×

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பிடிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.5.83 லட்சம் சிக்கியது

சேலம்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மாரியம்மாள் ரவி உள்ளார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களாக வெங்கடேஷ், உமாசங்கர் உள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பிடிஓ அலுவலகத்திற்குள் திடீரென சென்று சோதனை செய்தனர். அப்போது, ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாளின் கணவர் ரவி மற்றும் கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் என 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ஒன்றிய குழு தலைவரின் கார், பிடிஓ.,க்களின் கார்களையும் சோதனை செய்தனர்.

பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர். இதில், ரூ.5.83 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 300 மற்றும் முக்கிய ஆவணங்கள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளராக கவுதமன் (55) உள்ளார். அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்புதுறையினர் கணக்கில் வராத ரூ.95 ஆயிரத்து 800ஐ பறிமுதல் செய்தனர். அவர் நெல்லையில் தங்கியுள்ள அறையில் நேற்று ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர்: திருவாரூரில் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராக சென்னையை சேர்ந்த வசந்தகுமார் (45) உள்ளார். இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.76 ஆயிரத்து 220 பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உதவி ஆணையர் வசந்தகுமார், ஜீப் டிரைவர் சரவணன், ஓய்வு பெற்ற பின்பும் உதவியாளராக இருக்கும் ராமகிருஷ்ணன் (63) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பிடிஓ அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.5.83 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Khadaiyambatti PTO ,Salem district ,Salem ,Mariammal Ravi ,AIADMK ,president ,Kadaiyambatti panchayat union committee ,district ,Panchayat Union District ,Khadaiyambatti PTO Office ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்