×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 453 பேர் எஸ்ஐ பணிக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்பு

*அதிரடிப்படை ஐஜி நேரில் கண்காணிப்பு

வேலூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் மாநிலம் முழுவதும் நடந்தது. இதில் தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித்தேர்வில் பங்கேற்க 20 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு நடந்தது.
இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த 5,669 பேர் எழுதினர். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கி இன்று முடிகிறது.

அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. அதிகாலை முதலே தேர்வாளர்கள் நீண்ட வரிசையில் கத்திருந்தனர். காலை 6 மணியளவில் அவர்களை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர். முதல் நாளான நேற்று உயரம், மார்பளவு, 1500 மீட்டர் ஓட்டமும் நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வை அதிரடிப்படை ஐஜி முருகன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி மணிவண்னண் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், 100, 400 மீட்டர் ஓட்டம் நடக்கிறது.இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள், இன்று இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது. வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி மணிவண்ணன் மேற்பார்வையில் ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிகள், காவல் அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வேலூர் தேர்வு மையத்தின் கண்காணிப்பு அலுவலராக அதிரடிப்படை ஐஜி முருகன் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்கு வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். வெளிநபர்கள் தேர்வு மையத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

359 பேர் தேர்ச்சி

எஸ்ஐ பதவிக்கான எழுத்துத்தேர்வில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுவிண்ணப்பதாரர்கள் 300 பேர், காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 213 பேர் என 513 பேர் நேற்று வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த ஆவண சரிபார்ப்பு மற்றும் முதல்கட்ட உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பொது விண்ணப்பதாரர்கள் 250 பேர், காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 155 பேர் என 453 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களில் பொது விண்ணப்பதாரர்கள் 204 பேர், காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் 155 பேர் என 359 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் இன்று நடைபெறும் 2ம் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 204 பொது விண்ணப்பதாரர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர்.

The post வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 453 பேர் எஸ்ஐ பணிக்கான உடற்தகுதி தேர்வில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vellore, Tirupattur, Ranipet districts ,Vellore ,Tamil Nadu Uniformed Staff Selection Board ,Vellore, Tirupattur, ,Ranipet ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில்...