×

‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடை பயணம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேட்டி

 

கன்னியாகுமரி, நவ.5: நாமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடை பயணம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார். நடைபயிற்சி மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்னும் திட்டம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமன முனை தொடங்கி பரமார்த்தலிங்கபுரம் மின்வாரிய அலுவலகம் வரை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை வழியில் பயண தூர அறிவிப்பு மற்றும் நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதை தொடங்கும் இடத்தில் வாகன நிறுத்துமிடம், கழிவறை வசதி அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், அமர்ந்து ஓய்வெடுக்கும் வசதி ஆகியவை தேவையான இடங்களில் ஏற்படுத்தப்பwட்டுள்ளன.

இந்த திட்டத்தை நேற்று காலை 6 மணிக்கு சூரிய அஸ்தமன முனையிலிருந்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். மழை பெய்துகொண்டிருந்த வேளையிலும் அமைச்சர்கள் நடை பயணத்தில் ஈடுபட்டனர். நடை பயண நிறைவுக்கு பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அதற்கான விழிப்புணர்வை அனைத்து மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டம் மக்கள் நல்வாழ் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

முதல்வராக இருப்பவரே காலை, மாலை, நடைபயிற்சி மேற்கொள்வதினாம் நாமும் அதுபோன்று நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த நடை பயணம் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திமுக மாநில வர்த்தகரணி இணை செயலாளர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புதிய நடை பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

The post ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடை பயணம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது: அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,KR Periya Karuppan ,Kanyakumari ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!