×

புதுச்சேரி கண்ணன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் புதுவை கண்ணன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். புதுச்சேரி மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைத்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

* தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: புதுச்சேரி மாநில அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்குமிக்க தலைவராக விளங்கி, ஆட்சி பொறுப்பில் பல்வேறு பதவிகளை வகித்த கண்ணன் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். காமராஜரின் தலைமையை ஏற்று புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று மிக சிறப்பாக துடிப்புடன் செயல்பட்டவர். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

* பாமக நிறுவனர் ராமதாஸ்: அமைச்சராக இருந்த காலத்தில் மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய அரசு வேலைகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கியவர். அதனால், அம்மாநில மக்களால் நேசிக்கப்பட்டவர். அரசியல் வேறுபாடுகளை கடந்து என் மீது மரியாதையும், பற்றும் கொண்டிருந்தவர். புதுவையில் பல அரசியல் தலைவர்களை உருவாக்கியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சபாநாயகராக, அமைச்சராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்டவர். அவரது இழப்பு புதுச்சேரி மாநிலத்திற்கும், மக்களுக்கும் பேரிழப்பாகும்.

The post புதுச்சேரி கண்ணன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Kannan ,Chennai ,Tamil Nadu ,Puducherry Speaker ,Governor ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது..!!