×

தீபாவளியன்று தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் தரிசனத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம், தீர்த்தம். புற்று மண் போன்ற புனித பொருட்களே பிரசாதமாக வழங்கப்படுகின்றன. பக்தர்களும் இறைவனை வணங்கி வழிபட்டு இந்தப் பிரசாதங்களை பெற்று ஆலயத்திலேயே தாங்கள் தரித்துக் கொள்வதுடன் பயபக்தியோடு தத்தம் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு ஆலயத்தில் மட்டும் தீபாவளி நாளன்று தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பிரசாதமாகக் கொடுக்கும் நடைமுறை மத்தியப் பிரதேசம், ரத்லாம் நகரில் உள்ள  மஹாலக்ஷ்மி ஆலயத்தில் உள்ளது. தங்கத்தை அரிய பிரசாதமாக வழங்கும் ஆலயம் இந்தியாவிலேயே இது ஒன்று மட்டுமே என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 52 மாவட்டங்களில் மால்வா பிராந்தியத்தில் அமைந்துள்ள ரத்லாம் மாவட்டத்தின் தலைநகரான ரத்லாம் நகரின் சாந்தினி சௌக் என்ற பகுதி இந்தியாவில் 24 கேரட் தங்க வணிகத்திற்குப் பெயர் பெற்றது. (மேலும் இங்கு தயாராகும் ராத்லாமி சேவ் என்ற ஓமப் பொடிக்கும் மற்றும் சேனைக் கிழங்கில் தயாரிக்கப்படும் கராடு என்ற வறுவலுக்கும் இந்நகரம் மிகப் பிரபலமானது). தங்கத்திற்கும் நவரத்தினங்களுக்கும் பிரபலமாக இருக்கும் இந்நகரம் ரத்தினபுரி என்று அழைக்கப்பட்டு, பின்னர், முகலாய மன்னர் ஔரங்கசீப்புடன் போரிட்டு உயிர் நீத்த ரத்தன் சிங் நினைவாக ரத்லாம் என்ற பெயர் பெற்றது.

இந்த ரத்லாம் நகரின் லக்ஷ்மண் புரா பகுதியில், மானக் சௌக் என்ற இடத்தில் மகாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. கருவறையில் நடுநாயகமாக ஸ்ரீமஹாலட்சுமி, இடப்புறம்  சரஸ்வதி தேவி, வலப்புறம்  விநாயகர் ஆகியோர் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ஆலயம் சிறிதாக இருப்பினும், இந்தியத் திருநாட்டில் தீபாவளித் திருநாளன்று பக்தர்களுக்கு தங்கத்தைப் பிரசாதமாக அளிக்கும் ஒரே ஆலயம் என்ற சிறப்பு பெற்ற அரிய ஆலயமாக திகழ்கிறது. வட இந்தியப் பாணியில் அமைந்த கூம்பு போன்ற விமானத்தோடு கட்டப்பட்டுள்ளது. முன்புறம் விசாலமான மண்டபத்துடன் கூடிய ஆலயக் கருவறையில் ஸ்ரீமஹாலட்சுமி, சரஸ்வதி, விநாயகர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசியாக ஒரேநாள் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை கோலாகலமாக ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தீபாவளிக் கொண்டாட்டங்கள் துவங்கி விடுகின்றன.

துவாதசி நாள் பசுவையும் கன்றையும் வழிபடும் கோவத்ஸ துவாதசி (நந்தினி விரதம்) என்றும், அடுத்த நாளான தனத் திரயோதசி அல்லது தன்தேராஸ், தன்வந்த்ரி ஜயந்தி என்றும், தீபாவளி நாளை நரக சதுர்த்தசியாகவும், மறுநாள் கேதார கௌரி விரதம் மற்றும் மஹாலட்சுமி பூஜை நாளாகவும், அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை மற்றும் அன்னக்கூட் என்றும் ஆறாவது நாள் யமத் துவிதீயை, துவிதியை அல்லது பையா தூஜ் என்றும் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை நாட்களில் லட்சுமி குபேர பூஜை மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. தேவலோகப் பொக்கிஷக் காப்பாளரான குபேரனையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தருகின்ற  மஹாலட்சுமியையும் ஒரு சேர வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீபாவளித் திருநாளுக்கு மறுநாள் வடமாநிலங்களில்  லட்சுமி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் குபேரனையும், மகாலட்சுமியையும் வழிபடுகிறார்கள். அன்றுதான் வியாபாரத் தலங்கள் மற்றும் அலுவலகங்களில் புது வருட வரவு செலவு கணக்குளைத் துவக்குகின்றனர்.

