×

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இலங்கை சிறையில் உள்ள 64 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 நாட்களுக்குப்பின் நேற்று காலை பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து படகுகளை கைப்பற்றி வருவதால் நேற்று சுமார் 200 படகுகளே மீன்பிடிக்க சென்றன. நேற்றிரவு, வழக்கம்போல் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை வழிமறித்து மீன் பிடிப்பதை தடுத்து விரட்டியடித்துள்ளனர்.

ஏற்கனவே பல படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு உள்ளதால் சிறைபிடிப்பு நடவடிக்கைக்கு பயந்து அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றனர். இரவு முழுவதும் கடலில் மீன்பிடித்து இன்று காலை கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான மீன்களை கிடைத்தன. பாக் ஜலசந்தி கடலில் கோடியக்கரை பகுதி இந்திய கடல் எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் இந்திய-இலங்கை கடற்படையினரின் சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை கொடி அதிகாரி ரவிகுமார் திங்ரா, இலங்கை வடமத்திய கடற்படை தளபதி அட்மிரல் கே.எஸ். பனகொட உட்பட இரு நாடுகளின் கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டம் முடிந்த இரண்டு நாளில், நடுக்கடலில் மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Nadu ,Rameswaram ,Sri Lankan Navy ,Pak Strait ,Sri Lanka Jail ,Navy ,
× RELATED இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம்...