×

நாடாளுமன்ற உள்துறை குழு முன்பு வைக்கப்பட்ட புதிய குற்றவியல் நீதிமுறை சட்ட மசோதா ஏற்பு: வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடிவு

புதுடெல்லி: நடைமுறையில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற உள்துறை குழு ஏற்றுக் கொண்டதால், வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட (கடந்த 1860ம் ஆண்டு) இந்திய குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (கடந்த 1872ம் ஆண்டு), இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நாகரிக் சன்ஹிதா மசோதா, பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்‌ஷவா மசோதா ஆகிய 3 மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

இந்த மூன்று மசோதாக்களும் தற்போது அமலில் உள்ள மூன்று சட்டங்களுக்கும் மாற்றாக இருக்கும். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டத் தொடரில் தெரிவித்தார். புதிய மசோதாக்கள் சட்டமாக ஆகும்போது, மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி தற்போது நடைமுறையில் உள்ள தேசத் துரோக சட்டம் ரத்தாகும். ஆனால் அதற்கு மாறாக, வேறு வடிவில் அமல்படுத்தப்படும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ தேசத் துரோக குற்றம் குறித்தும், அதற்கான தண்டனை குறித்தும் விவரிக்கிறது. இதற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் தேசத் துரோகத்துக்கான தண்டனை குறித்து பிரிவு 150ல் விளக்கப்பட்டுள்ளது. அதில், தேசத் துரோகம் என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. பிரிவு 150-ல் வேண்டுமென்றோ, தெரிந்தோ, வார்த்தைகளாலோ, பேச்சின் மூலமாகவோ, எழுத்தின் மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, மின்னணு தகவல் தொடர்பு மூலமாகவோ, வேறுவிதமாகவோ பிரிவினை பேசுவது, ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபடுவது, பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பது ஆகியவை இந்திய இறையாண்மைக்கு, ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலாக கருதப்படும். இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். புதிய மசோதாவின்படி கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாரதிய சுரக்‌ஷ சன்ஹிதா மசோதா (புதிய குற்றவியல் நீதிமுறை சட்டம்) மூலம் இந்திய குற்றவியல் நீதி முறையில் 313 மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பு 90 சதவீதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 4 ஆண்டுக்கு முன்பே இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மேற்கண்ட மூன்று புதிய மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய மசோதாக்களின் ெபயர்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பதால், ஏற்கனவே ஆங்கிலத்தில் இருந்தது போன்று ெபயர்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், புதிய மசோதாக்கள் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகளை நாடாளுமன்ற உள்துறை குழு ஏற்றுக் கொண்டதாக மூத்த அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தற்போது வரை நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக 3 புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மூன்று புதிய மசோதாக்கள் குறித்த அறிக்கையை நாடாளுமன்ற உள்துறைக் குழு ஏற்றுக்கொண்டது.

இதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் (டிசம்பர்), முன்மொழியப்பட்ட மூன்று புதிய குற்றவியல் நீதிமுறை சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இந்த புதிய சட்டத்தில் 50 திருத்தங்களை உள்துறை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த திருத்தங்களை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், புதிய மசோதாக்களை எளிதாக நிறைவேற்ற முடியும்’ என்று கூறினர்.

The post நாடாளுமன்ற உள்துறை குழு முன்பு வைக்கப்பட்ட புதிய குற்றவியல் நீதிமுறை சட்ட மசோதா ஏற்பு: வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற முடிவு appeared first on Dinakaran.

Tags : Home Affairs Committee of the Parliament ,New Delhi ,Parliamentary Home Committee ,
× RELATED வரிச்சலுகை பெறுவதற்கு ஆப்பு வீட்டு...