×

அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா: அதிர்ச்சியில் உறைந்தது ஆப்கான்

மும்பை, நவ. 8: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 39வது லீக் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியின் பிடியில் சிக்கிய ஆஸ்திரேலியா, கிளென் மேக்ஸ்வெல்லின் நம்ப முடியாத அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியதுடன் அரையிறுதிக்கும் முன்னேறியது.வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. குர்பாஸ் 21 ரன், ரகமத் 30 ரன், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி 26 ரன், அஸ்மதுல்லா உமர்ஸாய் 22 ரன், முகமது நபி 12 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஒரு முனையில் பார்ட்னர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், அபாரமாக விளையாடிய இப்ராகிம் ஸத்ரன் சதம் விளாசி அசத்தினார். ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 91 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. இந்த நிலையில், மேக்ஸ்வெல் கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை ஆப்கான் வீரர்கள் கோட்டை விட்டனர். ஒரு முறை டிஆர்எஸ் கேட்டு அவுட்டில் இருந்து தப்பிய மேக்ஸி… கேப்டன் கம்மின்ஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்தார்.

காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் தவித்த நிலையிலும், அதிரடியை தொடர்ந்த அவர் இரட்டை சதம் விளாசி சாதனை படைக்க, ஆஸ்திரேலியா 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேக்ஸ்வெல் 201 ரன் (128 பந்து, 21 பவுண்டரி, 10 சிக்சர்), கம்மின்ஸ் 12 ரன்னுடன் (68 பந்து, 1 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நம்ப முடியாத வெற்றியால் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேற, அருமையான வாய்ப்பை வீணடித்த ஆப்கான் அதிர்ச்சியில் உறைந்தது. மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா: அதிர்ச்சியில் உறைந்தது ஆப்கான் appeared first on Dinakaran.

Tags : Australia ,Afghanistan ,Mumbai ,ICC World Cup ODI ,Afghanistan… ,Dinakaran ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்