×

பிறந்தநாளில் 49 வது சதம் விளாசி அசத்தல்; எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது கவுரவம்:ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி

கொல்கத்தா: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை 243 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 325 ரன் குவித்தது. பின்னர் களம்இறங்கிய தென்ஆப்ரிக்கா 27.1 ஓவரில் 83 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இந்திய பவுலிங்கில் ஜடேஜா 5, ஷமி , குல்தீப் தலா 2விக்கெட் எடுத்தனர். தனது 35வது பிறந்த நாளில் நாட் அவுட்டாக 101 ரன் விளாசிய கோஹ்லி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்துள்ள சச்சினின் (49சதம்) சாதனையை சமன் செய்து ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர்ச்சியாக 8 போட்டியிலும் வென்றுள்ள இந்தியா கடைசி போட்டியில் வரும் தீபாவளி அன்று நெதர்லாந்தை, பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோஹ்லி கூறியதாவது : இது எனக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. ஏனென்றால் இந்த தொடரில் ெத.ஆ. தான் மிகவும் கடினமான போட்டியாளராக உள்ளனர். இதனால் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதுவும் எனது பிறந்த நாளில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை கொடுத்தனர். பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் பேட் செய்ய ஏற்றதாக இல்லை. அணி நிர்வாகம் என்னை கடைசி வரை பேட்டிங் செய்ய கூறியிருந்தது. இந்த பொறுப்பை நான் எடுத்துக் கொண்டு விளையாடினேன். 315 ரன்னை கடந்தவுடன் நல்ல இலக்கை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது.

கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். நான் சந்தோஷமாக இருக்க கடவுள் எனக்கு ஆசிர்வாதம் செய்து இருக்கிறார் என நினைக்கிறேன். எனது சதத்திற்கு சச்சின் வாழ்த்து அனுப்பியதை பார்த்தேன். இந்த தருணத்தில் என்னால் அத்தனையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் நான் ஹீரோவாக பார்த்த நபரின் சாதனையை சமன் செய்திருப்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக நினைக்கிறேன். இது எனக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். ஆனால் சச்சின் போல் என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அந்த ஒப்பீட்டு தவறு என்று தான் நான் சொல்லுவேன். நான் இப்போது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். சச்சினை டிவியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்ததை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன், என்றார்.

தோல்வி மிகப்பெரிய பாடம்: தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், இது சவாலாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நாங்கள் சேசிங்கில் தோற்றோம். சேசிங் பற்றி பேட்ஸ்மேன்களிடம் பேசினோம். இந்தியா முதல் 10 ஓவர்களில் 90 ரன்எடுத்தனர். ஆனால் அதன் பின் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்ரேட்டை கட்டுப்படுத்தினோம். ரோகித் சர்மா நல்ல துவக்கத்தை கொடுத்தார். கோஹ்லி, ஸ்ரேயாஸ் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்த கண்டிஷன் எங்களுக்கு பெரிய பாடமாக இருந்தது. நாங்கள் சந்தேகப்பட்டது போலவே பிட்ச் இருந்தது. நாங்கள் சூழ்நிலைக்கு சரியாக பொருந்தவில்லை. சூழ்நிலைக்கு தகுந்தவாறு திறமைகளை மாற்றிக்கொள்வது முக்கியம், என்றார்.

வெற்றியை தொடருவோம்: வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: கடந்த 3 போட்டியில் எங்கள் ஆட்டத்தை கவனித்தவர்களுக்கு, நாங்கள் சூழலுக்கு ஏற்றபடி விளையாடி இருக்கிறோம் என்று புரியும். இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் அழுத்தத்துடன் விளையாடினோம். போதிய ஸ்கோர் அடித்தபின் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி கொடுத்தனர். இன்று கோஹ்லி சூழலுக்கு ஏற்றபடி கடைசி வரை ஆடும்படி கேட்டுக் கொண்டோம். முகமது ஷமி இப்படியொரு கம்பேக் கொடுத்திருப்பதன் மூலம், அவரின் மனநிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி 2 போட்டியில் ஸ்ரேயாஸ் தனது திறமையை காட்டிவிட்டார். ஜடேஜா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இன்று கடைசி நேரத்தில் களமிறங்கி ரன்களை விளாசியதோடு, விக்கெட்டையும் வீழ்த்தினார். அவர் மீதான எதிர்பார்ப்பு என்னவென்பது அவருக்கு தெரியும். இன்னும் 2 முக்கியமான போட்டி உள்ளது. எனவே நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வராமல் வெற்றியை தொடர விரும்புகிறோம், என்றார்.

மோடி, சச்சின் பாராட்டு;
* தெ.ஆ.வுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிக்கு வாழ்த்துக்கள். இன்று அருமையான இன்னிங்ஸ் ஆடிய விராட் கோஹ்லிக்கு வெற்றிமூலம் சிறப்பான பிறந்தநாள் பரிசையும் வழங்கியுள்ளனர்,என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
* சிறப்பாக விளையாடி இருந்தீர்கள் விராட். 49வது சதத்தில் இருந்து 50வது சதத்தை எட்ட நான் 365 நாட்கள் எடுத்துக் கொண்டேன். ஆனால், அடுத்த சில நாட்களில் 50வது சதத்தை நீங்கள் எட்டுவீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.. என சச்சின் தெரிவித்துள்ளார்.
* ஐசிசி தொடர்களில் கோஹ்லி அதிகமுறை (12)ஆட்டநாயகன் விருதுபெற்று முதலிடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 11, சச்சின், ரோகித்சர்மா, வாட்சன் , ஜெயவர்த்தனே தலா 10முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.
* ஒரே ஆண்டில் 5வது முறையாக 5 மற்றும் அதற்குமேல் கோஹ்லி சதம் அடித்துள்ளார். அடுத்ததாக ரோகித்சர்மா 3 முறை, ஒரே ஆண்டில் 5 பிளஸ் சதம் விளாசி இருக்கிறார்.

The post பிறந்தநாளில் 49 வது சதம் விளாசி அசத்தல்; எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது கவுரவம்:ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Kolkata ,India ,South Africa ,World Cup cricket series ,Dinakaran ,
× RELATED விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது...