×

ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகளை ராஜினாமா செய்தவருக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகளை ராஜினாமா செய்து, சார் பதிவாளராக பணியாற்றுபவருக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பழங்காநத்தம் சார்பதிவாளர் அமீர் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வேளாண்மைத் துறையில் நேரடி நியமனம் மூலம் இளநிலை உதவியாளர்-டைப்பிஸ்டாக கடந்த 12.7.2002ல் பணியில் சேர்ந்தேன். பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) நடத்திய தேர்வில் வெற்றி பெற்று உதவி மத்திய நுண்ணறிவு அலுவலராக தேர்வானேன். இதனால், இளநிலை உதவியாளர் பணியை ராஜினாமா செய்தேன். இதன்பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி இரண்டாம் நிலை சார்பதிவாளராக தேர்வானதால் நுண்ணறிவுப் பிரிவு பணியை 2008ல் ராஜினாமா செய்தேன். இதன்பிறகு பதவி உயர்வு பெற்றேன். தற்போது பழங்காநத்தம் சார்பதிவாளராக பணியாற்றுகிறேன்.

இளநிலை உதவியாளராக 2002ல் சேர்ந்து 2005ல் ராஜினாமா செய்தேன். கடந்த 1.4.2003ல் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகமானது. இதன்பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தான் புதிய பென்ஷன் திட்டம் பொருந்தும். ஆனால், 2002ல் நியமனம் பெற்ற எனக்கு புதிய பென்ஷன் திட்டம் பொருந்தாது. எனவே, இந்த காலகட்டத்தை கணக்கிட்டு எனக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மனு அளித்தேன். ஆனால், நான் ராஜினாமா செய்துவிட்டதாக கூறி எனது கோரிக்கையை நிராகரித்து கணக்கு பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, நான் முதலில் பணியில் சேர்ந்ததை கணக்கிட்டு எனக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து, ‘‘அரசு ஊழியர் ஒருவர் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு பணியில் சேர்ந்தவரின் ராஜினாமாவை தொழில்நுட்ப காரணத்தின் அடிப்படையில் ஏற்றாலே அது பென்ஷன் விதிகளில் பொருந்தும். ஏனெனில் வேறொரு பணிக்காக, தற்போதைய பணியை ராஜினாமா செய்வதால் அந்த பணியும் கணக்கிடக்கூடியது தான். தொழில்நுட்ப காரணங்களுக்கான ராஜினாமா பணிவிதிகளுக்கு உட்பட்டது. ராஜினாமா ஏற்கப்பட்டதால் தான் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் பணிக்கு செல்லவில்லை. மற்றொரு அரசு பணியில் தான் சேர்ந்துள்ளார். எனவே, மனுதாரருக்கு பழைய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணப்பலன்கள் கிடைப்பதற்கான திருத்தங்களை பணிபதிவேட்டில் 12 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

The post ஒன்றிய மற்றும் மாநில அரசு பணிகளை ராஜினாமா செய்தவருக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : union ,iCourt ,Madurai ,State Government ,
× RELATED சட்டவிரோத கட்டுமானம் அகற்றும் பணி...