×

இளம்பெண் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விவகாரம் கணவன் எனக்கூறி ஆபரேஷனுக்கு அனுமதி கொடுத்த காதலன் கைது

சேலம்: சேலம் அருகே கணவன் எனக்கூறி இளம்பெண்ணின் கர்ப்பப்பை ஆபரேஷனுக்கு அனுமதி கொடுத்த காதலனான ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபு (39). லாரி டிரைவர். இவரது மனைவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. 2 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது கரு கலைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து ரத்தப்போக்கு அதிகரித்ததால் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அப்போது அரசிராமணி மூலப்பாதையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகரன் (24), கணவர் எனக்கூறி ஆவணத்தில் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கர்ப்பப்பை அறுவை சிகிச்சை முடிந்தது. அந்நேரத்தில் வெளியூர் சென்றிருந்த கணவர் பாபு வீடு திரும்பினார். தனது மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தெரிந்ததும் அங்கு சென்றார். அப்போது கர்ப்பப்பை அகற்றப்பட்டது தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்தார். ‘‘எனக்குத் தெரியாமல், எனது அனுமதி இல்லாமல் எப்படி ஆபரேஷன் செய்யலாம்’’ என டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினார். டாக்டர்களோ, கணவர் குணசேகரன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். நீங்கள் யார்? என கேட்டனர். நான் தான் கணவர் என பாபு தெரிவித்ததால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்படியானால் குணசேகரன் யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது. இவர் அப்பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவிக்கு ஆபரேஷன் செய்ததை கண்டித்து பாபு உள்ளிட்ட உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் ரத்தப்போக்கு அதிகரித்ததால் உடனடியாக பாபு மனைவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கணவன் எனக்கூறி ஆள்மாறாட்டம் செய்ததுடன், பாபுவை மிரட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகரனை (24) கொங்கணாபுரம் போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* கருக்கலைப்பில் பெண் சாவு: அரசு டாக்டர் உள்பட 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி, கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணா (23). 4 வயதில் தாரணி என்ற மகளும், 2 வயதில் ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமணா 3வதாக கர்ப்பமானார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால் கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்து, ஊரில் கிளினிக் நடத்தும் ராமச்சந்திரன் மனைவியான ஓய்வு பெற்ற அரசு டாக்டர் தேன்மொழி (67) என்பவரை அணுகியுள்ளார். தேன்மொழி, நர்ஸ் சக்திதேவி (36), உதவியாளராக பணியாற்றும் வெற்றிச்செல்வி (52) ஆகிய 3 பேரும் சேர்ந்து ரமணாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு 7 மாத கர்ப்பிணியான ரமணா இறந்தார். வயிற்றில் இறந்த நிலையில் இருந்த 7 மாத பெண் சிசு அகற்றப்பட்டது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து டாக்டர் தேன்மொழி, நர்ஸ் சக்தி தேவி, உதவியாளர் வெற்றிச்செல்வி ஆகிய மூவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

The post இளம்பெண் கர்ப்பப்பை அகற்றப்பட்ட விவகாரம் கணவன் எனக்கூறி ஆபரேஷனுக்கு அனுமதி கொடுத்த காதலன் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள...