×

நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பொதுவாக பகவான் அவதாரம் ஏன் எடுக்கின்றான் என்பதற்கான காரணத்தை கீதையிலே சொல்லுகின்றான். தர்மத்தை அழியாது காப்பாற்றுவதற்காகவும் சாதுக்கள் நலியும் போது அவர்களைக் காக்கவும் துஷ்டர் களுடைய செயல் எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தவும் அழிக்கவும் பகவான் நேரடியாக யுகங்கள் தோறும் அவதாரம் செய்கின்றான் என்பதை கண்ணன் பகவத் கீதையிலே அருளுகின்றார். இந்த அவதார வரிசையை ஆழ்வார்களும் பலவாறு கொண்டாடுகிறார்கள். வைகுந்தத்திலே தன்னுடைய இருப்பை வைத்து விட்டு இந்த உலகத்தின் இருள் நீக்க ஒரு ஒளியாக தோன்றுகின்றான் என்று நம்மாழ்வார் அவதார விசேஷத்தைக் கொண்டாடுகின்றார்.

சிறந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்

இந்த அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு அதில் மிகச்சிறந்த அவதாரம் சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். பொதுவாக தன்னுடைய பக்தனான பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக நரசிம்ம அவதாரத்தை பகவான் எடுத்தார் என்று கூறுவர். அதற்காக மட்டுமே பகவான் அவதாரம் எடுக்கவில்லை.

பிரகலாதனை மறைவாக நின்று காப்பாற்றி அருளிய இறைவன், நிறைவு நிலையிலும் கூட அவனைக் காப்பாற்றி இருக்கலாம். அவனுக்கு மிகவும் தொல்லையைத் தந்த இரணியனைக் கூட சங்கல்பத்தினால் அழித்து தர் மத்தை நிலைநாட்டி இருக்கலாம். ஆனால் பிரகலாதனுடைய வாக்கைக் காப்பாற்றுவதற்காக பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்தான்.

திட்டமிடாத அவதாரம்

பொதுவாக பகவான் அவதாரம் எடுக்கின்ற பொழுது பாற்கடலில் யோக நிலையில் யோசிப்பான். ஒரு அவதாரத்தை எப்படி எடுத்து, எப்படி நிறைவு செய்வது என்பதைக் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வான். நரசிம்ம அவதாரம் தவிர மற்ற அவதாரங்கள் அப்படி எடுக்கப்பட்ட அவதாரங்கள். உதாரணமாக மச்ச அவதாரம் எடுத்த பொழுது சத்திய விரதன் என்கிற அரசனிடத்திலே ஊழிக்கால முடிவிலே உலகமெல்லாம் நீரில் மூழ்கி இருக்கின்ற பொழுது, தான் ஒரு பெரிய மீனாக வருவேன்; அதிலே நீ ஏறிக்கொள்ள வேண்டும்; என்றெல்லாம் அவதார ரகசியத்தைக் குறித்து முன்கூட்டியே சொல்லிவிடுகின்றான். கூர்ம அவதாரத்தில், தான் ஒரு ஆமையாக வடிவம் எடுத்து பாற்கடலை கடைவதற்கு உதவுவேன் என்கின்றான்.

தீர்மானித்தது யார்? இரணியனா? பிரகலாதனா?

எல்லா அவதாரங்களும் ஏதோ ஒரு மனிதரின் பிரார்த்தனையாலோ, ஒரு பக்தனின் பிரார்த்தனையாலோ எடுக்கப்பட்ட அவதாரங்கள். நரசிம்ம அவதாரத்தில் இப்படிப்பட்ட முன் திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்கு பிள்ளையாக, எந்த இடத்தில் பிறக்கப் போகிறோம் என்பதைக் குறித்து பகவான் திட்டமிடவில்லை. எங்கே பிறக்கப் போகிறோம், எதில் பிறக்கப் போகிறோம், எத்தனை நாழிகை தன்னுடைய அவதாரம் இருக்கப்போகிறது என்பதைக் குறித்தும் பகவான் சிந்திக்கவில்லை.

உண்மையில் நரசிம்ம அவதாரத்தைக் குறித்து தீர்மானித்தவன் பிரகலாதன் அல்ல. இரணியன் தான். அவன் தான், ‘‘உன்னுடைய பகவான் ஹரி இந்த தூணில் இருக்கிறானா?” என்று, எந்த இடத்தில் இருந்து பகவான் தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிக்கிறான். ‘‘ஆம்; இருக்கிறான்” என்று பிரகலாதன் சொல்ல அவனுடைய சத்திய வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தூணையே தன்னுடைய தாயாகக் கொண்டு, பகவான் அவதரிக்கிறான். எனவே மற்ற அவதாரங்களை விட நரசிம்ம அவதாரம் சிறப்புடையது.

மனிதனும் மிருகமும்

பொதுவாகவே தசாவதாரங்களின் சிறப்பு பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்து உண்டு. பகவான் முதலில் எடுத்த அவதாரம் மச்ச அவதாரம். முதலில் உலக உயிர்கள் நீரில் இருந்து தான் தோன்றின என்பது அறிவியல் கோட்பாட்டின் அடிப்படை. தண் ணீரில் வாழுகின்ற மீனாக அவதாரம் செய்த பகவான், அடுத்த அவ தாரத்தில் நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற ஆமையாக அவதரித்தான்.

அதற்குப் பிறகு, நிலத்தில் வாழ்கின்ற வராகமாக அவதாரம் செய்தான். இந்த மூன்று அவதாரங்களும், விலங்கின் நிலையிலேயே செய்யப்பட்ட அவதாரங்கள். அடுத்த பரிணாமமான மனித வடிவம் எடுப்பதற்கு முன், மனிதனும் விலங்கும் கொண்ட ஒரு அவதாரமாக எடுத்த அவதாரம் தான் நரசிங்க அவதாரம். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்றால் விலங் குகளின் அரசன். இந்த இரண்டும் கலந்த கலவையாக எடுக்கப்பட்ட அவதாரம் தான் நரசிம்ம அவதார்.

எங்கும் இருப்பவன்

விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் நாமம் பகவான் ஹரியைக் குறிப்பிடுகிறது. அந்த ஹரி நரஹரி என்று ஆச்சாரியார்கள் விளக்கம் அளிக்கின்றார்கள். காரணம் விஷ்ணு என்றால் எங்கும் பரந்து இருக்கின்றவன். எல்லா இடங்களிலும் கரந்து உறைபவன். அவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்; வானிலும் இருப்பான்; மண்ணிலும் இருப்பான். இந்த நிலை தான் ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே

என்று பாடினார்.

ஏன் இரண்யன் பெருமாளிடம் கோபம்கொண்டான்?

இரண்யாட்ஷன், இரண்யகசிபு என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். அவர்களுள் இரண்யாட்ஷன் வராக மூர்த்தியால் வதம் செய்யப் பட்டான். அதனால் விஷ்ணுவிடம் துவேஷம் அடைந்த இரண்யகசிபு பிரம்ம தேவனைக் குறித்து கடுமையான தவம் செய்து, தனக்கு எந்த விதத்திலும் மரணம் வரக்கூடாது என்று வரம் வாங்கினான். தனக்கு கீழே மரணம் நேரக்கூடாது. மேலே மரணம் நேரக்கூடாது. பகலிலும் மரணம் நேரக்கூடாது. இரவிலும் மரணம் வரக்கூடாது. உள்ளும் மரணம் கூடாது. வெளியிலும் மரணம் கூடாது. உயிருள்ள பொருளாலும் மரணம் கூடாது. உயிரற்ற பொருளாலும் மரணம் கூடாது. மனிதர்களால் மரணம் கூடாது. விலங்குகளால் மரணம் கூடாது.

தேவர்களால் மனிதன் மரணம் கூடாது. நோயால் மரணம் கூடாது. என்று ஒரு மரணம் எப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படி எந்த வகையிலும் தனக்கு மர ணம் ஏற்படக்கூடாது என்பதோடு, தன்னுடைய சக்தியையும் ஆயுளையும் அதிகப்படுத்திக் கொள்ளும் வரங்களைப் பெற்றான். ஆனால் எத்தனை புத்திசாலித்தனமாக வரம் வாங்கினாலும் கூட, அந்த புத்தி சாலித்தனம் யாரால் கொடுக்கப்பட்டதோ, அவர் அதைவிட புத்தி சாலித்தனமாக அதை கையாளுவார் என்பதைக் காட்டுவது தான் நரசிம்ம அவதாரத்தின் செய்தி. இரண்யகசிபுவின் மனைவியின் பெயர் கயாது.

பிள்ளையின் பெயர் பிரகலாதன். விஷ்ணுவிடம் திடமான சிந்தனையோடு பக்தி செலுத்தினான் என்பதை யஜூர் வேத அஷ்டகம், பிரஹலாதோ ஹவை காயாயவ: என்று சொல்லுகின்றது.

திருவல்லிக்கேணி தெள்ளிய சிங்கம்

இரண்யகசிபுவுக்கு பிரகலாதனைத் தவிர, கிலாதன், அனுகிலாதன், சம கிலாதன் என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். இதிலே பிள்ளை என்று போற்றப்படுவதாக இருந்தவன் பிரகலாதன். பள்ளியில் படித்து வந்தவுடன், “நீ படித்தது என்ன?” என்று தந்தையான இரண்யன் கேட்கின்ற பொழுது, “எதைத் தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாக ஆகுமோ, அதைத் தெரிந்து கொண்டேன்’’ என்று பிரகலாதன் பதில் சொல்கிறான். ‘‘என்னுடைய பெயரைத் தெரிந்து கொண்டாயா?’’ என்று கேட்கிறான்.

“இன்று இருந்து நாளை சாகும் உன்னுடைய பெயரைத் தெரிந்து, இந்த ஆத்மாவுக்கு என்ன லாபம் கிடைக்கும்? நான் சொல்வது சர்வ உலகத்தையும் படைத்து, காத்து, அழிக்கக்கூடிய பரம்பொருளான மன் நாராயணனைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லியவுடன் கோபம் ஏற்படுகின்றது. தன்னுடைய பிள்ளை என்றும் கருதாமல்அழிக்க நினைக்கின்றான். அழிக்க நினைத்த அவனே அழிந்து போனான் என்பதை திருவல்லிக்கேணி பாசுரத்திலே திருமங்கையாழ்வார் மிக அற்புதமாக விளக்குகின்றார்.

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம்
ஒள்ளியவாகிப் போத வாங்கு அதனுக்கு ஒன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணி கண்டேனே

இன்றைக்கும் திருவல்லிக்கேணி திவ்ய தேசத்திலே தெள்ளிய சிங்கம் என்கிற திருநாமத்தோடு நாம் பெருமாளை தரிசனம் செய்யலாம். தெள் ளிய சிங்கம் என்பது தெளிசிங்கமாகி அவருடைய பெயரிலேயே தெளி சிங்கர் வீதி திருவல்லிக்கேணியில் இருக்கிறது.

ஆயுஷ் ஹோம மந்திரத்தில் நரசிம்மன்

ஆயுஷ் ஹோமம், ஆயுள் அபிவிருத்தி அடையச் செய்யப்படுகின்ற ஹோமம் ஆகும். இதற்காக ஆயுஷ் சூக்தம் ஓதப் படுகிறது. ஆயுஷ் ஹோம மந்திரம் பல மந்திரங்களைக் கொண்டது. அதிலே பகவான் “நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும், மிருத்யுவின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்; அகால மரணம் ஏற்படாமல் இருக்க வேண்டும்” என்ற பிரார்த்தனைகள் வருகிறது. அதிலே பகவானைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, ஸுவர்ண ரம்பக் கிருஹம் அர்சயம் என்கிற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத் தினாலான வாழைமரம் போல உள்ள தூண் யாருக்கு பிறந்த வீடாக மாறியதோ, அங்கே தோன்றியவன் என்று கூறுகிறது. இப்படி தங்கத் தூணியில் இருந்து பிறந்தவன் நரசிம்மன் என்பதால் இந்த மந்திரத்தினுடைய அதிதேவதையாக நரசிம்மன் இருக்கிறார் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.

பக்தர்களுக்குப் பிரியமான உருவம்

நரசிம்மன் பயங்கரமான ரூபத்தை எடுத்து இரண்யனை வதம் செய்தார். ஆனால், இந்த ரூபம் பக்தர்களுக்கு பிரியமானதாக இருக்கிறது. அழகானதாக இருக்கிறது. அதனால் தான் ஆழ்வார்கள் இந்த ரூபத்தை வர்ணிக்கின்ற பொழுது அழகியான்தானே அரிவுருவம் தானே என்று வர்ணிக்கிறார்கள். தீயவர்களுக்கு பயங்கரமானதாகத் தெரிகின்ற ரூபம், பக்தர்களுக்கும், சரணாகதர்களுக்கும் ஆச்சரியமான, ஆனந்தமான உரு வமாக இருக்கிறது.

ஒருமுறை பட்டர், நரசிம்ம அவதாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லுகின்ற பொழுது, பயங்கரமான ரூபம் பார்த்து குழந்தை பிரகலாதன் பயப்படவில்லையா? நரசிம்மரின் கோபம் பிரகலாதன் முதலியவர்களை தாக்கவில்லையா என்கின்ற கேள்வி எழுந்த பொழுது பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக் கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார்.

முதல் பக்தன் பிரஹலாதன்
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. “முதலில் பாகவதனை நினை; பிறகு பகவானை நினை” என்கிற மரபு உண்டு. நரசிம்மப் பெருமாள் ‘‘நீ என்ன வரத்தைக் கேட்கிறாய். கேள் தருகிறேன்’’ என்று, மடியில் குழந்தை பிரகலாதனை அமர்த்திக் கொண்டு கேட்க, வைராக்கியமிக்க சின்னஞ் சிறுவனான பிரகலாதன், ‘‘எனக்கு வேறு என்ன வேண்டும்? எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை ஒரு கணமும் மறவாத வரத்தை நீ அருள வேண்டும்’’ என்றான். இந்த வரத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது. பிரகிருதி மாயையால், இறைவனுடைய அருள் வெள்ளம் பாய்ந்தால் ஒழிய, இறைவனை நினைப்பது கூட சிரமம் தான். இதைத்தான் “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என்று சொன்னார்கள்.

