×

வாக்களிக்கும் முன் நினைவில் கொள்ளுங்கள் காங்கிரஸ் வாக்குறுதிகளை பதிவிட்ட ராகுல்காந்தி

நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, ​​​​சத்தீஸ்கரில் நம்பகமான காங்கிரஸின் அரசாங்கம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் இருக்கக்கூடிய 90 சட்டமன்ற தொகுதிகளில், 20 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மிசோரத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் உள்ள பல இடங்கள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடக்கும் இடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. 5,304 தேர்தல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 25,249 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரில் இன்று முதல் கட்டமாக 600 வாக்குச்சாவடிகளில் சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களுக்கு, தங்கள் கட்சி அளித்த உத்தரவாதங்களை நினைவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், “நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, ​​​​மீண்டும் ஒருமுறை சத்தீஸ்கரில் காங்கிரஸின் நம்பகமான அரசாங்கம் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார். அதோடு, “சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் உத்தரவாதங்களான விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஏக்கருக்கு 20 குவிண்டால் நெல் கொள்முதல், நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, நெல்லுக்கு ரூ.3,200 எம்எஸ்பி, 200 யூனிட் மின்சாரம் இலவசம், சிலிண்டருக்கு ரூ.500 மானியம், கேஜி முதல் பிஜி வரை இலவசக் கல்வி, ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை, 17.5 லட்சம் குடும்பங்களுக்கு வீடு, ஜாதி கணக்கெடுப்பு என என்ன வாக்குறுதி அளித்தாலும், நாங்கள் நிறைவேற்றுவோம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post வாக்களிக்கும் முன் நினைவில் கொள்ளுங்கள் காங்கிரஸ் வாக்குறுதிகளை பதிவிட்ட ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Chhattisgarh ,Rahul Gandhi.… ,Dinakaran ,
× RELATED பணக்காரர்களின் நலனுக்கு...