×
Saravana Stores

ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள்

*சுற்றுலா பயணிகள் பரவசம்

ஊட்டி : ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.ஊட்டி விஜயநகரம் பகுதியில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் ரோஜா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 4 ஆயிரம் வீரிய ரகங்களை கொண்ட 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.

மேலும் ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை சீசனின் போது இப்பூங்காவில் நடத்தப்படும் ரோஜா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்வார்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான கோடை சீசன் நிறைவடைந்த நிலையில், தற்போது வார இறுதி நாட்களில் மட்டுமே ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதற்கிடையே கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில், ஊட்டி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமடையவில்லை. அவ்வப்போது மட்டும் ஒரிரு நாட்கள் மழை பொழிவு உள்ளது. கனமழை இல்லாத நிலையில் ரோஜா பூங்காவில் பல்வேறு வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், ‘‘ஜூன் மாதத்தில் கனமழை பெய்யும் போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் ரோஜா மலர்கள் உதிர்ந்தும் அழுகியும் போய் காணப்படும். தற்போது அவ்வப்போது மட்டும் மழை பெய்கிறது. இந்த மழை ரோஜா செடிகள் வளர்ச்சிக்கு போதுமானதாக உள்ளதால் பூங்காவின் மேற்புறமுள்ள பாத்திகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்’’ என தெரிவித்தனர்.

The post ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Park ,Ooty ,Ooty Rose Park ,Horticulture Department ,Ooty Vijayanagaram ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்