×

அழுகிய ரோஜா மலர்களை அகற்றும் பணி துவக்கம்

 

ஊட்டி, நவ.8: ஊட்டி ரோஜா பூங்காவில் அழுகிய ரோஜா மலர்கள் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவில் 4 ஆயிரம் வகை ரோஜா செடிகளும், 40 ஆயிரம் ரோஜா செடிகளும் உள்ளன. மேலும் வனப்பகுதிகளில் காணப்படும் ரோஜா செடிகள் மற்றும் நாட்டு வகை ரோஜா மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இப்பூங்காவை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இம்முறை மழை சற்று குறைந்த நிலையில், ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் அதிகமாக காணப்பட்டன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. நாள்தோறும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள பெரும்பாலான மலர் செடிகளில் உள்ள ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்து வருகின்றன. அழுகி உதிரும் மலர்களை அவ்வப்போது அகற்றும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பூங்காவில் மலர்கள் குறைந்தே காணப்படுகிறது.

The post அழுகிய ரோஜா மலர்களை அகற்றும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Rose Park ,Nilgiris ,Dinakaran ,
× RELATED ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள்