×

கோமுகி அணையில் 9000கனஅடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சின்னசேலம், நவ. 9: கல்வராயன்மலையில் பெய்த கனமழையின் காரணமாக கோமுகி அணையில் இருந்து 9000கனஅடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 46 அடியாகும். இந்த அணையின் முதன்மை கால்வாய் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும், ஆற்று பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. மேலும் கோமுகி அணை பாசனத்தின் மூலம் சுமார் 40 கிராமங்கள் மற்றும் சின்னசேலம், கள்ளக்குறிச்சி தாலுகாவை சேர்ந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கோமுகி அணை திறந்ததில் இருந்து ஆற்றிலும், முதன்மை கால்வாயிலும் அதிகளவில் நீர் செல்கிறது. கோமுகி அணையின் நீர்மட்டமும் கடந்த 2 நாட்களுக்கு முன்புவரை 38 அடியாக இருந்தது.

இதனால் கோமுகி அணை சுற்று வட்டார விவசாயிகள் வயலை உழுது நெல் நடவுக்கு தயார் செய்து வரும் நிலையில் சிலர் பயிர் நடவும் செய்து வருகின்றனர். 12,000 ஏக்கர் சம்பா நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கல்வராயன்மலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மலையில் இருந்து அணைக்கு வரும் கல்பொடை, மாயம்பாடி உள்ளிட்ட ஆறுகளில் இருந்து வினாடிக்கு 9000 கனஅடியாக உயர்ந்தது. இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து அணை நிரம்பியது.

இதையடுத்து கோமுகி அணை பொதுப்பணித்துறையினர் அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 9000 கனஅடியையும் ஆற்றில் திறந்துவிட்டனர். இதனால் கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் நேற்று அதிகாலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 1000 கனஅடியானது. அதனால் அணைக்கு வரும் நீரை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களான கச்சிராயபாளையம், வடக்கநந்தல், ஏர்வாய்பட்டிணம், மட்டிகைகுறிச்சி, சடையம்பட்டு, சோமண்டார்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ இறங்கவோ கூடாது என்று சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post கோமுகி அணையில் 9000கனஅடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Komuki Dam ,Chinnasalem ,Kalvarayanmalai ,Dinakaran ,
× RELATED தொடர்ந்து வெயில் வாட்டிய நிலையில் கல்வராயன்மலையில் திடீர் மூடுபனி