×

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: நாடு முழுவதும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணிகளில் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வருகிற 18ம் தேதி (சனி), 19ம் தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல் துறை உயர் அதிகாரிகளின் மண்டல மாநாடு சென்னையில் இந்திய ஆணையத்தால் மறுஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கெடுப்பு மற்றும் அதற்கான ஆயத்த பணிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஹோட்டல் ராடிசன் புளூவில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு சென்னையில் இன்று ஆலோசனை கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு