×

உலக கோப்பையில் நாளை 2 போட்டி: ஆஸ்திரேலியா-வங்கதேசம், பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதல்

புனே: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை 2 போட்டி நடக்கிறது. புனேவில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் 43வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. முதல் 2 போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா கடைசி 6 போட்டியிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. அரையிறுதியில் தென்ஆப்ரிக்காவுடன் மோதுவது உறுதியாகிவிட்ட நிலையில் லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் உள்ளது. மறுபுறம் வங்கதேசம் 2 வெற்றி, 6 தோல்வியுடன் 8வது இடத்தில் உள்ளது. அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் சாம்பியன் டிராபிக்கு தகுதிபெற அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பட்டியலில் 8 இடங்களில் உள்ள அணிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி போட்டியில் இலங்கை வீரர் மேத்யூசை டைம் அவுட் செய்த சர்ச்சைக்கு மத்தியில் ஷாகிப் அல்ஹசன் விலகிவிட்டார். இதனால் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியை வழிநடத்த உள்ளார். இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 19ல் ஆஸி. ஒன்றில் வங்கதேசம் வென்றுள்ளன. ஒருபோட்டி கைவிடப்பட்டுள்ளது. உலக கோப்பையில் 4 முறை மோதியதில் 3ல் ஆஸி, வென்றுள்ளது. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 8 போட்டியில் 2 வெற்றியும், 6ல் தோல்வியும் சந்தித்து அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. சாம்பியன் டிராபிக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்க வைப்பதுடன், வெற்றியுடன் நாடுதிரும்பும் முனைப்பில் உள்ளது.

மறுபுறம் பாகிஸ்தான், 8 போட்டியில் 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 10 புள்ளிகளுடன் ரன்ரேட்டிலும் சிறப்பாக உள்ளதால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் வெற்றிபெற வேண்டி உள்ளது. இதற்கு வாய்ப்பு குறைவுதான் என்றாலும் வெற்றியுடன் தொடரை முடிக்க போராடும். இரு அணிகளும் இதுவரை 91 முறை மோதி உளளன. இதில் 56ல் இங்கிலாந்தும், 32ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. 3 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் இங்கிலாந்து 4ல் வென்றுள்ளது. உலக கோப்பையில் 10 முறை மோதியதில் 5-4 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி ரத்தாகி உள்ளது.

The post உலக கோப்பையில் நாளை 2 போட்டி: ஆஸ்திரேலியா-வங்கதேசம், பாகிஸ்தான்-இங்கிலாந்து மோதல் appeared first on Dinakaran.

Tags : World Cup ,Australia ,Bangladesh ,Pakistan ,England ,Pune ,World Cup Cricket Series ,Dinakaran ,
× RELATED ரோகித், கோலி 2027 உலகக்கோப்பை விளையாடுவார்களா? : கம்பீர் பதில்