ்ரீபங்காரு காமாட்சியம்மனுக்கு அம்மன். தீபாவளி நன்னாளில் முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு எனப் பண்டங்களை எடுத்து வந்து படையலிடுவார்கள். 11 அல்லது 21 என எண்ணிக்கையில்) பலகாரங்களை எடுத்து வந்து படையலிட்டு, அம்மனை வணங்கிப் புத்தாடை அணிந்து கொண்டால், வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும்.

26. கங்கைக்கு புனிதம் கிடைத்த ஐப்பசி அமாவாசை

மயிலாடுதுறையில் அமைந்துள்ளது ‘வள்ளலார் கோயில்’. அம்பாளின் திருப்பெயர் ஞானாம்பிகை. மூலவர் வரம் தரும் வள்ளல். (மேதா தட்சிணாமூர்த்தி) கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் பல்லா யிரக்கணக்கான மக்கள் தத்தம் பாவங்களைப் போக்க “மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி, சிவனை வழிபட்டு மீண்டும் பொலிவு பெறுகிறார்கள். ஐப்பசி அமாவாசை திருநாளில் ஈசன் இந்நதிகளுக்கு மேதா தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தந்து அருள்பாலித்தார்.

கங்கையை தன் திருமுடியில் சூடிக் கொண்டு ‘கங்கா அனுக்கிரக ஸ்ரீமேதா தட்சிணா மூர்த்தியானார். ஐப்பசி மாத அமாவாசை நாளில், இந்த புனித நிகழ்ச்சி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் நடை திறக்கப்படும் கோயிலாகும். ஆண்டுக்கு ஒரு முறை, தீபாவளியை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும். இப்படி தீபாவளியன்று பல அதிசய கோயில் நிகழ்வுகள் உண்டு.

27. தீபாவளிக் குளியல் என்பது என்ன?

மற்ற நாள்களில் நீராடுவதற்கும், தீபாவளி அன்று நீராடுவதற்கும் வேறுபாடு உண்டு. காரணம், தீபாவளிக் குளியல் என்பது புனிதமானது. பாரதத்தில் எத்தனை புண்ணிய நதிகள் இருக்கிறதோ, அத்தனை நதிகளிலும் நீராடினால் கிடைக்கும் புண்ணியம் கிடைக்கும். சகல வித ஐஸ்வரியங்களும் பெருகும்; பாவம் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சூரியனும் சந்திரனும் ஸ்வாதியில் இருக்க, நீராட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஸ்வாதியில் சூரியனும் சந்திரனும் சில வருடங்களில் சேர விட்டாலும் ஸ்வாதி நட்சத்திரம் அமைந்த துலா ராசியில் சேருகிறது அல்லவா. எனவே அன்றைய நீராட்டமும் சிறப்பு பெறுகிறது.

ஆல், அரசு, புரசு அத்தி, மாவ லிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து பின் கொதிக்க வைத்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். காய்ச்சிய நல்லெண்ணெயை உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை தேய்க்க வேண்டும். பின் கங்கையையும், மகாலட்சுமியையும் தியானித்து நீராட வேண்டும். பூஜையறையில் விசேஷ கோலமிட்டு, தாம்பூலம், பழம், தேங்காய், மலர்கள், புதிய துணிமணிகள், பட்டாசுகள், காய்ச்சிய எண்ணெய், சிகைக்காய்ப் பொடி, மஞ்சள் பொடி, இலேகியம் பட்சணங்கள், வெந்நீர் ஆகியவற்றை வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வணங்கி வழிபாடு செய்வர்.

அன்று கோ பூஜை செய்வது சகல சௌபாக்கியங்களும் தரும். பசுவுக்கு கோதுமை தவிடு, வெல்லம் கலந்து தர வேண்டும் குறைந்தபட்சம் ஒரு வாழைப்பழமாவது தந்து நமஸ்காரம் செய்ய வேண்டும் மாலையில் வீடு முழுக்க அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். புதிதாக மண முடித்தவருக்கு தலை தீபாவளி அல்லவா. மாப்பிள்ளையையும் மகளையும் கோலமிட்ட மனையில் உட்கார வைத்து குங்குமமிட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். பிறகு, நலங்கு இட்டு எண்ணெய் தேய்த்துக் குளித்துச் சுவாமியை வணங்குதல் வேண்டும். அடுத்து பெரியவர்களின் கையால் மஞ்சள் தடவிய புதுத்துணியை வாங்கி உடுத்திக்கொள்ள வேண்டும். தீபாவளியின் போது பெரியோர்களை வணங்கி அவர்களிடம் ஆசியும், வாழ்த்தும் பெறுவது அவசியமாகும்.

28. மூன்று நாட்கள் தீபாவளி

மகாவிஷ்ணுவால் (வாமன மூர்த்தி) ஆட்கொள்ளப்பட்டு பாதாள லோகம் சென்ற மகாபலி சக்கரவர்த்தி எம் பெருமானிடம் ஆண்டிற்கு ஒரு முறை தாம் பூலோகம் வரவேண்டும் என்றும், அந்த நாளில் பூலோக வாசிகள் புத்தாடை உடுத்தி, எங்கும் விளக்கேற்றி, கோலாகலத்துடன் தன்னை வரவேற்க வேண்டும் என்றும் விண்ணப்பித்தான். அந்த நாள் தான் தீபாவளி என்றும் ஒரு கதையுண்டு. எப்படியோ ஒருகதையின் அடிப்படையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதுதான் முக்கியம். காரணம் பண்டிகை என்பது மனித வாழ்க்கையின் கஷ்டங்களை குறைகிறது. மனதில் சந்தோஷத்தையும் உற் சாகத்தையும், செயலூக்கத்தையும் தருகிறது. வடநாட்டில் இன்னும் சிறப்பு. தீபாவளி பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர். (சில இடங்களில் ஐந்து நாள்களும் கொண்டாடுகின்றனர்). முதல் நாள் பண்டி கையை சோட்டா தீபாவளி (சிலு தீபாவளி) என்பர். இரண்டாம் நாள் பண்டிகையை ‘படா தீபாவளி’ (பெரிய தீபாவளி) என்பர். மூன்றாவது நாளன்று ‘கோவர்த்தன பூசை’ செய்து கண்ணப்பிரானையும் வழிபடுவர். அன்றுதான், பகவான் ஸ்ரீகிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்ததாகப் புராண நூல்கள் கூறுகின்றன.

29. ஆனந்தக் கொண்டாட்டம்தான் தீபாவளி

இனி, நிறைவாக நரக சதுர்த்தி(தீபாவளி) கொண்டாடும் அடிப்படை கதையான நரகாசுரன் கதைக்கே வருவோம். பொதுவாக சுரன், அசுரன் என்பது தனி நபர்களை குறிப்பது அல்ல. அது குணங்களைக் குறிப்பது. பாபங்களின் கூட்டத்தை அசுரன் என்றும், நல்ல குணங்களின் தொகுப்பை சுரன் அல்லது தேவன் என்றும் குறிப்பிடுவது வழக்கம். நம்முடைய மனதில், கலி தோஷத்தாலும், கர்மதோஷத்தாலும், வாழும் பூமி கர்ம பூமி என்பதினாலும், இந்த இரண்டு குணங்களும் இருப்பது இயல்பு.

பாப குணங்களைக் கண்டுபிடித்து, நாம் நாசம் செய்யாவிட்டால், அந்த குணங்களே நம்மை நாசம் செய்து விடும். பாப குணங்களை தெய்வ பலத்தாலும் மன உறுதியாலும் தான் இனம் கண்டு வெல்ல முடியும். அப்படி பாப குணங்கள் நாசம் அடைகின்ற பொழுது நம்முடைய மனதிலே, மகிழ்ச்சியும் திருப்தியும் தோன்றும்.

30. முடிவுரை

பாப குணங்களாகிய நரகாசுரனை இனம் கண்டு, கண்ணன் எனும் இறைவனின் துணை கொண்டு, வெல்வதால் இயல்பாக கிடைக்கும் ஆனந்தக் கொண்டாட்டம் தான் தீபாவளி. எது அழிய வேண்டுமோ (நரகாசுரன் எனும் பாபங்கள்) அது அழிந்து, எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்தால் அதைவிட மகிழ்ச்சியான கொண்டாட்டம் வேறு என்ன மனிதனுக்கு இருக்க முடியும்?

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது: ஆனந்தம் பொங்கும் அற்புத தீபாவளி appeared first on Dinakaran.

Tags :
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்