தந்தைக்கு நல்ல கதி வேண்டும்

பிரகலாதன் இறைவனை மறக்காத வரத்தைக் கேட்டவுடன், நரசிம்ம பெருமாள் அவனை உச்சி முகர்ந்து, ‘‘உனக்கு சர்வ மங்கலங்களும் உண்டாகட்டும். ஒரு மன்வந்திர காலம் இந்த பூவுலகில் ஆட்சி செய்து பிறகு என்னை வந்து அடைவாயாக’’ என்றார். அதோடு அவன் இரண்டாவதாக ஒரு வரத்தைக் கேட்டான். “தன்னைப் படைத்த பெருமானிடமே மோதி, பகவத் அபச்சாரமும், பாகவத அபச்சாரமும் ஒருங்கே செய்த தன்னுடைய தந்தை ஹிரண்யன் நல்ல கதி அடைய வேண்டும். அவரை மன்னிக்க வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தான். அதையும் நரசிம்ம பெருமாள் கனிவோடு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.

போட்டியில் ஜெயித்த நரசிம்மர்

திருமாலின் அவதாரங்களுக்குள் போட்டி நடந்ததாம் 1). மத்ஸ்ய, 2). கூர்ம, 3). வராஹ, 4). நரசிம்ம, 5). வாமன, 6). பரசுராம, 7). ஸ்ரீராம, 8) பலராம, 9). கிருஷ்ண, 10). கல்கி அவதாரங்களை, வரவழைத்தார்! முதல் சுற்றில். மத்ஸ்ய, கூர்ம, வராஹ அவதாரங்களும் முறையே. மீன், ஆமை, பன்றி ஆகிய மிருகங்களின் வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது! எனக் கூறி நிராகரித்து விட்டாராம் ஆழ்வார்.

நரசிம்மருக்குத் தலை சிங்கம்போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருந்ததால் அவரை நிராகரிக்கவில்லை! “மகாபலியிடம் சிறிய பாதத்தைக் காட்டி மூவடி நிலம் கேட்டுவிட்டுப் பெரிய பாதத்தால் மூவுலகையும் அளந்தவர்! ”என்ற குறை வாமன மூர்த்தியிடம் இருந்ததாம். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும், கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால், அதுவும் குறையாயிற்று.

நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை

பலராமன், கண்ணன் இருவரும் “ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர்தான் பங்கேற்கலாம் என்று சொல்ல ‘‘தம்பிக்காகப் பல ராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால்,’’ நீங்கள் அவதரித்தபின் போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அவரையும் நிராகரித்துவிட்டார்! திரு மழிசையாழ்வார். இறுதியாக, நரசிம்மர், இராமர், கிருஷ்ணர் கலந்து கொண்டார்கள்.

மூவரையும் பரீட்சித்து நரசிம்மர் தான் அழகு! என்று தீர்ப்பளித்தாராம் ஆழ்வார். இராமர் அனைத்து நற்பண்பு களும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினார். கண்ணன் அனைவரையும் மயக்கிய அழகர் என்பதிலும் சந்தேகமில்லை! ஆனாலும் ஆபத்தில் ஓடோடி வந்து காப்பாற்றியதுதானே அழகு. பிரகலாதனுக்காகத் தூணைப் பிளந்து வந்து காத்த பெருமாள் நரசிம்மர்; எனவே அவரே அழகு!” என்று தீர்ப்பளித்தார் திருமழிசையாழ்எஸ். விஜயலட்சுமிவார்.

‘‘அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிரளிக்கும் வித்து’’

கம்பன் இராமாயணத்தை அங்கீகரித்த அழகிய சிங்கர்

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு நரசிம்மப் பெருமாளின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் தன்னுடைய கம்பராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கடைசியில் அவர் திருவரங்கத்தில் தாயார் சந்நதி முன் உள்ள மண்டபத்தில் புலவர்களைக் கூட்டி கம்பராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த நாற்கால் மண்டபத்துக்கு இடது புறம் நரசிம்மருடைய சந்நதி இருக்கிறது. அது சற்று மேடான பகுதியில் இருப்பதால் அவருக்கு மேட்டு அழகிய சிங்கர் என்கிற திருநாமம். கம்ப ராமாயணத்தில் இரணியன் வதைபடலத்தில் நரசிம்மரின் தோற்றத்தை கம்பர் உணர்ச்சிகரமாக வர்ணித்தபொழுது, மேட்டழகிய சிங்கர் சிரக்கம்பம் செய்து அங்கீகரித்தார் என்பது வரலாறு.

தொகுப்பு: எஸ். விஜயலட்சுமி

The post நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை appeared first on Dinakaran.

Tags : Narasimhan ,
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்