×

மீன்பிடி படகுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு; தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!!

தூத்துக்குடி: மீன்பிடி படகுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் மீன்பிடி தொழிலும் ஒன்று. இந்த மீன்பிடி தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, தூத்துக்குடியில் மீன்வளத்துறை இயக்குனர் மோகன்ராஜ், மீனவர்களை பாதிக்கக்கூடிய வகையில் மீன்பிடி படகுகளுக்கு கட்டுப்பாடு விதித்தார். அதாவது, மீன்பிடி படகுகளுக்கு லைசன்ஸ் இருந்தால் தான் மீன்பிடிக்க செல்ல வேண்டும்.

ஒரு படகில் 4 பேர் மட்டுமே மீன்பிடிக்க செல்ல வேண்டும். மீன்பிடி படகுகளுக்கு தனியார் இன்சூரன்ஸ் மூலம் இன்சூரன்ஸ் பெற்றிருக்க வேண்டும். நாட்டு படகு மற்றும் பைபர் படகுகளுக்கு பச்சை வண்ணம் பூசி இருக்க வேண்டும். படகில் பயன்படுத்தப்படும் இன்ஜினுக்கு ஜிஎஸ்டி பில் வைத்திருக்க வேண்டும். மேலும் படகை புதிதாக செய்வதற்கு ஜிஎஸ்டி பில் வைக்க வேண்டும். இவ்வாறு அனைத்து சான்றிதழ்களும் இருந்தால் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடிய மீனவர்களுக்கு கொடுக்கக்கூடிய மானிய விலையிலான டீசல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, மீனவர்களை தரக்குறையவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மீன்பிடி படகுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநரைக் கண்டித்தும் நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. துறைமுகங்களில் செல்வமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீன்பிடி படகுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு; தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin district ,Thoothukudi ,Thoothukudi district ,Tuticorin… ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி தனியார் ஆலையில் திடீர்...