ரத்லாம் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரத்லாம் ஸ்ரீமஹாலட்சுமி தேவியை வணங்கும் பொருட்டு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு சிறிதும் பெரிதுமான தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இவ்வாறு ஓராண்டில் ஏராளமாகச் சேர்ந்துவிடும் ஆபரணத் தொகுப்பிலிருந்து ஒரு பகுதியை மீண்டும் தீபாவளி அன்று பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கும் ஐதீகம் இங்கு உள்ளது. பெறப்பட்ட காணிக்கைகள் அனைத்திற்கும் முறையான கணக்குகள் தயாரித்து, அவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவை எடுத்து பக்தர்களுக்கு தீபாவளி அன்று பிரசாதமாக அளிக்கும் அரிய வழக்கம் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

தீபாவளிக்கு முன்பாக தன்தேராஸ் என்ற திரயோதசி நாளன்று எண்ணற்ற பக்தர்கள் தாங்கள் புதிதாக வாங்கிய தங்க வைர நகைகள், பாரம்பரியமான தங்களிடமுள்ள நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுக் கட்டுகள் ஆகியவற்றை இந்த ஆலயத்திற்குக் கொண்டு வந்து கொடுத்து, தக்க ரசீதுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டபின் இந்த நகைகள், பணம் அனைத்தும் கருவறையில் உள்ள ஸ்ரீமஹாலட்சுமியைச் சுற்றிலும் அழகாக அடுக்கி அலங்கரிக்கப்படுகின்றன. மீண்டும் இந்த நகைகள் பணத்தை உரிமையாளர்கள் தீபாவளி நாளன்று திரும்பவும் பெற்றுச் செல்கின்றனர். தன்தேராஸ் (திரயோதசி திதி) நாளன்று அதிகாலை மூன்று மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு விடுகிறது.

ஆலயம் திறப்பதற்கு முன்பாகவே எண்ணற்ற பக்தர்கள் தங்கள் கரங்களில் ரூபாய் நோட்டுக் கட்டுக்கள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றை ஏந்தி வெளியே வரிசையில் நிற்கின்றனர். இவ்வாறு தேவியிடம் சமர்ப்பித்துப் பெற்றுக் கொண்டால் தங்கள் வாழ்க்கையில் செல்வவளம் பெருகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. தீபாவளி அன்று ஸ்ரீமகாலட்சுமி ஆலயத்தில் தரப்படும் தங்கப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்தை நாடி வருகின்றனர்.

மேலும், ஆலய முன் மண்டபம், கருவறை போன்ற இடங்களில் எங்கு பார்த்தாலும் மலர் மாலைகள் அலங்காரங்களுக்குப் பதில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களே தொங்கவிடப்படுகின்றன. இந்நாளில் பக்தர்கள் இங்கு தேவியிடம் வைக்கும் பொருட்டு அளிக்கும் நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 100 கோடிக்கும் அதிகமானது என்று கூறப்படுகிறது.

விலை உயர்ந்த நகைகள், நவரத்தினங்கள், புதிய ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் நடுவே அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாலட்சுமியின் அரிய காட்சியை பக்தர்கள் ஸ்ரீலட்சுமி தர்பார் என்றும், ஸ்ரீகுபேர தர்பார் என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தன்தேராஸ் அன்று பெறப் படும் அனைத்து நகைகளையும், பணத்தையும் தீபாவளி வரை பாதுகாத்து, தீபாவளி அன்று மீண்டும் உரியவர்களிடம் சேர்ப்பிப்பது ஆலய நிர்வாகத்தின் மகத்தான பொறுப்பாக அமைகிறது. இதுகாறும் நகைகளோ, பணமோ காணாமற் போனதாகவோ, திருடுபோனதாகவோ நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை என்று நிர்வாகத்தினர் பெருமையோடு கூறுகின்றனர். இந்த அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீமகாலட்சுமி மண்டல் சேவா கமிட்டி என்ற அமைப்பு சிறப்பாக செய்து வருகிறது.

பக்தர்கள் நகைகளையும், பணத்தையும் சமர்ப்பிக்கும் நாள் முதல் திரும்ப அளிக்கும் வரை ஆலயத்திற்குள்ளும், வெளியேயும் மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்
படுகின்றன. ஆலய வளாகம் முழுவதும் உள்ள சிசிடிவி கருவிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அருகிலேயே மானக் சௌக் காவல் நிலையமும் உள்ளது. காவல்துறை அதிகாரிகளும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளி நாளன்று மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் கூடிவிடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பிரசாதமாக சிறிய தங்கம், நாணயம், அல்லது சிறிய நகை ஸ்ரீமகாலட்சுமியின் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை தங்கள் வீட்டில் கொண்டு வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களிடையே காணப்படும் உறுதியான நம்பிக்கை. அவர்கள் அந்த தங்கத்தை விற்கவோ, வேறு நகையாகச் செய்வதோ கிடையாது. தாங்கள் பெறும் தங்கத்தின் பண மதிப்பைக் காட்டிலும் இங்கு வந்து போகும் பணச் செலவு அதிகமாக இருப்பதைக் கூட பொருட்படுத்தாது பல தொலைதூர ஊர்களிலிருந்து பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத் தலைநகரான ரத்லாம் பேருந்து நிலையத்திலிருந்து 3கி.மீ. தொலைவில் ஸ்ரீமகாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. நடை திறப்பு: காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கிறது. தீபாவளி நாட்களில் இரவு முழுவதும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. ஆலய முகவரி:  மகாலட்சுமி மந்திர், மானக் சௌக் பிரதான சாலை, மானக் சௌக், லக்ஷ்மண்புரா, ரத்லாம், மத்தியப் பிரதேசம் 457001.

தொகுப்பு: அனந்த பத்மநாபன்

The post தீபாவளியன்று தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில் appeared first on Dinakaran.

Tags : Ratlam Mahalakshmi Temple ,India ,
× RELATED இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின்...